ஹாங்காங் போராட்டமும் காஷ்மீர் போராட்டமும் ஒன்றா?

ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டங்கள் என்றாலே பதறும் மேற்கத்திய ஊடகங்கள், ஹாங்காங் போராட்டங்களை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. சீன ஊடகங்கள் போராட்டச் செய்திகளை முற்றிலுமாக தவிர்த்துவருகின்றன.

கிட்டத்தட்ட ஹாங்காங் போராட்டங்கள் வலுக்க ஆரம்பித்த இதே காலக்கட்டத்தில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியது இந்திய அரசாங்கம். காஷ்மீர் முடக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து காஷ்மீரிகளின் உரிமைகளின் பேரில் அக்கறையுள்ள இந்திய அமைப்புகள் போராடினர்.

காஷ்மீர் இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் தனக்கென தனித்த ஆட்சிமுறையைக் கொண்ட பிராந்தியம் என்பதே உண்மை. ஆனால், பல பத்தாண்டுகளாக காஷ்மீரில் நடக்கும் போராட்டங்கள், அண்டை நாடுகளால் தூண்டிவிடப்படுபவை என்றும், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்றும் பொதுக்கருத்து இந்தியர்களிடம் உருவாக்கப்பட்டது. இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் பெரும்பாலான இந்திய ஊடகங்கள் காஷ்மீர் பிரச்சினையை அணுகுகின்றன.

இந்தப் பின்னணியில் அண்மையில் ‘இடதுசாரிகளுக்கு இலவச ஆலோசனை’ வழங்கிய பிரபல நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரை ஒன்று, ‘இடதுசாரிகள், காஷ்மீரிகளின் போராட்டத்துக்கு ஆதரவளித்துக் கொண்டு, ஹாங்காங் போராட்டத்தை எதிர்க்கும் சீனாவுக்கு ஆதரவளிக்கிறார்கள்’ என எழுதப்பட்டிருந்தது.

பெரும்பாலும் மேற்கத்திய அரசு சார்பான செய்தி ஏஜென்ஸிகள் தரும் செய்திகளை அப்படியே போடுவது என்பதே இந்திய வெகுஜென ஊடகங்களின் இயல்பு. மேற்கத்திய அரசுகளின் சொந்த நலன்களின் அடிப்படையிலேயே உலகில் என்ன பிரச்சினை நடந்தாலும் இந்த செய்தி ஏஜென்ஸிகள் செய்தி தரும்.

‘சுதந்திரத்தன்மை’ என மேற்பூச்சாக சொல்லிக்கொண்டாலும் செய்தி முகமைகளின் செய்திகள் அரசுகளின் நிலைப்பாடுகளை பிரதிபலிப்பவையே. இத்தகை ஊடக சூழலில் திறனாய்வு தன்மையில்லாத ஊடகர்கள் அவர்கள் தரும் செய்தியை அப்படியே நம்புகிறார்கள். அதன் அடிப்படையில்தான் காஷ்மீரிகளின் போராட்டமும் ஹாங்காங் வாசிகளின் போராட்டமும் ஒன்று என்கிற கருத்துருவாக்கம் வருகிறது.

பின்னணிகளை ஆராய்வோம்:

காஷ்மீருக்கும் ஹாங்காங்கும் முக்கியமான ஒற்றுமை ஒன்றுள்ளது; அது போராட்டத்தை மையப்படுத்தியது அல்ல. இரண்டு பிராந்தியங்களையும் தனது காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது பிரிட்டீஷ். சுரண்டி கொழுத்தபின், இந்தப் பிராந்தியங்களை விட்டு வெளியேறி பிரிட்டீஷ், பெரும் குழப்ப நிலையை அங்கே உருவாக்கிவிட்டே சென்றது.

