‘‘மட்டரகமான சினிமா கலைஞனுக்குக் கிடைக்கிற மரியாதைக்கூட எங்களுக்குக் கிடைக்கிறதில்லை!’’-யூமா வாசுகி

அருமை வாசகரே யூமா வாசுகி யாருங்கிறதை நீங்க தெரிஞ்சுக்கத்தான் வேணுமாங்கிறதை நீங்களே தீர்மானிக்கும்படி உங்ககிட்டேயே முடிவை விட்டுடறேன்.

நான் யாருங்கிறது ரொம்பவும் தத்துவார்த்தமான கேள்வி. அதில் பல கேள்விகள் உள்ளடங்கி இருக்கு. நான் கவிஞனா, ஓவியனா, நாவலாசிரியனா, சிறுகதை எழுத்தாளனான்னு எந்த ஸ்தானத்தையும் என்னால கோர முடியாது.

எல்லாமே ஒரு மாபெரும் பேரியக்கம்தான். உதாரணத்துக்கு கவிதைங்கிறது ஒரு மாபெரும் பேரியக்கம். அதுல மிக மிக சிறிய அளவில், எனது சூழ்நிலையில் என்னைப் பாதிக்கிற விஷயங்களை கவிதைகளா வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். மாபெரும் கவிதை பேரியக்கத்துக்கு முன்னாடி நான் கவிஞன்னு சொல்லிக் கொள்வது எனக்கு அயற்சியைக் கொடுக்குது.


நான் பிறந்தது பட்டுக்கோட்டையில. அப்பா, நான் சின்ன வயதா இருக்கும்போதே இறந்துட்டார். தந்தையற்ற பிள்ளையைத் தன் பிள்ளைன்னு நினைச்சு என்னோட படிப்பு, வாழ்க்கை, எதிர்காலம் எல்லாவற்றையும் தன்னோட சிந்தனையா எடுத்துக்கொண்ட மிகப்பெரிய அர்ப்பணிப்பைச் செய்தவங்க என் அக்காவும் அவருடைய கணவரும்தான். அம்மாவோட அண்ணனும் தம்பியும் ஓவியர்கள். அதனால ஓவியத்தின் மீதான் ஆர்வம் இயல்பா வந்தது. கும்பகோணம் அரசு ஓவியக் கல்லூரில ஓவியம் படிச்சேன். நான் பண்ண விரும்பின வேலையை, எனக்கு தெரிஞ்ச வேலையைச் செய்ய எங்க ஊருல எடம் இல்ல.
சென்னைக்குப் பிழைப்புக்காக வந்தேன். ஆரம்பகாலத்துல சென்னையில வாழறதுக்கு நான் சந்திச்ச லௌகீக பிரச்னைகள் நிறைய. பத்து வருஷத்துல நாலு வாட்டி திரும்பவும் சென்னைக்கு வரக்கூடாதுங்கிற முடிவுல, சென்னைக்கும் ஊருக்குமா போய்ட்டு போய்ட்டு வந்திருக்கேன். சென்னையின் ஆரம்ப கால வாழ்க்கையில் கொடூரமான சம்பவங்கள்னு சொல்லக்கூடிய நிகழ்வுகள், மனநிலையைப் பாதிக்கிற நிகழ்வுகள் நிறைய பார்த்தேன்.

இந்த சம்பவத்தைக் கேளுங்க வாசகரே… நகரத்துக்கு ஒதுக்கு புறமா ஒரு சின்ன அறையில் நான் குடியிருந்தேன். வீட்டு ஓனருக்கு அந்த அறையை இடிச்சிட்டு பெரிய அளவுல அதை மாத்தி அமைக்கணும்னு எண்ணம். அறையைக் காலி பண்ண எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்தாங்க. நான் மூணு நாளா தேடியும் வேற வீடு கிடைக்கல. மூன்றாவது நாள் மாலை வீடு திரும்பி களைப்புல தூங்கிப்போனேன். அப்போ பத்து பேர் என் அறைக்குள் வர்றாங்க. கையில கொண்டுவந்திருந்த கடப்பாரையால நாலா புறமும் இடிக்க ஆரம்பிக்கிறாங்க. இப்படி சென்னையின் கொடூர முகங்களை பலப்பல நேரங்களில் பார்க்க முடிந்தது. இந்த அனுபவங்களை ‘சுதந்திர ஓவியனின் தனியறை குறிப்புகள்’ என்ற நாவலாக எழுதிக்கிட்டு இருக்கேன். அதில் சென்னை நகரத்தோட ஆழத்தை நீங்க தொட்டுப் பார்க்கலாம்.

