சிற்றிதழ்களை ஏன் படிக்க வேண்டும்..?

visai_wrapper_3604வெகுஜன பத்திரிகைகள் மூலமாகத்தான் எனக்கு சிற்றிதழ்கள் அறிமுகமானது. கல்லூரி படிப்பை முடிக்கும் வரையில் பெயர்களை மட்டுமே அறிந்து  வைத்திருந்தேன்.  தினமணி இதழில் சில நாள் பயிற்சியின் நண்பனாகிப்போன தனபால் சிங், புக்லேண்ட்டுக்கு அழைத்துப்போய் சிற்றிதழ் உலகத்தை காண்பித்தவன். தொடக்க காலங்களில் சிற்றிதழ்கள் படிக்கும்போது என்ன இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று தோன்றியதுண்டு. (ஆரம்பகால சிற்றிதழ் வாசகர் அத்தனை பேருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என நினைக்கிறேன்) பிறகு படிக்கப்படிக்க எண்ணத்தில் தெளிவு வந்தது. நான் பத்திரிகை பணியை ஆரம்பித்தது பெண்கள் பத்திரிகை நிருபராகத்தான். அப்போது என்னுடைய சிற்றிதழ் படிக்கும் பழக்கம் சக ஊழியர்களிடையே கேலிக்குரிய விஷயமாக இருந்தது.  சமையல் குறிப்பு எழுதுவதற்கு எதற்கு இலக்கியம் படிக்க வேண்டும்?  மற்றவர்கள் குறித்து எனக்குத் தெரியாது… என்னுடைய எழுத்தும் சிந்தனையும் மேம்பட்டதற்கு சிற்றிதழ்களின் பங்கு கணிசமானது.

சில வருடங்களுக்கு  முன்பு பல நல்ல படைப்புகளைத் தாங்கி வந்த சிறுபத்திரிகைகள், இன்று இடைநிலை பத்திரிகைகளாக வளர்ந்துள்ளன. வரவேற்கத் தகுந்த மாற்றம்தான் எனினும் இந்த பத்திரிகைகள் சில சமயம், ஆங்கில பதிப்பகங்கள் மாதந்தோறும் வெளியிடும் புக்லெட்டுகளைப் போல இருக்கின்றன். இந்த பத்திரிகையில் இன்னின்னார்தான் எழுதுவார் என ஆரம்ப கட்ட வாசகனுக்கும் புரிந்துவிடும் அளவுக்கு, திரும்பதிரும்ப ஒருசிலரே எழுதுகிறார்.  பத்திரிகைகளே பதிப்பகம் நடத்துவது காரணமாக இருந்தாலும் ஒரே வகையான எழுத்துகளைப் படிக்க அலுப்புத் தட்டுகிறது. சில இதழ்களை படிப்பதையே நிறுத்திவிட்டேன்.

இடைநிலை விட்ட இடத்தை நிரப்பும் விதமாக புதுவிசை, உன்னதம் போன்ற  இதழ்கள் காத்திரமான  பொருட்செறிவுடன் வருகின்றன. தலித்தியம், பெண்ணியம், மொழிபெயர்ப்பு, புதிய எழுத்தாளர்களின் படைப்புகள் என எதிர்பார்ப்புகள் வீண்போகாத அளவுக்கு  விஷயங்களைத் தாங்கி வருகின்றன. இதுபோன்ற இதழ்களுக்கு பொருளாதார பின்புலம் என்று சொல்லிக்கொள்ள பெரிதாக  ஒன்றுமில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.  உன்னதம் இதழைக் கொண்டுவர கெளதமசித்தார்த்தன் நிலங்களை விற்றுவிட்டதாக கேள்வி.  ஆதவன்தீட்சண்யாவும் தன் கைகாசிலேயே செய்கிறார், சில சமயம் நண்பர்கள் உதவக்கூடும். புதுவிசை காலாண்டு இதழாக வந்து கொண்டிருக்கிறது.  உன்னதம் பண இருப்பைப் பொறுத்து…