1947-ஆம் ஆண்டு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கலாமா வேண்டாமா என்பதில் உறுதித்தன்மையற்ற நிலையில், அப்படியே விட்டுப் போனது ஆங்கில அரசு. இந்தியாவுடன் இணைவதில் காஷ்மீரிகள் அப்போதிலிருந்து போர்க்கொடி தூக்கி வந்தனர். ‘சிறப்பு அந்தஸ்து’ என்ற பெயரில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஜம்மு காஷ்மீரை நிர்வகித்து வந்தது இந்திய அரசாங்கம். ஆனால், காஷ்மீரில் 70 ஆண்டு காலமாக சுதந்திரம் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பேர்ல் ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் அமைந்துள்ளது ஹாங்காங் பிராந்தியம். இதை 1997-ஆம் ஆண்டில் ‘ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்’ என்ற கொள்கையின் அடிப்படையில் சீனாவிடம் ஒப்படைத்தது பிரிட்டீஷ் அரசு. சீன நாட்டின் நிர்வாக முறையோ, பொருளாதார அமைப்போ இங்கே செயல்படுத்தப்படாது; ஹாங்காங் தனி நிர்வாகமாக, தனித்த பொருளாதார அமைப்புடன் செயல்படும் என்பதே அந்த கொள்கை.

ஹாங்காங் உலகின் மிகப்பெரிய அளவிலான ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் துறைமுகங்களைக் கொண்ட பிராந்தியம். காலனி ஆதிக்கத்தில் இருந்தபோதே ஹாங்காங் பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான மைல்கற்களை எட்டியது. இப்போது உலகின் அதிகமான பெரும் பணக்காரர்களைக் கொண்ட பிராந்தியமாகவும், அதிக உயர்விலான தனிநபர் வருமானம் உள்ள நகரமாகவும் ஹாங்காங் உள்ளது. அதே சமயத்தில் வருமான சமத்துவத்திம் மிகமோசமான நிலையில் உள்ளது.

ஹாங்காங் வாசிகள் ஏன் போராடுகிறார்கள்?

வானுயர்ந்த கட்டடங்களும் உலகின் பெருநிறுவனங்களின் தலைமையிடங்களும் நிறைந்த இந்த பிராந்தியத்தில் சுதந்திரத்துக்கான போராட்டம் என்பது பெருமுதலாளித்துவத்தை எதிர்த்தாகத்தான் இருக்க முடியும். போராட்டங்களின் போது எழுப்பப்படும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான முழக்கங்களே இதை விளக்கப்போதுமானவை.

ஆனால், இது முற்றிலுமாக சீன அரசாங்கத்திடமிருந்து ஹாங்கங் பிராந்தியத்துக்கு விடுதலை கோரும் போராட்டமாகவே மேற்கத்திய ஊடகங்கள் எழுதுகின்றன. அனைத்து அரசாங்கங்களுக்கும் இருப்பதுபோல, தங்களுக்குக் கீழ் உள்ள பிராந்தியத்தை சீனாவும் ஒடுக்க நினைக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அரசுக்கு எதிராகப் போராடுபவர்களை கைது செய்து சீனாவில் விசாரிக்கும் சட்டத்தை சீனாவின் அறிவுறுத்தலின் பேரில் அமலாக்க முயன்றது ஹாங்காங் அரசாங்கம்.

பிரிட்டீஷ் ஹாங்காங்கை கையளித்தபோது, 50 ஆண்டுகளுக்கு ஹாங்காங்கின் சுதந்திர தன்மைக்கு எந்தவித பாதகமும் வந்துவிடக்கூடாது என்பதற்கு சீன ஒப்புக்கொண்டது. அதை மீறும் வகையில் இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளதை எதிர்த்துதான் ஹாங்காங் வாசிகள் போராட்டத்தைக் கையில் எடுத்தனர்.

போராட்டங்களை ஊக்குவிக்கும் மேற்குலகம்!