அகால இரவுகளில் சென்னை நகர வீதிகளில் சுற்றி திரிந்த அனுபவங்கள் அதிகம். சிக்கலிலிருந்து மீளுவேணான்னு நம்பவே முடியாத தருணங்கள், அடுத்த ஒரு மணி நேரம் நமக்கு இருக்குமான்னு தவிச்சதும் அதிகம். முழுசா ஆறு நாட்கள் சாப்பிடாம இருந்திருக்கேன். பசியும் பெண்கள் மீதான பேராவலும் என்னைப் பெரிய அளவுல பாதிச்சிருக்கு.
‘அமுத பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’ கவிதை தொகுப்பில் உள்ள வரிகள் அந்த காலக்கட்டத்துல யோசிச்சவைதான். பெண்களைப் பற்றிய நினைப்பில் ஆன்ம பூர்வமான வழிபடுதலும் இறைஞ்சுதலும் இருந்தது. மனிதனுடைய ஆன்மிக விடுதலையைப் பெண்களால்தான் கொடுக்க முடியும்னு தீர்மானமா நம்பினேன். இன்னமும் அந்தக் கருத்தில் உடன்பாடு உண்டு. ஆனா கடவுளுக்கு மறுபக்கம் இருப்பதைப் போல, கொடூரங்கள் அற்பங்கள் நிறைஞ்ச பெண்களின் இன்னொரு பக்கத்தையும் சமீபகால அனுபவங்கள்ல தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப பெண்கள் குறித்து சமன்பட்ட மனநிலையில் இருக்கேன்.
என்னோட எழுத்து நீர்போக்குல நடந்ததுதான். வசந்தகுமார் பொறுப்பா என்னோட சிறுகதைகளை ‘உயிர்த்திருத்தல்’ தொகுப்பா கொண்டுவந்த பிறகுதான் எழுத்தாளரா செட்டாக முடிஞ்சது. வசந்தகுமார் என்னை ஊருக்கு அனுப்பி, அந்த நேரத்துக்கு தேவையான உதவிகளையும் செய்ததால, ‘ரத்த உறவு’ நாவலை எழுத முடிஞ்சது. இதுல என்னோட பங்கு எதுவும் இல்லை. என் சொல்முறை வலிந்து மேற்கொள்ளப் படறதில்லை. நானும் என் எழுத்தும் ஒண்ணு. லட்சியம், பெரிய இலக்கு எதுவும் என்கிட்ட இல்ல. இலக்கியம் என்பது என் பார்வை. வெளிப்படுத்தறதைச் சிறந்த வகையில வெளிப்படுத்தணும், அவ்வளவுதான்.
‘மஞ்சள் வெயில்’ நாவல், ‘இரவுகளின் நிழற்படம்’ ‘கவிதை தொகுப்பு, சிறுவர்களுக்கான மொழிபெயர்ப்புகளையும் செய்துட்டு வர்றேன். ஒரு கலைஞன் முதலாளிக்கு முன்னாடி கூனிக்குறுகி நிக்கிறது பெரிய சாபக்கேடு. மட்டரகமான சினிமா கலைஞனுக்குக் கிடைக்கிற மரியாதைக்கூட நல்ல கலைஞனுக்குக் கிடைக்கிறதில்லை. பணத் தேவையின் விஸ்வரூபத்தைச் சந்திக்கும் தருணங்கள்ல படைப்பு மனோநிலை கெடாமல் பார்த்துக்கறது பெரிய பிரயத்தனமா இருக்கு… வாசகரே.

அடுத்த நாள் சூரிய உதயத்தைத் தரிசிக்க எனக்கு நிறைய
ஆசை. சில மாபெரும் துரோகங்கள் முன் நிற்கும்போது வாழ்க்கையில நுழையறது ரொம்ப சிரமமா இருக்கு. ஆனாலும் என்னுடைய பாடுகள் எல்லாவற்றையும் என் விருப்பத்திற்கு உரியதாதான் பார்க்கிறேன்.

