அம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி!

“உன் காதலின் ஒரு துளி கலந்திருந்தது
எனவே, நான் வாழ்க்கையின் முழு கசப்பையும் குடித்தேன்”

இந்திய இலக்கியத்தில் காதலைக் கொண்டாடிய, எழுதித் தீர்த்த ஒரு பெண் கவி உண்டென்றால் அது அம்ரிதா ப்ரீதமாக மட்டுமே இருக்க முடியும். அவருடைய கவிதைகளில் காதலின் உள்ளொளி இருந்தது. அதனால்தான் காலம்கடந்தும் அவருடைய கவிதைகள் நேற்று படைத்தது போல உள்ளன.

நவீன எழுத்தில் பஞ்சாபி மொழிக்கு மகுடத்தை சூடிச் சென்ற அம்ரிதா, பிரிவினைக்கு முந்தைய பஞ்சாபின் குஜ்ரன்வாலா என்ற ஊரில் பிறந்தவர் . அவருடைய தந்தை கர்தார் சிங் கவிஞர், சீக்கிய மத பிரச்சாரகராகவும் இருந்தவர். தாய் ராஜ் பீபி பள்ளி ஆசிரியராக இருந்தவர். தன்னுடைய 11 வயதில் தாயை பறிகொடுத்த அம்ரிதாவும் அவருடைய தந்தையும் லாகூருக்கு குடிபெயர்ந்தனர்.

‘ரெவின்யூ ஸ்டாம்ப்’ என்ற தன்னுடைய சுயசரிதையில், தாயைக் காப்பாற்றாத கடவுளை இனி வணங்கப் போவதில்லை என ஆன்மீகவாதியான தனது தந்தையுடன் வாக்குவாதம் செய்ததை பதிவு செய்துள்ளார். தன்னுடைய பதின்பருவத்தில் தாய் இருந்திருந்தால் தன்னுடைய நிலை வேறுமாதிரியாக இருந்திருக்கும் என வருந்துகிற அவர், வீட்டுக்குள் முடக்கப்பட்ட தன்னை வேறு உலகத்தை சிருஷ்டிக்க வைத்தது எழுத்து மட்டுமே என்கிறார்.

தனிமையை எழுதிக் கடக்க முனைந்த அவர், தன்னுடைய 13 வயதில் முதல் கவிதை தொகுப்பான ‘அம்ரித் லெக்ரானை’ வெளியிட்டார். ஆன்மீக பாடல் நடையில் எழுதப்பட்டிருந்தது இது. அடுத்து 16 வயதில் வெளியான ‘தண்டியான் கிரண்’ என்ற கவிதை நூல் மூலம் பஞ்சாபின் முதல் புதுக்கவிதை படைத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

அதே வயதில் சிறுவயதில் நிச்சயக்கட்ட ப்ரீதம் சிங்கை மணந்தார். அதன்பின் ‘அம்ரிதா ப்ரீதம்’ என்கிற பெயரில் எழுத ஆரம்பித்தார். கட்டாயத்தின் பேரில் சேர்த்துக்கொண்டாரா அல்லது காதலுடன் சேர்த்துக்கொண்டாரா என்பது தெரியாது. ஆனால், அந்தப் பெயர் நிலைத்து இந்திய இலக்கிய உலகில் இறவாப் புகழ் பெற்றுவிட்டது!

அம்ரிதா ப்ரீதமின் ஆரம்பகால கவிதைகள் காதலால் நிரம்பியவை. அதன்பின் முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்துடன் உண்டான அறிமுகத்தால் சமூக பிரச்சினைகள் குறித்து எழுதத் தொடங்கினார். 1943-ஆம் ஆண்டின் வங்க பஞ்சத்தை ஒட்டி எழுதப்பட்ட ‘மக்களின் கோபம்’ என்ற கவிதை தொகுப்பும் பிரபலமானது.

பாகிஸ்தானின் இடதுசாரி இதழ்களில் எழுதிய அம்ரிதா, லாகூரில் இருந்த வனொலி நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். லாகூரின் இலக்கிய வட்டத்தோடு தொடர்பில் இருந்தார். ஒரு பெண் கவிதைகள் எழுதுவது, முற்போக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பது இப்போதும்கூட விமர்சனத்துக்குரியதாகவே உள்ளது. அம்ரிதாவின் காலத்திலும் அது இருந்திருக்கிறது.

