30 ஆயிரம் ரூபாய்க்கு கிட்னி:வறுமையை காசாக்கும் மருத்துவ வியாபாரிகள்!

கிட்னி மோசடி பற்றி மீடியாக்களில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை செய்தி வந்துகொண்டு இருக்கிறது…ஆனாலும் சில இடங்களில் இது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

வறுமையை வியாபாரமாக்கும் நவீன கொள்ளையாக உருமாறி இருக்கிறது கிட்னி மோசடி வறுமையைத் தவிர வேறு எதையும் அடையாளமாக சொல்ல முடியாத இந்தப் பகுதிக்கு இன்னொரு அடையாளமும் இருக்கிறது. கிட்னிவாக்கம் என்பதுதான் அந்த அடையாளம். கடந்த 20 வருடங்களாக நடந்துவறுகிற கிட்னி வியாபாரமே இந்தப் பேர் வரக்காரணம்.

‘இப்போ போனா கூட கிட்னி வாங்க முடியும்’ என்று சொல்கிற அளவுக்கு இந்தப் பகுதியில் கிட்னி வியாபாரம் நடப்பதாக சொல்கிறார்கள்..
சென்னையின் பகட்டான பகுதியான அண்ணாநகரை ஒட்டி அமைந்திருக்கிறது வில்லிவாக்கத்தில் உள்ள அந்தக் குறிப்பிட்ட பகுதி…தள்ளுவண்டி பழ வியாபாரம், காய்கறிகளை தலையில் சுமந்து வீடு வீடாகச் சென்று விற்பது, கட்டட வேலைகளில் மண் சுமப்பது, இப்படிப்பட்ட வேலைகள்தான் இங்கே வாழும் பலருக்கு அன்றாடம் சோறுபோடுகிறது. சம்பாதிப்பதெல்லாம் அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே போய்விடும் நிலையில் பண்டிகை, திருமணம் போன்ற வீட்டு விசேஷங்களுக்கு மற்றவர்களிடம் கை நீட்டும் நிலை ஏற்படுகிறது. அஞ்சு வட்டி, பத்து வட்டி, மீட்டர் வட்டி என பல பெயர்களில் கடன் வாங்க, அன்றாடச் செலவுகளுக்கே அல்லல்படுவர்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் கடன் பூதாகரமாகப் பெருகி நிற்கிறது. இந்தப்பகுதி மக்களின் பொதுவான வாழ்க்கை நிலையே இதுதான். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த சிலர் அறிமுகப்படுத்தியதுதான் கிட்னி வியாபாரம்!
தங்கள் உடலின் அத்தியாவசியமான ஒரு உறுப்பை, முடியை வெட்டி தூக்கி எறிவதைப்போல கொடுத்துவிட்டு. பிறகு அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும் இன்னும் சிலரின் அவல நிலைமை இதோ…
கட்டட வேலை செய்துகொண்டிருந்த தாட்சாயினிக்கு எதிர்காலம் குறித்து நிறையவே கவலை.குடிகாரக் கணவனவால் குடும்பத்திற்கு எந்தவித உதவியும் இல்லாத நிலையில், தன் ஒரே மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ என்று கலங்கிக் கொண்டிருந்தார் தாட்சாயினி…

தாட்சாயினியின் கலக்கம் கிட்னி புரோக்கர்களின் கவனத்துக்கு வர, வறுமையும் புரோக்கர்களின் மூளைச் சலவை வார்த்தைகளில் விழுந்து வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்காக தனது கிட்னியை விற்றிருக்கிறார். வந்ததை வைத்து மகளின் திருமணத்தை முடித்த தாட்சாயினியின் வாழ்க்கை இப்போது கேள்விக்குறியில். கட்டடத் தொழிலாளியாக செங்கல் சுமந்தவரால் வீட்டு வேலைகள்கூட செய்ய முடியாத நிலை.

வீடு வீடாகச் சென்று பூ வியாபாரம் செய்வதுதான் பிரபாவின் தொழில்.கணவர் ஆட்டோ ஓட்டுநர்… எதிர்பாராத விபத்தில் சிக்கியதில் காலில் அடிபட்டு அதுவும் போனது. இரண்டு குழந்தைகள், கணவன், மனைவி என நான்கு பேருடைய ஜீவனமும் ஓட பூ வியாபாரத்தில் வரும் வருமானம்தான் ஒரே வழி.கணவரின் மருத்துவ செலவும் குழந்தைகளின் படிப்புச் செலவுகளும் கடனாக வளர்ந்து நிற்க.செய்வதறியாது புலம்பி நின்றார் பிரபா.ஒரு கட்டத்துக்கு மேல் கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெறிக்க ஆரம்பிக்க.பிரபாவுக்கு உதயமானது கிட்னியை விற்கும் யோசனை.ஏற்கனவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கிட்னி விற்றிருந்ததால் இன்னும் வேலை சுலபமாகப் போய்விட்டது.

