நான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்?

பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளை, அச்சுறுத்தல்களை, உடல் ரீதியான துன்புறுத்தலை வெளியே கொண்டுவரப்பட்டதற்காக தொடங்கப்பட்டதே மீ டூ இயக்கம். உலகம் முழுக்க பல்வேறு துறைகளில் ஆண்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்கள் மீ டூ இயக்கத்தின் மூலம், தொடர்புடைய சம்பவங்கள் நடந்து பல ஆண்கள் ஆனது போதும் இப்போது வெளியே சொன்னார்கள். தனியாக ஒலிக்கும் குரலுக்கு இத்தனை வீரியம் இருந்திருக்காது; கூட்டுக்குரலாக ஒலிக்கும்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இது வெறுமனே பாலியல் சுரண்டலுக்கு எதிரான குரலாக மட்டுமே பார்த்து, ‘எனக்கு நடக்கவில்லை’ அல்லது ‘எங்கள் குடும்பத்தில் யாருக்கும் நடக்கவில்லை’ என பலர் ஒதுங்கிப் போகக்கூடும். பாடகர் சின்மயி மூலம் தமிழகத்தில் பேசுபொருளாகியிருக்கும் மீ டூ இயக்கத்தின் மூலம், பல முகம் காட்ட விரும்பாத பெண்கள், பொதுவெளியில் தங்களுக்கு நேர்ந்த அச்சுறுத்தல்களை முன்வைத்திருக்கிறார்கள். இது வெறுமனே சின்மயி-வைரமுத்து போன்ற சினிமா பிரபலங்களுக்குள் நடக்கும் பிரச்சினை அல்ல என்பதை நாம் உணர வேண்டும். நம் வீட்டுப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை.

பெரும்பாலும் முதல்தலைமுறையாக பெண்கள் பணிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கும் சூழலில் 90 சதவீதம் பெண்கள் இத்தகைய ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். சில பெண்கள் தங்களுக்குள்ளாகவே இத்தகைய ஒடுக்குமுறைகள் பேசி கடந்துவிடுகிறார்கள். சிலர் கூட்டாக இணைந்து அத்துமீறல் செய்யும் ஆண்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்கிறார்கள். சில வேலைக்குச் செல்வதே வேண்டாம் என முழுக்குப் போடவும் செய்கிறார்கள். இறுதியில் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கும் ஆண்கள் தொடர்ந்து இதையே அடுத்து வருகிற பெண்களுக்கும் செய்ய துணிகிறார்கள். மீ டூ இயக்கத்தில் பேசப்பட்ட இத்தகைய ஒடுக்குமுறை விஷயங்கள் எவை எவை?

Abuse – துன்புறுத்தல்: ஒரு நபர் இன்னொருவர் மீது உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ, உளவியல்ரீதியாகவோ, பொருளாதாரரீதியாகவோ துன்புறுத்துவது. உதாரணத்துக்கு, அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஆண், ஒரு பெண்ணை அவருடைய விருப்பத்துக்கு மாறாக இணங்க வற்புறுத்தி அதை அந்தப் பெண் மறுக்கும்போது, அவளுடைய இன்கிரிமெண்ட், ப்ரோமோஷனில் கை வைப்பதுகூட துன்புறுத்தல் வகையைச் சேர்ந்ததுதான்.

Boys’ club – பணியிடத்தில் ஆண்கள் மட்டும் ஒரு குழுவாக இயங்குவது. பெரும்பாலான பணியிடச்சூழலில் இது நடக்கும். இவர்கள் சேர்ந்து அலுவலக பெண்கள் கிண்டலடிப்பார்கள், அவர்களுக்குள் பாலியல் ஜோக்கடித்து உரக்க சிரிப்பார்கள், பெண்களை மோசமாக பேசுவார்கள். அதாவது, பெண்களை ஒரு பொருட்டாக மதிக்காது; எல்லா இடமும் ஆணுக்கானதுதான் என நிறுவ முயல்வதும் ஒடுக்குமுறையே!

Male entitlement- வேறு எந்த தகுதியும் தேவையில்லை, ஆண் என்ற தகுதியே சமூக அந்தஸ்துகளை பெற போதுமானது என கருதுவது. பணியிடங்களில் ஒரு குறிப்பிட்ட பணியை ஆணால் மட்டுமே செய்ய முடியும் என சொல்வார்கள். குறிப்பாக தமிழ் ஊடகங்களில் புலனாய்வு நிருபர் பணிக்கு பெண்களை சேர்த்துக்கொள்ளாமல் இருப்பதை சொல்லலாம்.

Mansplaining – ஆண்களுக்கு எல்லாம் தெரியும்: தனக்கு எல்லாம் தெரியும் என்பதைப் போல சில ஆண்கள் தேவைப்படுமா இல்லையா என்பதைக்கூட அறிய முற்படாமல் அறிவுரைகளை கூறுவார்கள். பொதுவாக, பெண்களை நெருங்குவதற்காக ஆண்கள் இதை செய்வார்கள்.

