தத்தளிக்கும் காங்கிரசை கரை சேர்ப்பது யார்?

கடந்த ஒருவாரமாக மகாராஷ்டிரத்தில் அரங்கேறிக்கொண்டிருந்த அரசியல் த்ரில்லர் நாடகம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ளார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்திருப்பதன் மூலம், தாராளவாத ஜனநாயகவாதிகளின் வாழ்த்துக்களை பெற்றுவருகிறது சிவ சேனா என்னும் பாசிச மதவாத, பிரிவினை வாத கட்சி. ஜனநாயகத்தின் யாரும் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்கிற ஃபார்முலா படி, சரத் பவார்தான் இந்த அரசியல் த்ரில்லரின் இயக்குநர் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள். எனில், காங்கிரசின் இடம் என்னவாக உள்ளது என்கிற முக்கியமான கேள்வி எழுகிறது. சிவ சேனாவுக்கு ஆதரவா இல்லையா என்கிற முடிவெடுக்கவோ துணிந்து களத்தில் இறங்கவோ காங்கிரஸ் மேலிடம் ஆழ்ந்த தூக்கத்துக்குப் போன நிலையில் பாஜக முந்திக்கொண்டு ஆட்சியமைக்க முயன்றது.

மாலுமி இல்லாத கப்பலைப் போல காங்கிரஸ் இந்திய அரசியல் களத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது என்பதையே மகாராஷ்டிரத்தில் நடந்தவை சுட்டிக்காட்டுகின்றன. பொது நோக்கத்துக்காக இயங்கும் ஒரு அமைப்புக்கு தலைவர் வேண்டும் அல்லது உறுதியான ஒரு சித்தாந்தம் வழிநடத்த வேண்டும். பாஜகவை வலதுசாரி சித்தாந்தம் வழிநடத்துகிறது. கம்யூனிஸ்டுகளை இடதுசாரி சித்தாந்தம் வழிநடத்துகிறது. ஆனால், காங்கிரஸ் தனது சித்தாந்தம் குறித்த தெளிவற்ற நிலையில், ஒரு தலைமையை மட்டுமே நம்பியுள்ளது. அந்தத் தலைமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள காங்கிரசில் யாருமில்லை. அல்லது காங்கிரசின் வாரிசு தலைமை அந்தப் பொறுப்பை மற்றவர்களுக்கு விட்டுத்தர தயாராக இல்லை.

2014-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்த நேரத்தில் அவருக்குத் தெரியாமலேயே காங்கிரசின் இரண்டாம் கட்ட தலைவர்கள் காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என அறிவித்தார்கள். காங்கிரஸ் துணை தலைவராகவும் எம்.பி. யாகவும் இருந்த ராகுல் காந்தியை முதன்மைப்படுத்தி 2014-ஆம் ஆண்டின் பிரச்சாரங்கள் இருந்தன. ஆனால், ஐ.மு.கூ. ஆட்சியின் மீது இருந்த பல்வேறு ஊழல் புகார்கள், பாஜக முன்வைத்த ‘வளர்ச்சி’ என்கிற முழக்கம் காரணமாக காங்கிரஸ் வெறும் 44 இடங்களை மட்டுமே வெல்லும் நிலைமைக்குச் சென்றது.

‘மோடி’ அலை காரணமாகவே இந்த வீழ்ச்சி என காங்கிரசார் சொல்லிக்கொண்டார்கள். தோல்விக்கான காரணங்களை கூட்டாகவோ, தனிப்பட்ட முறையிலோ அவர்கள் அலசவில்லை. பதவியில்லை; சற்று ஓய்வெடுக்கலாம் என்கிற மனநிலையே காங்கிரசாரிடம் இருந்தது. இந்த ஓய்வு மனநிலையில், எல்லாம் தலைமை பார்த்துக்கொள்ளும் என ராஜீவ் குடும்பத்திடம் பொறுப்புகளை தள்ளிவிட்டார்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள். சோனியா காந்தி உடல்நிலை காரணங்களால் அரசியலில் முழுமையாக ஈடுபட முடியாத நிலையில், ராகுல் காந்தி தலைவர் பதவியில் அமரவைக்கப்பட்டார்.