கிட்னி ஆபரேஷனுக்கு முன் 2 லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னவர்கள் இறுதியில் கொடுத்தது என்னவோ 80 ஆயிரம் ரூபாய்தான்.கடனுக்கு வட்டிக் கட்டவே அந்தப் பணம் சரியாக இருந்தது என்கிற பிரபா, தன் முடிவை எண்ணி இப்போது கலங்குகிறார்.

கிட்னி தானம் குறித்த மருத்துவ சட்டத்தில் உள்ள அத்தனை ஓட்டைகளையும் பயன்படுத்தி கிட்னி பெற்றவர்கள் அதற்குப் பிறகு பிரபாவை கண்டுகொள்ளவே இல்லை.கிட்னி தானம் வழங்கியவருக்கு 3 மாத கால இடைவெளியில் செய்யப்பட வேண்டிய மருத்துவ பரிசோதனை ஒரு முறைகூட பிரபாவுக்கு செய்யப்படவில்லை.
கிட்னி வழங்குவதில் உள்ள மருத்துவ நெறிமுறைகள், சட்டங்கள் எதுவும் இவர்கள் விஷயத்தில் பின்பற்றப்படுவதில்லை.தாங்கள் ஏமாற்றப்படுவது தெரிந்தும் ஏமாற்றியவர்கள் மீது புகார் கொடுக்கவோ சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவோ பாதிக்கப்பட்டவர்கள் முன்வருவதில்லை. இவர்களை மூலதனமாக்கி தங்களுடைய பைகளை இடைத்தரகர்களும் மருத்துவமனைகளும் நிரப்பிக் கொள்வது தொடர்கதையாகிறது. கிட்னி மோசடி பல காலமாக இந்தப் பகுதியில் நடந்துவந்தபோதும் அதைப்பற்றி எந்தவொரு முன்யோசனையும் இன்றி கிட்னி கொடுத்திருக்கிறார் சேகர்..

கிட்னி விற்ற பணத்தை சதா குடித்து குடித்தே கரைத்திருக்கிறார் சேகர். குடித்தால் இருக்கும் ஒரு கிட்னியும் இல்லாமல் போய்விடும் என்று மனைவி எடுத்துச் சொல்லியும் சேகர் காதில் வாங்கவில்லை.இவரை நம்பி தன் வாழ்க்கை ஒப்புக் கொடுத்த மனைவியும் குழந்தைகளும் இப்போது திசை தெரியாமல் நிற்கிறார்கள்.

கிட்னி தானம் பெறுவதில், கொடுப்பதில் நிறையவே கட்டுப்பாடுகள் உள்ளன. சட்டப்படி ரத்த உறவுக்குள்ளும் அன்பின் காரணமாக நண்பர்களுக்கும் கிட்னி பறிமாற்றம் செய்யலாம். இவை மீறப்படும்போதுதான் கிட்னி தானம் கிட்னி மோசடியாக கருதப்படுகிறது. கிட்னி கொடுத்த தாட்சாயினி, பிரபா, சேகர் ஆகியோர் இந்த வகையில்தான் சேர்த்தி. இவர்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் கிட்னி மோசடியில் ஈடுபட்டவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

நம் நாட்டில் ஒரு வருடத்துக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு கிட்னி தேவைப் படுவதாக சொல்கிறது ஒரு புள்ளிவிபரம். கிட்னி தானம் பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாததால் பலர் சட்ட விரோதமான முறைகளில் கிட்னி வாங்க முயற்சிக்கிறார்கள். அதனாலதான் கிட்னி மோசடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

சில மோசமான நோய் உள்ளவர்களைத்தவிர மற்ற எல்லோரும் கிட்னியை தானமாகத் தரலாம் இந்த மோசடி கும்பலுக்கு சாதகமான விஷயமாகிவிட்டது. கிட்னியை தானம் தந்தபிறகு மீதியிருக்கும் ஒரே கிட்னியை பாதுகாப்பாக வைத்துக்கொள்கிற பொறுப்பு இவர்களுக்கு இருக்கு. அன்றாட சாப்பாட்டுக்கே அல்லல்படுகிற தாட்சாயினி போன்றவங்கள் கிட்னி தானம் செய்வது தங்கள் உயிரை பணயம் வைப்பதற்கு சமம்…

2009ல் பதிவு செய்யப்பட்டது.