தமிழினி வசந்தகுமார், பஷீர் அகமது போன்ற சில நண்பர்கள் இல்லேன்னா என் வாழ்க்கை வேறுமாதிரியா அமைந்திருக்கும். கணிசமான அளவுக்கு எனக்கு கடன்படுதல் இருக்கு. இவ்வளவு பேரோட உதவி தேவைப்படற நிலையிலா நாம இருந்தோம்னு எனக்கு பெரிய குற்ற உணர்வும் இருக்கு.
கடந்து வந்த வாழ்க்கையில நிறைய தப்பிதங்கள் செய்திருக்கேன். சிலதை நான் உணர்ந்திருக்கேன். உணராமல் போனவைகளை மன்னிச்சுடுங்கன்னு சொல்ல ஆசைப்படறேன்.
என்னுடைய வாழ்க்கை நடைமுறைக்குத் திருமணம் பொருந்தி வராதுன்னு யோசிச்சேன். வரையறுக்க முடியாத வாழ்க்கையில விட்டேத்தியா இருந்தேன். திருமணம் உறுதியான சட்டகங்களால் அறையப்பட்ட நிறுவனம். அதுல என்னுடைய ரோல் சரியா வராதுன்னு நினைச்சேன். விபத்துபோல திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு இதைத்தவிர வேற சரியான வழி இருக்க முடியாதுன்னு தோணுது. என்னுடைய பலவீனங்களைத் தன்னால் இயன்றவரைக்கும் சகித்துக் கொண்டிருக்கிற மனைவிக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த வாழ்க்கையில நான் கண்ட மிகப்பெரிய ஆதர்சம், கொண்டாட்டம், நெகிழ்ச்சியா இருக்கிறது என்னுடைய பையன்தான்.

இப்ப இந்த உலகத்துல உயிர்வாழ்றதுக்கான மிகப்பெரிய காரணமா, வாழ்க்கைக்கான எல்லா அர்த்தமும் ஒரு புள்ளியில குவிந்ததுபோல என் பையன் இருக்கான். கை மாறிமாறி வர்ற பந்துபோல நான் ஒருத்தர் கையிலிருந்து இன்னொருத்தர் கைக்கு மாறிக்கிட்டு இருக்கேன். சரியான வார்த்தையில சொல்லணும்னா வாசகரே…‘நான் இருந்துக் கொண்டிருக்கிறேன்’ அதற்கு அப்பால் ஒண்ணுமில்ல.

குங்குமம் இதழுக்காக நான் தொகுத்த எழுத்தாளர் யூமா வாசுகியின் தன் அறிமுகம் இது.
படங்கள் நன்றி : புதூர் சரவணன்

பூமியின் இசை!

”வெளியே சொல்லமுடியாத ஆழ்மன விருப்பங்கள் நமக்குள்ளே நிறைய புதைந்திருக்கிறது. பெயரிட்டு வெளிப்படுத்த முடியாத அந்த விருப்பங்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நிஜ வாழ்க்கையில் நடந்துவிடுகின்றன. ‘டிஜிருடு’ வாசிக்கக் கிடைத்ததை அப்படியொரு விருப்பமாகத்தான் உணர்கிறேன்!’’ பாம்பு தோல் போர்த்தியிருக்கும் அந்த மூங்கில் கருவியை வருடியபடி பேசுகிறார் குமார் அம்பாயிரம்.