ராகுல் காந்தியை அரசியல் வாரிசாக அந்தப் பதவியில் அமர்ந்தாலும், அத்தனை எளிதாக அவருடைய முயற்சிகளை புறம்தள்ளிவிட முடியாது. தங்களுடைய கடந்த கால அரசியல் தவறுகளுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதாகட்டும், மதவாத அரசியலை கடுமையான நிலைப்பாட்டுடன் எதிர்ப்பதாகட்டும் அவர் நேருவிய மதப்பீடுகளை சற்றேனும் உள்வாங்கியவராகத்தான் தெரிந்தார். தன்னளவில் அவர் உறுதியாக இருந்ததுபோல, தன் கட்சியினர் முக்கியமாக இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களுக்கு இந்த உறுதியை வலியுறுத்தவில்லை என்கிற அளவில் ராகுலின் தலைமைப் பண்பு கேள்விக்குறியாகிறது.

உதாரணத்துக்கு, திரிபுரா மாநிலத்தை எடுத்துக்கொள்வோம். இடது முன்னணி 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அந்த மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தது காங்கிரஸ். அம்மாநிலத்தில் தனது இருப்பை தக்க வைக்கவோ, ஆட்சியைப் பிடிப்பதற்கோ காங்கிரஸ் மேலிடம் வழிமுறைகளை வகுத்து தந்திருக்க வேண்டும். தனது மாநிலங்களை நழுவவிட்டதைப் போல, திரிபுராவையும் கைகழுவியது காங்கிரசின் டெல்லி மேலிடம். காங்கிரசிலிருந்து திரிணாமூல் காங்கிரசுக்குத் தாவிய எட்டு எம்.எல்.ஏக்கள், 2018 சட்டப் பேரவை தேர்தலுக்கு முன், பாஜக-வில் இணைந்தார்கள். சுவடே இல்லாத பாஜக, ஒரே தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது! காங்கிரஸ் தலைமை மறைமுகமாக அதற்கு உதவியது! 10 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த காங்கிரசின் சுவடுகூட திரிபுராவில் இல்லை.

அதுபோல, சோனியாவுக்கும் – ஜெகன் மோகனுக்கும் – சந்திரசேகரராவுக்குமான ஈகோ யுத்தம் காரணமாக ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் சுவடில்லாமல் அழிந்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். கர்நாடகத்தில் இன்று பாஜக தலைமை ஆள்கிறதென்றால் அதற்குக் காரணமும் விலைபோன காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்தான். சமீபத்திய உதாரணமான மகாராஷ்டிர மாநிலத்தில்கூட இரண்டு தேர்தல்களுக்கு முன்னால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இன்று வெறும் 44 எம்.எல்.ஏக்களுடன் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.

அதாவது, தனிநபராக ராகுல் காந்தி, தாராளவாத ஜனநாயகவாதியாக மதவாதத்தை எதிர்ப்பவராக இருந்தாலும், அதை தனது கட்சியினருக்கு கடத்தும் அளவுக்கும் ஆளுமை உள்ளவராக வளரவில்லை. இதை உணர்ந்ததாலோ என்னவோ தானாகவே 2019 தேர்தல் முடிவுகளை ஏற்று பதவி விலகியிருக்கிறார். தனது போதாமைகளை அவர் உணர்ந்திருக்கலாம். ஆனால், காங்கிரசின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ராஜீவ் குடும்பத்திடமிருந்து தலைமை பொறுப்பை வேறு ஒருவருக்கு போவதை பிரயத்தனத்துடன் தடுத்துக்கொண்டிருக்கிறது. சோனியாவும் ராகுலுமே தங்களுடைய பதவிகளை விட்டுத்தருவதாக வெளிப்படையாக அறிவித்தாலும் அதை செயல்படுத்துவோர் யாரும் இல்லை.