ந்த இதழ் உன்னதம் (ஏப்ரல் 09)  சாதியும் அரசியலும் சிறப்பு  இதழாக வந்திருக்கிறது. சாதி குறித்த தற்கால இருப்பை அறிந்து   கொள்ள படித்தாகவேண்டிய இதழ்.

unnatham_logo_100உன்னதம்

ஆலந்தூர் அஞ்சல்

கவுந்தப்பாடி-638455

ஈரோடு மாவட்டம்

பேசி-9940786278

புதுவிசை (ஏப்ரல் – ஜூன் 09) நடராசா சுசீந்திரனின் விரிவான நேர்காணலும் கோ.ரகுபதி எழுதிய தலித் மீதான வன்முறையில் இந்துத்துவம் என்ற கட்டுரையும் முக்கியமானவை.

புதுவிசை

பி-2 டெலிகாம் குடியிருப்பு

ஓசூர்-635109

தொலைபேசி: 04344 244933

நண்பர் ஜூலியனுக்கும் தமிழ்மணத்திற்கும்

நண்பர் ஜூலியன், உங்களுக்கு என்மேல் அப்படியன்ன பகையோ தெரியவில்லை…தொடர்ந்து நான் செய்ததற்கு, செய்யாததற்கு நீங்களாக அர்த்தம்  கற்பித்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். நேற்று  உங்களுடைய பதிவிற்கு ஒரு  பின்னூட்டம்  இட்டேன்.

“நண்பரே, என்னுடைய பதிவு நீக்கப்பட்டிருக்கிறது. பின்னூட்டம் போடவும் முடியவில்லை. இதற்கும் எனக்கும்  எந்த தொடர்பும் இல்லை. நடுவில் இரண்டு  நாட்களாக இணைய இணைப்பு வேறு  இல்லை. பின்னூட்டத்தை  அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். ஒரே ஒரு பின்னூட்டத்தை தவிர எனக்கு  வந்த  எல்லா பின்னூட்டங்களையும் தான் அனுமதித்திருக்கிறேன். உங்களுடைய கருத்திலிருந்து வேறுபடுகிறேன் என்பதற்காக என்னை தனிப்பட்ட முறையில் ஏன்  தாக்குகிறீர்கள்?”

இந்த  பின்னூட்டத்தை  நீங்கள் அனுமதிக்கவில்லையா? அல்லது நான்  பின்னூட்டமிட்ட முறை சரியில்லையா? (பிளாக்கரில்  பின்னூட்டமிடுவது சற்றே புரியாமல்  இருக்கிறது) இன்னொன்றும் தெளிவுபடுத்துகிறேன் என் பெயரில்தான்  பின்னூட்டம் இட்டேன்.  அனானி,  புனைபெயரில் எழுதுவது எனக்கு உவப்பாகாத விஷயம்.  அதனாலேயே என் பெயரில் எழுதுகிறேன். யாரோ ஒருவர் பின்னூட்டமிட்டதற்கு நான் பொறுப்பாக முடியாது. என்னுடைய புறச்சூழல் காரணமாகவே என்னால் எல்லா பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்க முடியவில்லை. எனக்கும் ஆனந்த விகடனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்களுடைய பெயரை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம். என்னைத்தான் தாக்குகிறீர்கள் என்றால் தொடர்புள்ளதாகக் கூறிக்கொண்டு அவர்களை ஏன் தாக்குகிறீர்கள்? என்னுடைய பதிவுக்கான எதிர்வினை என்பது போய் முழுக்க முழுக்க என்னைப்பற்றிய தனிப்பட்ட தாக்குதலில் நீங்களும் உங்கள் பதிவுக்கு பின்னூட்டமிடும் சிலரும் இறங்கியிருக்கிறீர்கள். நண்பர்களே நீங்கள் நினைப்பதுபோல் எவ்வித பக்கபலமும் எனக்கில்லை. தயவு செய்து உங்களுடைய அர்த்தமற்ற தாக்குதல்களை நிறுத்துங்கள். மாற்றுக்கருத்துக்களை நான் விரும்புகிறேன், வரவேற்கிறேன்.