நவீன இலக்கியத்தின் இளம் படைப்பாளியான குமார் அம்பாயிரம், ஆஸ்திரேலிய பழங்குடிகளின் ‘டிஜிருடு’ என்ற இசைக்கருவியை வாசிப்பதில் தேர்ந்தவர். டிஜிருடு இசைக்கருவியை தானே வாசிக்கக் கற்றுக்கொண்டு, தனியாக இசை நிகழ்ச்சிகளையும் செய்து வருகிறார் குமார் அம்பாயிரம்.
‘‘ஹம்பிக்கு செல்லும் வழியில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த நாடோடி இசைக்கலைஞன் ஒருவரைச் சந்தித்தேன். அவர் கையில் வைத்திருந்த இசைக்கருவியை வாசித்துக் காட்டியபோதுதான், அது எனக்குள் இருந்த இசையாக இருப்பதை உணர்ந்தேன். மனித நடமாட்டம் இல்லாத காற்றும் மலையும் மரங்களும் நிறைந்த இடத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு மெல்லிய சப்தம் இசையாக வழியுமே… அதுபோல இருந்தது இந்த இசை! அதை அவர் ‘டிஜிருடு’ என்றார். அதன் மேல் ஈர்ப்பு கொண்டு, அதை வாசிக்கக் கற்றுக்கொண்டேன். நானாக ‘டிஜிருடு’ கருவியை உருவாக்கினேன்.
ஆஸ்திரேலியாவின் 5000 ஆண்டுகள் நீண்ட பழமையுடைய பூர்வகுடி மக்களான அபார்ஜினல் மக்களின் பொக்கிஷம் டிஜிருடு. பூர்வகுடிகள் என்றாலே அடிமைகள் என்ற நினைப்புதான் நமக்கு இருக்கிறது. அபார்ஜினல் மக்கள் சுதந்திரமானவர்கள். அவர்களின் கட்டற்ற சுதந்திரத்தைச் சொல்கிறது டிஜிருடு. ராகம், தாளம் போன்ற எந்த கட்டமைப்பையும் கொண்டிராமல் முடிவும் தொடக்கமும் அற்றது டிஜிருடுவின் இசை. ‘பூமியின் இசை’ என்றே இதைச் சொல்கிறார்கள்.

அடர்ந்த காடும் அதில் அசையும் மரங்களும் நடமாடும் விலங்குகளும் அவற்றின் நடுவே பதுங்கி, பதுங்கி காலெடுத்து வைக்கும் ஆதிவாசியின் காலடிச் சத்தமும்தான் டிஜிருடு வாசிக்கும்போது மனதுக்குள் கொண்டுவர வேண்டிய இசைக்குறிப்புகள்.

ஆஸ்திரேலிய காடுகளில் வண்டு துளைத்துவிட்டுப்போன யூகலிப்டஸ் மரங்களைக் கண்டுபிடித்து, அதை சீர்படுத்தி, பாரம்பரிய ஓவியத்தை அதன் மீது வரைந்து இந்த இசைக்கருவியை உருவாக்குகிறார்கள். அந்த மண்ணிற்கே உரித்தான பிரத்யேக தன்மை இங்கே கிடையாது. அதனால் அந்தத் தன்மையோடு ஓரளவு ஒத்துப்போகும் மூங்கிலால் டிஜிருடுவை நான் வடிவமைத்தேன். இரண்டிலிருந்தும் வெளிப்படும் இசையில் எந்த வித்யாசமும் இல்லை.
பெரும்பாலும் இலக்கியம் தொடர்பான கூட்டங்களில் டிஜிருடுவை வாசிக்கிறேன். நவீன நாடகங்களுக்கும் குறும்படங்களும் இந்த இசையை வாசித்திருக்கிறேன். கேட்பவர்களுக்கு கற்றுத் தருகிறேன். எழுத்துக்கூட வரையறுக்கப்பட்ட எல்லை இருக்கிறது. ஆனால் எல்லைகளோ, முடிவுற்ற தன்மையோ இல்லாதது இசை! இசை மீதான என்னுடைய ஆர்வத்துக்குக் காரணம் இதுதான்.
டிஜிருடுவைப் போல இந்த பூமியில் மனித காதுகளுக்கு எட்டாத இசை கோடிக்கணக்கில் இருக்கிறது. அதில் சிலதையாவது நான் கேட்க வேண்டும் என்கிற ஆவலை டிஜிருடு எழுப்பிவிட்டிருக்கிறது!’’ என டிஜிருடுவிலிருந்து வழிந்தோடும் முடிவில்லாத இசையைப் பெருக்கியபடி முடித்தார் குமார் அம்பாயிரம்.

இது நான் பணியாற்றிய ஒரு வார இதழுக்காக 2008ல் சென்னை பிரஞ்சு கலாராச மையத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த இதழிலிருந்து வெளியேறியதால் அப்போது பிரசுரமாகவில்லை. பத்திரப்படுத்தி வைத்திருந்ததை சுவாரஸ்யம் கருதி இப்போது பிரசுரிக்கிறேன்.