Molesting – விருப்பமில்லாமல் அழைத்தல்: ஒரு பெண்ணை அவளுடைய விருப்பம் இல்லாமல் அல்லது அவளால் நிராகரிப்புக்கு ஆளான பின்னும் பாலியல் உறவுக்கு அழைப்பது.

Negative questioning – எதிர்மறையாக கேட்பது: இதை நிறைய பெண்கள் எதிர்கொண்டிருக்கலாம். அதாவது இரட்டை அர்த்தத்தில் பேசிவிட்டு, தாங்கள் எதிர்பார்க்கும் பதிலை எதிர்ப்பார்ப்பார்கள்.

Negging – உணர்வுரீதியான துன்புறுத்தல்: ஒருவரின் தன்னம்பிக்கையை குறைக்கும் வகையில் எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டிருப்பது.

Policing – கண்காணித்தல்: ஒரு நபரின் செயல்பாடுகளில் விருப்பம் இல்லாமல் ஒரு பெண் ஒதுங்கி தன்னுடைய பணிகளை செய்ய விரும்பினாலும் அந்த நபர் விடாது அந்தப் பெண்ணை கண்காணித்துக்கொண்டே இருப்பது. இதை செய், அது கூடாது என அந்தப் பெண்ணை கட்டுப்படுத்த நினைப்பது.

ஆண்களின் இயல்பே இதுதானா?

பெண்களின் மீது ஈர்ப்பு கொள்வது ஆண்களின் இயல்பு. எனவே, பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலின ஒடுக்குமுறைகள் நிகழத்தான் செய்யும் என வாதிடுகிறார்கள். இதில் முதல் பாதி மட்டுமே உண்மை. ஆண்கள் மீது ஈர்ப்பு கொள்வது பெண்களுக்கும்கூட இயல்பாக நிகழக்கூடியது. அதை பெண்கள் எப்படி கையாள்கிறார்கள். ஆண்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். உணர்வுகளை கட்டுப்படுத்தி, பண்படுத்திக்கொள்ளும் கண்ணியமான ஆண்களும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், பாலின ஒடுக்குமுறை என்பது ஆணுக்கு கிடைக்கும் அளவற்ற அதிகாரத்தின் விளைவாக நடப்பது. இதை தொடர்புடைய ஆண்கள் அவமானமாக கருத வேண்டும் என்பதாலேயே மீ டூ இயக்கத்தை ‘பெயர்களை சொல்லுதல் -அவமானம் கொள்ளச் செய்தல்’ என அழைக்கிறார்கள்.

தனக்காக, தன் குடும்பத்துக்காக பணிபுரிய வருகிற ஆணுக்கு இருக்கும் அதே நிர்பந்தமும் லட்சியமும் பெண்ணுக்கும் இருக்கும். பஞ்சாலைக்கு தின சம்பளத்துக்கு செல்கிற பெண்ணுக்கும் அல்லது ஐடி நிறுவனத்தில் மாதச் சம்பளம் வாங்கும் பெண்ணுக்கும் அவரவர்க்குண்டான வாழ்வியல் நிர்பந்தங்கள் இருக்கும். அதை அதிகாரத்தால் சிதைக்க நினைப்பதே ஆணாதிக்கம். இந்த ஆணாதிக்க சூழலை மாற்ற முனைந்திருக்கும் கூட்டுக்குரல் மீ டூ. நமக்கு அல்லது நமது வீட்டினருக்கு அல்லது நமக்கு தெரிந்தவர்களுக்கு இந்த ஒடுக்குமுறைகள் நடந்திருக்கலாம். சினிமா ஆட்களின் பெயர்கள் அடிபடுவதால் ஏதோ கிசுகிசு போல எண்ணி நகர்ந்துவிடாமல், இந்த இயக்கத்தை ஆதரிப்பது நமது கடமை. ஏனெனில், பணியிடங்களில் பாலியல் சமத்துவம் என்பது நமக்கு பின்னால் வருகிற அடுத்தடுத்த தலைமுறை பெண்களுக்கு நாம் பெற்றுத்தர வேண்டிய உரிமை.

வினவு தளத்தில் வெளியானது எனது கட்டுரை.

1 thoughts on “நான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்?

  1. //இது வெறுமனே சின்மயி-வைரமுத்து போன்ற சினிமா பிரபலங்களுக்குள் நடக்கும் பிரச்சினை அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.//
    இந்திய நாட்டு பெண்கள் எதிர்கொள்ளும் வேலைத்தலங்கள் உட்பட ,ஆணாதிக்க பிரச்சனைகளை சின்மயி தனக்கு சாதகமாக தவறாக பயன்படுத்தி வைரமுத்து சுவிஸ்லாந்து தேசத்தில் வைத்து என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று அவருடன் சேர்ந்து ஒன்றா நிகழ்ச்சிகள் பல நடத்தி, தனது திருமணத்தில் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றபின்னர் 14 வருடத்துக்கு பின்பு தெரிவிக்கிறார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.