போராட்டங்கள் வலுத்த நிலையில், அந்தச் சட்டத்தை அமலாக்கப்போவதில்லை என ஹாங்காங் நிர்வாகம் தெரிவித்துவிட்டது. ஆனாலும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. போராடுகிறவர்களில் பெரும்பாலோனோர் பணி வாய்ப்பு கிடைக்கப்பெறாதவர்கள். ஒருபக்கம் தனிநபர் உயர்ந்துகொண்டே போகும் வருமானமும் இன்னொரு பக்கமும் குறைவாக ஊதியம் பெறுவது அதிகரித்து வரும் சூழலில் ஹாங்காங் போன்ற முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி கொண்ட பிராந்தியத்தில் போராட்டங்கள் எத்தகைய அழுத்தத்தின் பேரில் உருவாகின்றன என்பதையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

இந்தப் போராட்டங்களை வெறுமனே, ஹாங்காங்கின் தனி சுதந்திரத்தைக் காக்கும் போராட்டங்கள் என மேற்கத்திய ஊடகங்கள் எழுதி போராட்டங்களை ஊக்கிவிப்பதற்கும் காரணம் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக சீனா முழுமையடைய இருக்கும் நிலையில், ஹாங்காங் பிராந்தியத்தை சீனாவிடமிருந்து பிரித்து, தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர மேற்கத்திய வளர்ந்த நாடுகள் முயற்சிக்கின்றன என்ற கருத்தில் உண்மையில்லாமல் இல்லை.

ஏன் காஷ்மீர் – ஹாங்காங் போராட்டங்கள் வெவ்வேறானவை?

சந்தேகத்துக்கு இடமின்றி காஷ்மீர் மக்களின் விடுதலைக்கான போராட்டமும் ஹாங்காங் வாசிகளின் இருக்கும் தனித்துவத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான போராட்டமும் வெவ்வேறானவை. பொருளாதாரம் உள்ளிட்ட துணைக்காரணங்களும் வெவ்வேறானவை.

காஷ்மீர் மக்கள் நீண்ட நெடும் காலமாக இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார்கள். அங்கே கொல்லப்பட்ட மக்களும் அங்கே சிதைக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் ஹாங்காங் மக்களுடன் ஒப்பிட முடியாதவை.

காஷ்மீரைப் போன்று, தனித்துவமான சமூகங்களைச் சேர்ந்த மக்களையோ, ஒரு மதப்பிரிவைச் சேர்ந்தவர்களையோ கொண்டதல்ல ஹாங்காங். அங்கே பெரும்பான்மையினர் சீனர்களே. அதுபோல, பொருளாதாரத்தில், வாழ்வாதாரத்தில் சிறந்த நிலை ஹாங்காங்கில் உள்ளது. காஷ்மீரில் அப்படிப்பட்ட சூழலே கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கப்படவில்லை.

மேலும், ஹாங்காங்கை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நிலையில், அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் நிலையில் சீனா இல்லை. இந்திய அரசாங்கத்தைப் போல ஒற்றை தேசியம், பெரும்பான்மையின மத அடிப்படையிலான ஒரு தேசத்தை உருவாக்கும் கொள்கை சீனாவுக்கு இல்லை என்றே இந்தச் சூழலை நோக்கிவரும் பல திறனாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஹாங்காங் போராட்டங்களை தொடக்கத்தில் கடுமையான ஒடுக்கும் நிலையில் பார்த்துவந்த சீன அரசாங்கம், தற்போது தனது குரலை மென்மையாக்கிக்கொண்டு பேசுகிறது. ஒட்டுமொத்தத்தில் சீனா தனது பொருளாதார நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறது.

இந்தியாவோ 70 ஆண்டுகளாக ஒடுக்கியதோடு மட்டுமல்லாமல், காஷ்மீருக்கு இருந்த சிறப்புரிமையையும் பறித்துக்கொண்டு 100 நாட்களுக்கும் மேலாக அம்மக்களை முடக்கி வைத்துக்கொண்டிருக்கிறது. இப்போது சொல்லுங்கள்… ஹாங்காங் போராட்டமும் காஷ்மீர் போராட்டமும் ஒன்றா?