பாம்புகளோடு யானைகளும் புலிகளும் சாகடிக்கப்பட வேண்டியவைதான்!

தமிழில் விவசாயம், தொழிற்நுட்பம், மேலாண்மை குறித்த எழுத்துக்கள் ரொம்பவே குறைவு. இப்போதுதான் அவற்றையெல்லாம் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தத் துறைகளில் தமிழ் பத்திரிகைகள் வருவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது. பொருளாதார ரீதியிலான பலவீனம் காரணமாக இந்தப் பத்திரிகைகள் பெரிய அளவில் வாசகர்களை சென்று சேருவதில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்த விகடன் கொண்டுவந்ததுதான் ‘பசுமை விகடன்’.
தரமான கட்டுரைகளுடன் இயற்கை விவசாயம் குறித்து சூழலியல் நோக்கில் தொடர்ந்து எழுதிவருகிறது பசுமை விகடன். தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது ‘பசுமை விகடன்’ வாங்கிப் படிக்கும் வாசகி நான்.

தற்போது கடைகளில் இருக்கும் இதழில் பதினைந்து அடி நீளமுள்ள ராஜநாகத்தை அடித்துக் கொன்றதாக அப்பையா நாயக்கர் என்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்துவிட்டதாக இதில் ஒரு செய்தி. ‘மரத்தடி மாநாடு’ என்ற தொடரில் (விவசாயம் சார்ந்த நல்லது கெட்டதுகளை அரட்டை பாணியில் சொல்லும் பகுதி) இதில் வரும் ஏரோட்டி என்ற கதாபாத்திரம் இந்த செய்தியை சொல்வதோடு, ‘‘ஏதோ கடத்தலுக்காக அடிச்சுக் கொன்னுருந்தா ஜெயில்ல போடறதுல தப்பில்ல.. பாவம், பயந்துபோய் அடிச்சவறுக்கும் அதே கதியா?’’ என்றுநொந்துபோய் சொல்வதாக முடித்திருக்கிறார்கள்.

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டியுள்ள ஒரு கிராமத்திலிருந்து மீட்ட ஆண் ராஜநாகத்துடன் காட்டுயிர் ஆய்வறிஞர் ரோமுலஸ் விட்டேகர்.

அடர்ந்த வனங்களில் மட்டுமே வாழும் ‘ராஜநாகம்’ இந்திய மண்ணுக்கே உரித்தான அரிய வகை உயிரினம். கிட்டத்தட்ட அழிந்துகொண்டிருக்கும் நிலையில் இருக்கிறது. இன்னும் பத்தாண்டுகளில் காட்சியகங்களில் மட்டுமே இது வாழும். அரிதாகிக் கொண்டிருக்கும் உயிரினம் என்பதால்தான் இதைக் கொல்லவோ, உயிரோடு வைத்திருக்கோ தடை விதித்து சட்டம் இயற்றி இருக்கிறது வனத்துறை. ‘‘பயந்துபோய் அடிச்சவறுக்கும் இதே கதியா?’’ என்று இந்தப் பத்தியை எழுதியவர் கேட்டிருப்பது இது குறித்து அவருக்கு உள்ள போதாமைக்காட்டுகிறது. இப்படியொரு போதாமையில்தான் எல்லா கட்டுரைகளும் எழுதப்படுகிறதா என்கிற சந்தேகமும் நமக்கு வருகிறது. நம்முடைய கவலையெல்லாம் லிவசாயிகள் மத்தில் நல்லதொரு மதிப்பைப் பெற்றிருக்கிற பத்திரிகை, அவர்களுக்கு தவறான வழிகாட்டியாக மாறிவிடக்கூடாது என்பதுதான். கோவை, நீலகிரி மாவட்டங்களில் யானைகளுக்கும் விவசாயி (காட்டை ஆக்கிரமித்து விவசாயம் செய்பவர்கள்)களுக்கும் உள்ள பிரச்னை அவ்வப்போது செய்தியாகிறது. தன் விவசாய பூமிக்குள் யானை புகுந்துவிடாமல் இருக்க,. மின்சார கம்பிகளில் வேலிகட்டி, யானைகளை பலியிடுவதை நியாயப்படுத்த முடியுமா?
அல்லது தன் இடம் பறிபோகும்போது வழியில்லாமல் குடியிருப்புகளில் புகுந்துவிடும் புலிகளை கொன்றுவிட்டு, ‘என் இடத்தில் வந்துவிட்டது’ என்று சொல்லலாமா? 15 அடி நீள பாம்பைக் கொன்றது சரியென்றால், 11 அடி நீளமுள்ள புலிகளைக் கொல்வதும் யானைகளைக் கொல்வதும் சரிதான்!