இலக்கிய வட்டாரத்தில் தன்னைச் சுற்றி புனையப்பட்ட ‘காதல்’கள் குறித்து அம்ரிதா தன்னுடைய சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார். லாகூரில் மட்டுமல்ல, டெல்லி வந்த பிறகு இங்கேயும் கூட அத்தகைய ‘கிசுகிசுக்கள்’ தன்னைச் சுற்றி கிளம்பியதையும் அவர் கூறுகிறார்.

பத்து லட்சம் பேருக்கும் மேலாக பலிவாங்கிய இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் நேரடி சாட்சியமாக இருந்தவர்களில் அம்ரிதாவும் ஒருவர். 1948-ஆம் ஆண்டு தன்னுடைய 28 வயதில் பாகிஸ்தானின் லாகூரிலிருந்து டேராடூனுக்கு ரயிலில் வந்தபோது புகழ்பெற்ற பஞ்சாபி சூஃபி கவிஞரான வாரீஸ் ஷாவுக்கு எழுதுவதாக பிரிவினையின் துயரங்களை கவிதையாகப் பகிர்ந்துகொண்டார்.

பிரிவினை குறித்த எழுத்தப்பட்ட முதல் கவிதை இது. இதை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங், “அவர் உருவாக்கிய அந்த சில வரிகள் அவரை இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இறவாப் புகழ் பெற்றவராக்கிவிட்டன”என எழுதினார்.

1984-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சீக்கிய படுகொலை வழக்கின் சமீபத்திய தீர்ப்பொன்றில் அம்ரிதாவின் இந்தக் கவிதையை மேற்கோள் காட்டியிருந்தார் நீதிபதி…

“வெறுப்பின் விதைகள் வேகமாக வளர்ந்துவிட்டன; எங்கு நோக்கினும் ரத்தத்துளிகள்
நஞ்சு பாய்ந்த தென்றல் காட்டில் உள்ள மூங்கில் குழல்களை பாம்புகளாக மாற்றிவிட்டன
அவைகளின் நஞ்சு, ஒளியும் வண்ணமும் மிக்க பஞ்சாபை நீலமாக மாற்றிவிட்டன”

வெறுப்பின் அரசியல் அரங்கேறும் இன்றைய இந்திய சூழலுக்குப் பொருந்தும்படியாகவும் உள்ளது இந்தக் கவிதை. இந்திய-பாகிஸ்தான் பிரிவினை, சீக்கிய கலவரம் அல்லது வெறுப்பரசியலால் தூண்டப்படும் கும்பல் கொலைகளுக்கும்கூட அம்ரீதாவின் கவிதை பொருந்திப் போகிறது. வன்முறை என்னும் நச்சின் பாதிப்பை உள்ளுணர்ந்து கவிதையாகப் படைத்துவிட்டார் அவர். அது காலம் கடந்து நிற்கிறது.

இந்தியா-பாக் பிரிவினையை ஒட்டி எழுதப்பட்ட ‘பிஞ்சர்’(எலும்புக்கூடு) என்ற நாவலும் பிரபலமானது. பின்னாலில் இது இந்தியில் திரைப்படமாகவும் ஆக்கப்பட்டது.

டெல்லியில் வந்த பிறகு அனைத்திந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றினார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார். தனது இருபத்தைந்து ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். தனது மணவாழ்க்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய கட்டாயம் இருந்தது. இருவரும் பேசி இயல்பாகவே பிரிந்தோம் என்கிறார்.

அவருடைய திருமண வாழ்க்கையில் காதல் இருந்ததில்லை. அந்தக் காதலை அம்ரிதா தேடிக்கொண்டே இருந்தார். சாஹிர் லூதியானி என்ற பிரபல கவிஞருடன் அவருக்கு ஆழமான காதல் இருந்தது.

‘சாஹிர் என்னுடைய சாத்தார்
நான் அவருடைய சிமோன்’ என எழுதினார் அம்ரிதா.

‘உன் மரத்தின் கிளையை நான் கண்டபோது
என் உடைந்த இதயத்தின் பறவை அங்கே நிரந்தமாக தங்கிவிட்டது’ சாஹிர் உடனான காதல் குறித்து எழுதிய கவிதை இது. ஆனால், அது ஒரு ‘கோரப்படாத காதலாக’வே எஞ்சிவிட்டது. சாஹிருக்கு அம்ரிதாவின் காதலை ஏற்றுக்கொள்ளும் துணிவில்லை.