மாநிலங்களில் காங்கிரசின் தலைமை பதவிகளில் பெரும்பாலும் கட்சி தலைவர்களின் வாரிசுகளே அலங்கரிக்கும் நிலையில், டெல்லி தலைமையில் வாரிசு அல்லாதவர்கள் வந்தால், எங்கே தங்களுடைய வாரிசுகளின் பதவிகளும் பறிபோய்விடுமோ என அவர்கள் அஞ்சுகிறார்கள். கட்சி எப்படி போனாலும்சரி, நாடு எப்படி போனாலும்சரி நம்முடைய பதவி தப்ப வேண்டும் என்கிற மானப்பான்மை காங்கிரசாரின் பொதுவான குணமாகியுள்ளது.

அண்மையில் மத்திய பிரதேச காங்கிரசின் வாரிசு இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்திய, தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி குறிப்பில் காங்கிரஸ்காரர் என்ற பதத்தை நீக்கினார். முன்னதாக, பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறியிருந்த நிலையில், இது பரபரப்பாக பேசப்பட்டது. பாஜகவுக்கு தாவப்போகிறாரா என்றெல்லாம் வதந்திகள் வந்த நிலையில், வதந்திகளைவிட அவர் அளித்த விளக்கம் மோசமானதாக இருந்தது; காங்கிரசின் பரிதாப நிலையைக் காட்டுவதாகவும் இருந்தது. அதாவது, தன்னைப் பற்றிய முக்கியமானவற்றைப் பற்றி மட்டும் கூறிக்கொண்டதாகவும், நீளமாக இருந்ததால் காங்கிரஸ்காரர் என்பதை வெட்டி விட்டதாகவும் விளக்கம் கொடுத்தார்.

பாரம்பரியமாக காங்கிரஸ்காரர்கள் குடும்பத்திலிருந்து வரும் வாரிசு இளம் தலைவர் காங்கிரசை எவ்வளவு துட்சமாக மதிக்கிறார் என்பதை சுட்டிக்காட்டியது அவருடைய விளக்கம். அயோத்தி தீர்ப்பை ஒரு சில காங்கிரசார் விமர்சிக்கிறார்கள்; பலர் வரவேற்கிறார்கள். இதுபோல பாஜகவின் மதவாத அரசியலுக்கு ஆதரவான கருத்துக்களை காங்கிரசார் சொல்வது அவ்வவ்போது பரபரப்புக்குரிய செய்தியாகிறது. இத்தகையவர்களை வைத்துக்கொண்டு காங்கிரஸ் எப்படி இந்தியாவை இறுகப் பற்றியிருக்கும் மதவாத அரசியலை வேரறுக்க முடியும்? திறந்த மனதுடன் தற்போதிருக்கும் தலைமை ஒரு தலைவரை, ராஜீவ் குடும்பத்தைச் சாராத ஒருவரை (தனது போதாமைகளை வளர்த்துக்கொள்ள ராகுலுக்கு கால அவகாசத்தை கொடுத்துவிட்டு) அனுமதிக்குமா?

“நாம் அனைவரும், நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சம உரிமை, சலுகைகள் மற்றும் கடமைகளைக் கொண்ட இந்தியாவின் குழந்தைகள். வகுப்புவாதத்தையோ அல்லது குறுகிய மனப்பான்மையையோ நாம் ஊக்குவிக்க முடியாது, ஏனென்றால் சிந்தனையிலோ அல்லது செயலிலோ குறுகிய மக்களைக் கொண்ட எந்தவொரு நாடும் சிறந்த நாடாக இருக்க முடியாது”.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு ஆற்றிய முதல் உரையில் இடம்பெற்ற முழக்கம் இது. நேரு முதல் பிரதமர் மட்டுமல்ல, மதசார்பின்மையை என்னும் பாதையை வலுவாக போட்டு, இந்தியாவை கட்டமைத்த தலைவர்களில் ஒருவர். காங்கிரஸ்காரராக அதைச் செய்தார். இன்றைய காங்கிரஸ் தலைமை அவர் காட்டிய வழியில் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்குமா? அல்லது தனது சுயநலனுக்காக நாட்டையும் அதன் பாரம்பரியத்தை மதவாதத்திடம் அடகு வைக்குமா?