குதிரை வீரன் பயணம்

சமீபத்தில் கௌதம சித்தார்த்தனிடம் ‘உன்னதம்’ மீண்டும் எப்போது வரும் என்று கேட்டதற்கு இனி கொண்டுவரும் எண்ணமே இல்லை என்றார்.

பெண்ணிய, தலித் மற்றும் நாட்டுப்புற வாய்மொழி இலக்கியம் குறித்த பதிவுகளைத் தாங்கி வந்த உன்னதம், இனி வரப்போவதில்லை’ என சொன்னது வருத்தத்தைக் கொடுத்தது. அதேவேளையில் ‘இனி வருவதற்கு வாய்ப்பில்லை’ என்று சொல்லப்பட்ட சிற்றிதழ், மீண்டும் அச்சேரியிருப்பது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த சிற்றிதழ் ‘குதிரை வீரன் பயணம்’.

புத்தகக்கடையில் ஏதோ ஒரு தேடலில் பார்த்த ‘குதிரை வீரன் பயணம்’ பெயரில் மட்டுமல்ல உள்ளடக்கத்திலும் ஈர்ப்பை உண்டாக்கியது. வேட்டைபெருமாள் எழுதிய சிறுகதை,, பெயர் தெரியாத ஒரு எழுத்தாளரின் மொழிபெயர்ப்பு சிறுகதை ஒன்றும் இன்னமும் மனதில் நிற்கின்றன. அதன் ஆசிரியர் யூமா. வாசுகியை ‘குங்குமம்’ இதழுக்காக சந்தித்தபோது, அவர் பழைய இதழ்கள் இரண்டு, மூன்றைக் கொடுத்தார். பாதுகாத்து வைத்துக்கொள்ளக்கூடிய விஷயம் உள்ளவையாக அந்த இதழ்கள் இருந்தன. இன்னமும் பாதுகாப்பாக இருக்கின்றன. அந்த சந்திப்பில் ‘குதிரை வீரன் பயணம்’ மீண்டும் வருமா? என்று கேட்டதற்கு ‘வாய்ப்பில்லை’ என்றார். இப்போது மீண்டூம் குதிரை வீரன் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

இப்போது குதிரை வீரன் தன்னுடைய உருவத்தை பெரிதாக்கி இருக்கிறார். படிப்பதற்கு ஏற்ற எளிமையான வடிவமைப்பு. முந்தைய இதழ்களை விஞ்சும் உள்ளடக்கம்.
முதலாவது, எழுத்தாளர் எர்னட்ஸ் ஹெமிங்வேயின் நேர்காணல். இதை நேர்காணல் என்று சொல்ல முடியாது. கட்டுரையும் நேர்காணலும் கலந்த வடிவம். ரொம்ப ஈர்ப்பான ஒரு கதையாடலைப் போன்றதொரு உணர்வைத் தருகிறது இந்த எழுத்து வடிவம்.

ஹெமிங்வேயை நேர்காணல் செய்ய தான் மேற்கொண்ட பிரயத்தனங்களை, ஹெமிங்வே பற்றி அவர் மேற்கொண்ட விசாப்புகள் இவற்றின் ஊடே, அவரின் நேர்காணலையும் பதிவு செய்திருக்கிறார் மில்ட் மச்லின். மொழிபெயர்ப்பும் அருமை. ஹெமிங்வேயின் புகழ்பெற்ற ‘கிழனும் கடலும்’
(ஆங்கிலத்தில் படிக்க இங்கே)

நாவலில் வரும் கிழவன் உண்மையான கதாபாத்திரமா என்ற கேள்விக்கு, சுவாரஸ்யமான பதில் தந்திருக்கிறார் ஹெமிங்வே.

அடுத்தது…‘என் வாழ்க்கை தரிசனம்’ என்ற பேராசிரியர் ஜான்சி ஜேக்கப்பின் கட்டுரை. அருமையான சூழலியல் கட்டுரை. மலையாளத்திலிருந்து இந்தக் கட்டுரையை கதிரவன் மொழிபெயர்த்திருக்கிறார். ஜான்சி சொல்லிச் செல்லும் தரிசனத்தை சூழலியலில் ஆர்வமுள்ள அத்தனைபேரும் தங்கள் வாழ்விலும் கண்டிருப்பார்கள். எனக்குப் பிடித்த இந்த வரிகள்..