தமிழ்மணத்திற்கு,உங்களுடைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே என்னுடைய பதிவை நீக்கியிருக்கிறீர்கள் என்று நினைத்துத்தான் அப்படி எழுதினேன். கோபத்துடனோ வருத்தத்துடனோ எழுதவில்லை. உங்களுடைய முடிவுகளுக்கு கட்டுப்படுகிறேன் என்ற அடிப்படையில் எழுதப்பட்டது. நீங்கள் நீக்கவில்லை எனில் தமிழ்மணம் நீக்கியதுஎன்று எழுதியதற்காக மன்னிப்புக்கேட்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நட்சத்திர அழைப்பை ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றுக்கும் நானேதான் பொறுப்பாக முடியும். உங்கள் மீது எந்த அவதூறையும் எழுதும் எண்ணம் இல்லை. ஏனெனில் தமிழ்மணத்தின் மூலம் அடைந்த அறிதல் ரீதியாக பலன்கள் நிறைய. பின்னூட்டமிடும் அனானி நண்பர்களுக்கு,

நீ எனக்கு இதை செய்துவிட்டாயா.. உன்னை எழுதிக்கிழிக்கிறேன் பார்!’ என்று மிரட்டிப் பிழைக்கும் பத்திரிகையாளர் அல்ல நான். அது என்னை அறிந்த அனைவருக்கும் தெரியும். குற்றம் சொல்வதனாலும் பொருத்தமாக சொல்லுங்கள்.

இறுதியாக… நன்றி!

நான் வலைத்தளத்தில் எழுத  ஆரம்பித்தது எனக்காக மட்டுமே. எந்வொரு  ஊடகத்திலும் குறிப்பிட்ட அந்த ஊடகத்தின் கருத்துக்கும் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டே எழுத வேண்டி இருக்கிறது. அது இங்கே இருக்காது என்பதாலேயே தொடர்ந்தேன். தமிழ்மணமும் ஒரு ஊடக நிறுவனமே என்பது எனக்கு இப்போதுதான் தெரிந்தது. குறைந்தபட்சம் முன் அறிவிப்பை கொடுத்துவிட்டாவது என்னுடைய பதிவை நீக்கியிருக்கலாம். எனினும் என்னை நட்சத்திர  பதிவராக  தேர்ந்தெடுத்தமைக்கு  நான்  நிறைவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மன்னிப்பு கோருகிறேன்…

நட்சத்திர பதிவராக குறைந்தபட்சம் தினம் ஒரு பதிவாவது எழுத வேண்டும் திட்டமிட்டிருந்தேன். புறச்சூழல் பிரச்சினைகள் ஒன்று மாற்றி ஒன்றாகக்கூடிக்கொண்டே இருக்கின்றன. நான் குடியிருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் இந்த நேரத்தில்தான் வீட்டுக்கு வண்ணம் பூச தோன்றியிருக்கிறது. குப்பைகளுக்கு நடுவே வாழ்வதுபோல இருக்கிறது இரண்டு வாரங்களாக. வீட்டில் உள்ள நாங்கள் சீக்காலிகளாகியும் உரிமையாளர் மனமிறங்கி வேலைகளை தூரிதப்படுத்தாமல் இருக்கிறார். நடுவே தோழியின் திருமணத்திற்காக சுற்றியது… எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு நாட்களாக இணைய இணைப்பு தூண்டிக்கப்பட்டிருக்கிறது.நாளைக்காவது பிரச்சினையை சரிசெய்து விடுவார்கள் என நினைத்து,இப்போது இன்டர் நெட் சென்டரிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னிடமிருந்து புதிய பதிவுகளை எதிர்பார்த்திருந்த, எதிர்பார்க்கும் நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.