‘நான் முழுமனதாக உன்னை காதலிக்கிறேன்
நீங்கள் அந்த அளவுக்கு என்னை காதலிக்கிறீர்களா?’ என வினவினார். அந்தக் காதல் முறிந்தது.

‘இது ஆத்மாவால் உணரப்பட வேண்டிய ஒரு உணர்வு
காதல் காதல் என்ற பெயரிலேயே இருக்கட்டும்
அதற்கொரு பெயர் கொடுத்து மாசாக்கிவிடவேண்டாம்’ அவர் துயரப்படவில்லை. மாறாக, சாஹிருடனான காதலைக் கொண்டாடினார்.

அதன்பின், ஓவியரும் கவிஞருமான இந்திரஜித் இம்ரோசுடன் காதல் கொண்டு, தன்னுடை இறுதி காலம் வரை அவருடை வாழ்ந்தார். டெல்லி வந்த தொடக்க காலத்திலிருந்தே அம்ரிதாவின் நண்பராக இருந்தவர் இம்ரோஸ். இவருக்காக இறுதியாக எழுதப்பட்ட ‘மீண்டும் உன்னை சந்திப்பேன்’ என்ற காதல் கவிதையும் புகழ்பெற்றது.

காதால் நிரம்பிய கவிதை உலகத்தைப் படைத்த அவர், தன்னுடைய சிறுகதைகளில் பெண்களின் அக உலகைப் படைத்தார். ‘காட்டுப் பூ’ அப்படியான ஒரு சிறுகதை. பிற்போக்குத்தனங்களோடு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு நகரத்தில் ஒருவனுக்கு இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து வைக்கப்படும் ஒரு பெண் காதல் வயப்படுவதே கதையின் மையக்கரு. ஒரு ஆண் எழுதியிருந்தால் அது ஆபாசமான உறவு மீறல் கதையாகியிருக்கும். அம்ரிதா அதை பூப் போல படைத்திருக்கிறார்.

தன்னுடைய எழுத்தை பெண் எழுத்து என வகைப்படுத்துவதில் அவருக்கு விருப்பம் இருந்ததில்லை. சுயசரிதையில் அப்படித்தான் குறிப்பிடுகிறார். நேர்காணல் ஒன்றில், “ஒரு ஆண், பெண்ணின் ஆற்றலை நிராகரிக்கிறார் எனில், அவர் தன்னுடைய உள்ளுணர்வை நிராகரிக்கிறார் என பொருள். ஆணின் வெளிப்புறம் ஆண் தன்மையுடையது உள்புறம் பெண் தன்மையுடையது. இரண்டும் சேர்ந்ததுதான் மனித இனத்தின் அடிப்படை” என விளக்குகிறார் அதை.

2005-ஆம் ஆண்டு தன்னுடைய 86 வயதில் முதுமை காரணமாக காலமானார் அம்ரிதா. அவருடைய எழுத்து இறவாப் புகழோடு வாழ்ந்துகொண்டிருக்கிறது.

‘நான் உன்னை மீண்டும் சந்திப்பேன்
எப்படி எங்கே என்று
எனக்குத் தெரியாது
ஒருவேளை உன் கற்பனையின்
ஒரு பகுதியாக இருப்பேன்
உன் சித்திரத்திரையில்
மர்மமான கோடாக என்னைப் பரப்பிக்கொண்டு
உன்னை உற்று நோக்கிக்கொண்டிருப்பேன்’ என சொல்லிச் சென்றதுபோல…

அம்ரிதா ப்ரீதம் நூற்றாண்டை ஒட்டி, தி இந்து தமிழின் இணைப்பான பெண் இன்று-வில் வெளியான கட்டுரை.

2 thoughts on “அம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி!

  1. மிகவும் சிறப்பாக உள்ளது. காதலை இடைவிடாது காதலிப்பவர்களுக்குப் புரியும்….
    அதன் ஆழம்…!!

    அம்ரிதா ப்ரீதம் என்ற அருமையான கவிஞரை அறியத் தந்தமைக்கு நன்றி!!

    வாழ்த்துகள்!

    அன்புடன்,
    சு மதி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.