‘‘மனிதர்களைப் பொறுத்தவரை கொஞ்சும் பெரிய கண்டுபிடிப்புகள் உண்டு. ஒள்று நெருப்பைக் கண்டுபிடித்தது. இன்னொன்று சக்கரத்தைக் கண்டுபிடித்தது. மூன்றாவதாக மிகப் பெரிய கண்டுபிடிப்பு ஆயுதங்கள் அல்ல… நவீன முறையிலான விவசாயச் செயல்பாடுதான். அதாவது விவசாயப் புரட்சி’’

ஈழக் கவிஞர் சு. வில்வரத்னம் படத்தை அட்டையில் தாங்கி வந்திருக்கிறது. அவரின் ‘தோப்பிழந்த குயிலின் துயர்’ கவிதை இதழில் இடம்பெற்றிருக்கிறது. பனைமரங்களைக் கொண்ட நிலத்தை விட்டு விலகியிருக்கும் தன்னுடைய பிரிவுத் துயரைச் சொல்கிறது இந்தக் கவிதை.

நிக்கோலஸ் க்யுல்லன் என்ற க்யூபக் கவிஞர் பற்றிய அறிமுகத்தோடு, அவருடைய கவிதைகளும் இதழில் இடம்பெற்றிருக்கின்றன. கூத்தலிங்கம். கண்ணகன், பிரான்சிஸ் கிருபா கவிதைகளும் இதழில் இடம்பெற்றிருள்ளன.
புகழ்பெற்ற எழுத்தாளரான ஓம்பிரகாஷ் வால்மீகியின் சவ ஊர்வலம் என்கிற சிறுகதை இடம்பெற்றிருப்பது இதழுக்கு சிறப்பு சேர்க்கிறது.

‘ஆதவனின் முகம் அணிந்த சண்டை விளையாட்டுக் கவிஞன்’ என்ற தலைப்பில் கே.பி. ராமகிருஷ்ணனின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார் பேயாளன். நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு டூப் போட்டவர் இவர். நேர்காணல் மூலம் ஏராளமான விஷயங்கள் பதிவாகியுள்ளன.

மறைந்த தோழர் என். வரதராஜனுக்கும் பத்திரைகையாளர் கிருஷ்ணா டாவின்சிக்கும் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

எட்டு வருடங்களுக்குப் பிறகு, இனி காலாண்டிதழாக குதிரை வீரன் பயணம் வரும் என்றிருக்கிறார் யூமா. வாசுகி. கலை, இலக்கியம், அரசியல், சமூகம் எல்லாமும் நம் களம் என்கிறார். செறிவுமிக்க ஒரு சிற்றிதழ் மீண்டும் வருவது தமிழிலக்கிய வாசகர்களுக்கு இப்போது தேவையும்சுட.
இலக்கியத் தேடல் உள்ளவர்கள் தொடர்புகொள்ள
யூமா வாசுகி (9840306118)

புலிகளைப் பாதுகாக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு?

காட்டுயிர் -மனித பிணக்கு குறித்த செய்திகள் ஊடகங்களில் வருவது இப்போது சாதாரண விஷயமாகிவிட்டது. கோவை, வால்பாறை, நீலகிரி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளை ஒட்டியமைந்த மனித வாழிடங்களிலும் விவசாய நிலங்களிலும் காட்டுயிர்கள் குறிப்பாக யானைகள் புகுந்து ‘‘அட்டகாசம்’ செய்வதாக தமிழ் ஊடகங்களில் ‘சுவாரஸ்ய’ செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஆங்கில ஊடகங்களில் மட்டுமே காட்டுயிர்-மனித பிணக்கு குறித்த கன்சர்வேஷன் நோக்கிலான கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தமிழ் ஊடகவியலாளர்களின் காட்டுயிர்கள் மீதான வார்த்தை வன்முறை குறித்து சு.தியடோர் பாஸ்கரனும் ச. முகமது அலியும் எவ்வளவோ முறை பேசியிருக்கிறார், ஒருவருக்கும் அது எட்டவில்லை போலும். இத்தகையதொரு சூழலில் முதுமலை வனப்பகுதி கடந்த ஜனவரி 2009 முதல் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதும் அதையொட்டி அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தரிவித்து போராட்டம் நடத்தியதும் ‘யானைகள் அட்டகாச செய்திகளுக்கு நடுவே வெளியானது. சுற்றுலாவுக்குப் பெயர் போனது இந்தப் பகுதி. புலிகள் சரணாலய அறிவிப்பால் எங்கே தங்களுடைய பிழைப்புக்கு இடைஞ்சல் வந்துவிடுமோ என்றுதான் இந்தத் தொழிலை நம்பியிருக்கும் பெரும்பாலான மக்கள் இதை எதிர்த்தார். இப்போது உச்சநீதி மன்றம் புலிகள் சரணாலயப் பகுதிகள் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது. காட்டுயிர் ஆர்வலர் இந்த இடைக்கால தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு புலிகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