படங்கள் நன்றி : KING COBRA RESEARCH STATION, WESTERN GHATS 

பீறிடும் விஜய் மல்லையாவின் பீரும் அதில் வழியும் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்களின் ரத்தமும்

ஆறு மாதங்கள் சம்பளமே வாங்காத மாத சம்பளக்காரர்களின் நிலை எப்படிப்பட்டது? அடுத்த மாதம், அடுத்த மாதம் சம்பளம் வந்துவிடும் என ஒவ்வொரு மாதத்தையும் கடனில் ஓட்ட வேண்டியிருக்கும். மூன்றே மாதங்களில் சம்பள பாக்கியைவிட கடன் பெரிதாகிவிடும்.

மாத சம்பளத்தை வைத்து ‘கௌரவ’ வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்துக்கு கடன் மிகப்பெரிய அவமானம். இக்கட்டான வாழ்க்கைச்சூழலை கையாள்வதற்குக் கிடைக்கும் நம்பிக்கைகளைவிட, ஊதியம் இல்லாத சூழலில் நம் சமூகம் நமக்குத்தரும் அவநம்பிக்கைகள் அதிகம். அப்படியொரு சூழல்தான் மனஸ் சக்ரவர்த்தி என்ற ஊழியரின் குடும்பத்திலும் ஏற்பட்டிருக்கிறது. எளிதில் சமூக உணர்வுகளுக்கு ஆட்பட்டுவிடும் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் அடுத்த கட்ட செயல்பாடு தற்கொலையை நோக்கியதாகத்தான் இருக்கும். 45 வயதான சுஸ்மிதாவின் முடிவு நமக்குச் சொல்வதுவும் அதுதான். ஆனால், தன் தற்கொலைக்கு முக்கிய காரணமான அந்த கணம் பொருந்திய திருவாளர் கணவானை அவர் காட்டிக்கொடுத்திவிட்டார். இதோ பெருமையுடன் அவரைப் பற்றி சொல்லலாம். அவர்தான் வளங்கொழிக்கும் யுனைடெட் பீவரீஸ் குரூப்பின் தலைவரான விஜய் மல்லையா!

யுனைடட் பீவரீஸின் கீழ் யுனைடெட் பீவரீஸ் லிமிடெட், யுனைடெட் ஸ்பிரிட்ஸ், மேங்களூர் கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெட்டிலைசர்ஸ், யுபீ இன்ஜினீயரிங், யுபீ ஹோல்டிங்கஸ் லிமிட், கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றை எல்லாமே விஜய் மல்லையாவின் நிறுவனங்கள். கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸைத் தவிர எல்லாமே வளங்கொழிக்கும் நிறுவனங்கள்தான். இந்தியாவின் 40 சதவீகித மதுபான மார்க்கெட்டை வைத்திருக்கிறது யுபீ. மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளுக்கு 50 சதவீகித அளவிற்கு மதுபான வகைகளை ஏற்றுமதி செய்கிறது. உலக அளவில் பிரபல பிராண்ட் மது நிறுவனங்களை தேடித்தேடி வளைத்துப் போடுகிறது யுனைடட் பீவரீஸ். இந்தியாவின் விற்பனையாகும் பீரில் 60 சதவீகிதம் யுபீ லிமிடெட்டின் தயாரிப்புதான்.