முதுமலை ஊட்டியிலிருந்து 67 கிமீ தொலைவிலும் மைசூரிலிருந்து 90 கிமீ தொலைவிலும் இருக்கிறது. முதுமலை தேசியப் பூங்கா 321 சதுர கிமீ பரப்பில்  இருக்கிறது. புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டுமாடு, செந்நாய், காட்டுப்பன்றி, தேவாங்கு,குரங்கு, மான்களில் புள்ளி மான், அன்டிலோப் உள்ளிட்ட விலங்கினங்களும் நன்னீர் முதலை, மலைப்பாம்பு, நாகம் போன்ற ஊர்வன வகைகளும் இந்நிலத்திற்குரிய பூர்வாங்க பறவையினமான இருவாச்சி உள்ளட்ட 200 வகையான பறவைகளும் அறிய தாவர வகைளும் சிறு உயிரினங்களும் நீர்நிலைகளும் அடங்கிய இயற்கையின் தொகுப்பு முதுமலை.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களின் எல்லைப்பகுதிகளும் ஒன்று சேரும் இடத்தில் இருக்கிறது. முதுமலை வனச்சரணாலயம். ஒருபுறம் கர்நாடகத்தின் பந்திப்பூர் தேசியப் பூங்காவும் மற்றொரு புறம் வயநாடு சரணாலயமும் இருக்கின்றன. பந்திப்பூர், வயநாடு வனப்பகுதிகள் புலிகள் சரணாலயங்களாக மாற்றப்பட்டு சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

நிர்வாக வசதிகளுக்காக இவ்வனப்பகுதிகள் பிரிக்கப்பட்டனவே அன்றி இவை மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளின் தொடர்ச்சியானவையே. தமிழக பகுதியான முதுமலை வனப்பகுதியில் புலிகள் வாழ்வதற்கான உயிர்ச்சூழலும் அவற்றின் எண்ணிக்கை ஆரோக்கியமான நிலையில் இருந்தபோதும் அது நீண்ட வருடங்களாக புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படவில்லை. காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் ஆர்வலர்களின் தொடர்ந்த முயற்சிகளால் முதுமலை வனப்பகுதி ஜனவரி 2009ல் புலிகள் சரணாலயமாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
பந்திப்பூர், முதுமலை ஒட்டிய பகுதிகளில் காட்டுயிர் ஆராய்ச்சியளராக செயல்பட்டவர் உல்லாஸ் கரந்த். அவர் தன்னுடைய அனுபவங்களை The Way of the Tiger  என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார். காட்டுயிர், சூழலியல் மீது ஆர்வம் உள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம். சு. தியடோர் பாஸ்கரன் ‘கானுறை வேங்கை’ என்ற பெயரில் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கிறார்.

கனவுகளோடு மூடிய விழிகள்: அம்மாவின் நினைவாக

அம்மா பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் அவருடைய அனுபவங்களை எழுதுச் சொல்லியிருந்தேன். அவர் சுருக்கமாக தன்னுடைய அனுபவங்களை எழுதியிருந்தார். அவர் டைரியில் இருந்தவையே நீங்கள் படித்த

அம்மாவின் டைரி…

அம்மாவின் டைரி-2

அம்மாவின் டைரி – 3

என்ற பதிவுகள்.

பொதுவாக குழந்தைகளுக்கு அவரவர்களுடைய அப்பா அம்மாதான் ரோல் மாடல்களாக இருப்பார்கள். சிலருக்கு அப்பா. சிலருக்கு அம்மா. எனக்கும் அப்படித்தான், என் அம்மாவைத்தான் ரோல் மாடலாக சொல்வேன். பொதுவான அம்மாவுக்கும் பிள்ளைக்குமான இத்யாதி, இத்யாதி சினிமா செண்டிமெண்டெல்லாம் எங்களுக்குள் இருந்ததில்லை. பெரும்பாலான வருடங்கள் என்னுடைய படிப்புக்காக என் அம்மாவை விட்டுப் பிரிந்தே இருந்தேன். இந்த சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு படிப்பு எவ்வளவு அவசியம் என்பதை என் அம்மா நன்றாகவே புரிந்து வைத்திருந்தார். தன்னுடைய சிக்கலான பொருளாதார சூழலிலும் என் படிப்புக்கு செலவு செய்வதை அவசியமானதாகவே நினைத்தார்.

தன்னுடைய உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் எல்லாம் ‘பெண் பிள்ளைக்கு படிப்பு எதுக்கு? காலாகாலத்தில் கல்யாணம் செஞ்சுவெச்சுடு’ என்று வலியுறுத்தியபோதும் அவர் வேறொரு சிந்தனையே செய்யாமல் என்னை படிக்க வைத்தார்.

என் வீட்டில் பத்திரிகை படிக்கும் பழக்கம் எல்லாம் கிடையாது. புத்தகங்களும் கிடையாது. ஆனாலும் ஒரு விவசாயியின் மகளான என் அம்மாவுக்கு வெளி உலக அனுபவங்கள்தான் பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தன. முக்கியமாக அவருடைய பணி, அவருக்கு பலவிதமான மனிதர்களுடன், குறிப்பாக பெண்களுடன் பழகும் வாய்ப்பைக் கொடுத்தது. அந்த பெண்களிடமிருந்து கேட்டறிந்த அனுபவங்களிடமிருந்து அவர் தன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள எதையும் செய்யவில்லை. என்ன தவறு செய்தால் கணவனுக்கு அடிபணிந்துபோகிறவள்தான் மனைவி என்று நினைத்திருக்கலாம். அல்லது இந்த சமூகத்தில் கணவனை தூக்கிப் போட்டுவிட்டு ஒரு பெண்ணால் நிம்மதியாக இருந்திவிட முடியாது என்று நினைத்திருக்கலாம். அதனால்தான் என் அப்பாவின் தவறுகளை இறுதிவரையில் அவர் சகித்துக்கொண்டிருந்தார்.
எதற்கெல்லாம் என் அம்மா கட்டுப்பட்டு இருந்தாரோ அதெல்லாம் என்னை கட்டுப்படுத்தக்கூடாது என்று நினைத்தார். ஆனால் சுற்றியிருந்தவர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக திருமண வயதைக் கடந்ததும் எனக்கு திருமணம் செய்து வைப்பதில் முனைப்பாகிவிட்டார். குடும்பத்தலைவி என்பதையும் தாண்டி, பெண் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டிருந்த என் அம்மாவின் முயற்சிகள் சமூகத்தின் முன் அடிபணிந்துபோயின.
ஒரு விஷயத்தில் ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்கு முயற்சி செய்து பார்ப்பது அந்த விஷயத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். அடுத்த கட்டத்திற்கு அந்த விஷயத்தைக் கொண்டு செல்வது என்னுடைய வேலையாக இருக்கலாம். அது அப்படியே இருக்கட்டும்.
என் அம்மாவிடம் நான் எப்போதும் பார்த்து வியந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம்… அவருடைய நேர்மை. 16 ஆண்டுகாலம் அவருடைய நேர்மையான பணிக்காக, அவர் பணி உயர்வுபெற்று வந்தபோது, ஊர்மக்கள் எல்லோரும் வந்து வழி அனுப்பி வைத்தது என்னை பெருமை கொள்ள வைக்கிறது.

சாதியத்தால் கட்டுண்டு கிடந்த அந்த ஊரின் லிங்காயத்துகளும் தலித்துகளும் ஒன்றாக நின்று வழிஅனுப்பி வைத்த காட்சி எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது.

என் அம்மா ஒரு அரசு ஊழியராக அந்த மக்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தார், சுகாதாரத்தைச் சொல்லிக் கொடுத்தார், நல்ல உணவிட்டார். இதை நேர்மையாகச் செய்தார். இந்த நேர்மையை அவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடைப்பிடித்தார்.
நேர்மையற்றவர்களை, அவர் ஒருபோதும் மதித்ததில்லை.
வீட்டுத் தோட்டம் போடுவதிலும் மாடு கன்றுகளை வளர்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் அவருக்கு. தன்னுடைய ஓய்வு காலத்தை அப்படித்தான் கழிக்க விரும்பினார். ஆனால் அவர் விரும்பியதற்கு எதிர்மாறாகத்தான் எல்லாமே நடந்தது. பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் வந்த தொடர்ச்சியான பிரச்னைகள் அவரை நிலைகுலைய வைத்தன. தனிப்பட்ட வாழ்க்கையில் வந்த துன்பங்களுக்கு வடிகாலாக அவர் பணி இடத்தைப் பயன்படுத்திக் கொண்டார். ஓய்வு பெற்றதால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. இடைவிடாத மனஉளைச்சல் அவரை நோயாளியாக்கியது. நோயை கண்டுகொள்ளாமல் விட்டது எதிர்பாராத விதமாக அம்மாவை படுத்த படுக்கையாக்கிவிட்டது. கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் துடிக்கத் துடிக்க அந்த வலியை அனுபவித்தார்.

மருத்துவர்கள் கைவிட்டுவிட்டார்கள். அம்மாவுக்கு மரணத்தைக் கண்டு பயமில்லை. ஆனாலும் அவர் மரணிக்க விரும்பவில்லை.

தான் செய்ய நினைத்த பணிகள் இன்னும் முடியவில்லை, செய்து முடித்த பிறகுதான் மரணிப்போம் என்று அவர் கண்கள் சொல்லிக்கொண்டிருந்தன. நிகழக்கூடாத அவர் மரணம், ஆகஸ்ட் 9, 2011 அன்று நிகழ்ந்தது. அம்மா என் மீது இறக்கி வைத்த கனவுகளை சுமந்துகொண்டு, ஒரே ஒரு முத்தத்தோடு அவரை வழியனுப்பி வைத்தேன்.

கான்கிரீட் நகரத்திற்கு நடுவே பசும் காடு!

கண்ணை மூடித் திறப்பதற்குள் தேவதை ஒருத்தி உருவாக்கிய பசும் வெளியாக, கான்கிரீட் நகரத்திற்கு நடுவே பரந்து கிடக்கிறது அந்தக் காடு! நான்கு பக்கமும் வாகன இரைச்சல் காடுகளைக் கிழித்துக் கொண்டிருக்க…சற்றே சாலையிலிருந்து விலகி உள்ளே சென்றால் நிசப்தமான பசும்வெளியில், எங்கோ ஒரு மூலையில் இருந்து வரவேற்கின்றன முகம்தெரியா பறவைகளின் ‘கீச்’ குரல்கள்… நீங்கள் வியப்பதற்கு இன்னுமொரு விஷயம் இருக்கிறது. இந்தக் காடு இருப்பது வறட்சிக்குப் பெயர்போன சென்னையில்!

தாம்பரத்தை அடுத்த மேடவாக்கம், சந்தோஷபுரம் பகுதிகளுக்கு நடுவே இருக்கிறது நன்மங்கலம். அரசால் ‘காப்புக் காடுகள்’ என்று அறிவிக்கப்பட்ட பகுதி நன்மங்கலம். இந்த இடத்தில் இப்படியொரு காடு இருக்கிறது என்பதை இந்தப் பகுதி வாசிகளே அறிந்திருக்க மாட்டார்கள். இன்னும் தெரியாத பல விஷயங்களை தனக்குள்ளே அடக்கி வைத்திருக்கிறது அந்தக் காடு.
‘‘நன்மங்கலத்தோட ஸ்பெஷலே எந்த சூழ்நிலையிலும் மாறாத அதன் பசுமைதான். எப்போதும் ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்கிறதால பட்டாம்பூச்சிகள் நிறைய வருது. பட்டாம்பூச்சி போன்ற சிறு பூச்சி இனங்களை சாப்பிடற பறவைகள். அதைச் சாப்பிடற பருந்து. இப்படி பேலன்ஸான சூழல் நிலவுற இடம் இது.
20 வருஷமா எங்களைப் போல சூழலியல் ஆர்வலர்கள் இந்த காட்டை கண்காணிச்சுட்டு வர்றோம். மற்ற இடங்கள்ல காடுகள் அழிக்கப்பட்டு, அங்க இருக்கிற உயிரினங்கள் காணமல் போயிட்டு இருக்கு. ஆனா இங்க நாளுக்கு நாள் இயற்கை வளம் அதிகமாயிட்டே வருது. முழுவதும் அழிஞ்சிடுச்சினு நினைச்ச இந்திய கொம்பு ஆந்தைகள் பத்துக்கும் மேல இங்க இருக்குங்கிறதை நாங்க கண்டுபிடிச்சிருக்கோம்.

இந்தியாவின் முன்னோடி பறவையியல் ஆராய்ச்சியாளரான சலீம் அலி ஒரே ஒரு கொம்பு ஆந்தையை மட்டுமே பார்த்ததா தன்னோட ஆராய்ச்சி குறிப்பில சொல்றார்.
சில வருஷங்களுக்கு முன்னாடி இங்க ஆறு குவாரிகள்ல கருங்கல் எடுத்துட்டு இருந்தாங்க. ஆழமா வெட்டப்பட்ட அந்த குவாரிகளோட இடுக்குகள்லதான் ஆந்தைகள் வசிக்குது. குவாரிகள்லேயும் புதர்கள்லேயும் வசிக்கிற எலிகள்தான் ஆந்தையோட முக்கியமான உணவு. சில சமயம் முயல், காட்டுப்பூனைகளையும் ஆந்தைகள் சாப்பிடறதுண்டு.

கொம்பு ஆந்தைகளைத் தவிர, அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய கானான் கோழிகளை சமீபத்திலே இங்கே பார்த்தோம். இவை தவிர, செம்பகப் பறவை, சுடலை குயில், கள்ளி புறா, மஞ்சள் குருகு, கோகிலம், வெண்மார்பு மீன்கொத்தி, சிரல் மீன்கொத்தி,, மாங்குயில், நாகணவாய் மைனா என்று கிட்டத்தட்ட 83 வகையான பறவைகள் இங்கே வாழுது.

குவாரிகள்ல தேங்கிருக்கிற மழைத்தண்ணீர் கோடை காலங்களிலும் வறண்டு போகாமல் இருக்கிறதால, அந்த இடத்திலும் நிறைய நீர் வாழ் உயிரினங்கள் பெருக ஆரம்பிச்சிருக்கு. ஆபூர்வமான உயிரினமாகிட்ட நன்னீர் ஆமைகள், இங்க நிறைய இருக்கு. இன்னும் மூலிகைச்செடிகள், பூச்சியினங்கள்…இப்படி பட்டியல் போட்டா நீண்டுக்கிட்டே போகிறமாதிரி ஏராளமான விஷயங்கள் 320 ஹெக்டேர் பரப்பளவு உள்ள இந்த மினி காட்டுல வாழ்ந்துட்டு இருக்கு’’ என்கிறார் சூழலியல் ஆர்வலர் திருநாரணன்.

இப்படியொரு உயிர்சூழல் பற்றித் தெரியாமல், அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் குளிப்பதற்காகவும் வாகனங்களை கழுவதற்காகவும் இங்கே வந்துகொண்டிருக்கிறார்கள். சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து இந்தக் காட்டைப் பாதுகாப்பதன் அவசியத்தை வனத்துறையினரிடம் எடுத்துச் சொன்னதன் விளைவாக மக்கள் வருவதற்கு தடை போட்டிருக்கிறார்கள்.
‘‘மனுஷன் புழங்க ஆரம்பிச்சா எப்படிப்பட்ட வளமான காடும் இருக்கிற இடம் தெரியாம போயிடும். மக்களுக்கு இந்த விஷயத்துல விழிப்புணர்வு தேவை. குறைந்தபட்சம் 200 வகையான பறவைகள், விலங்கினங்கள் இருந்தாதான் அந்த இடத்தை உயிரியல் பூங்காவா அறிவிப்பாங்க. வனத்துறையினரும் மக்களும் அக்கறையோட ஒத்துழைச்சா இருக்கிறதை தக்கவைக்கிறது மூலமா உயிரினங்களைத் தேடி வர வைக்கலாம்.
இங்க வளர்ச்சிப் பணிங்கிற பேர்ல என்ன செய்தாலும் அது இயற்கைக்கு அழிவு தருகிற வேலையாதான் இருக்கும். சென்னைங்கிறது செங்கல்பட்டு வரைக்கும் நீண்டுக்கிட்டு இருக்கு. இந்த நிலைமைல இன்னும் பத்து வருஷத்துல நன்மங்கலம் காடு இருக்குமான்னு கேட்டா இருக்கும்னுதான் நம்பிக்கையோடு சொல்வேன்’’ என்கிறார் திருநாரணன்.
2007 தினகரன் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை இது.