இவ்வளவு லாபத்தில் கொழித்தாலும் மாடல்களுக்கும் நடிகைகளுக்கும் வாரி வழங்கும் விஜய் மல்லையாவுக்கு தனக்காக உழைத்த ஊழியர்களுக்கு சம்பளம் தர மனதில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாதது, அப்படியே ஊதியம் கொடுத்தாலும் உழைப்பை கடைசி துளி ரத்தம் உள்ளவரை உறிஞ்சுவது இதற்கிடையில் இந்திய கம்பெனி முதலாளிகளுக்கு மிகப்பெரிய முன்னுதாரதாரமாகி இருக்கிறது கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ். கம்பெனி நஷ்டத்தில் இயங்குகிறது என்கிற காரணம் காட்டி, பல மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளத்தை பாக்கி வைத்திருக்கிறார் மல்லையா. ஊடகங்களில் பலமுறை இந்த விஷயம் வெளிவந்திருக்கிறது, ஒரு வரிச் செய்தியாக. வரி பாக்கி வைத்திருப்பதால், கிங் ஃபிஷரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. ‘கணக்குகளை செயல்படுத்துங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தைத் தருகிறேன்’ என்று ரொம்பவும் நாசூக்கான பதிலையே கூறிக்கொண்டிருந்தார் மல்லையா. சம்பள பாக்கி பிரச்னையை எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை.

தங்களுடைய செல்லப் பிள்ளை, சினிமா ஸ்டார்களுக்கு இணையான பேஜ் 3 நாயகன் விஜய் மல்லையாவின் ‘ஏர்லைன்ஸ் கனவு சிதைந்து போயிடுச்சே’ என்றுதான் ஊடகங்கள் கவலைப்பட்டன.

(செய்திகளை அலசி ஆராய்வதில் முன்னோடி தொலைக்காட்சி நிறுவனமான என்டீடிவி, மல்லையாவுடன் சேர்ந்து குட் டைம்ஸ் என்ற சேனலை நடத்திவருகிறது. தன்னுடைய மது வகைகளை பிரபலப்படுத்த மல்லையா ஆரம்பித்த லைஃப் ஸ்டைல் சேனல் இது.) வங்கிகளிடம் வாங்கிய கடனை ஏப்பம் விட்டதுபோததென்று, விஜய் மல்லையாவுக்கு மேலும் கடன் தர வேண்டும் என்று அவை எழுதின. விஜய் மல்லையாவை நொடிந்துபோன பெரும்தனவானாக உருவகப்படுத்தி ‘அச்சச்சோ’ என்று உச்சுக்கொட்டியே பக்கங்களை எழுதித் தள்ளின.

முடியைத் திறந்துவிட்டதும் பொங்கும் பீர்போல யுனைடெட் பீவரீஸ் மூலம் மல்லையாவின் பணப்பெட்டி நிரம்பி வழிந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படி வழிந்து கொண்டிருக்கும் பணத்தின் ஒரு சிறு துளி போதும் இந்த ஊழியர்கள் குடும்பத்தின் பசியாற்றுவதற்கு.
கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸை ஆரம்பிப்பதற்கும் நடிகைகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதியை வாரி வழங்குவதற்கும் யுனைடெட் பீவரீஸ் நிறுவனத்தில் கிடைத்த அபரிமிதமான லாபம் தேவைப்பட்டது. ஆனால் கிங் ஃபிஷரின் நஷ்டத்தை ஈடுகட்ட அல்ல, ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கக்கூட பீர் விற்ற பணத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பது எந்த வகையான பிஸினஸ் மேனேஜ்மெண்ட்? இது சரியா என்று, கிங் ஃபிஷர் பீரை திறந்து வைத்துக்கொண்டு நீங்கள் யோசியுங்கள். அல்லது சிரிப்பு நடிகர் சந்தானம் போல ‘பீர் கூலீங்கா இல்லையே’ என டாஸ்மார்க் ஊழியரிடம் சண்டை இடுங்கள்.

நீங்கள் எதற்காக தங்கத்தை வாங்குகிறீர்கள்?

தங்கத்தின் மீது இந்தியர்களுக்கு இருக்கும் மோகம் அதீதமானது. இந்த அதீத மோகம்தான் சமீப வருடங்களில் ஆபத்தாகவும் மாறியிருக்கிறது. தினசரிகளைப் புரட்டினால் குறைந்தது ஒரு செய்தியாவது (பதிவு செய்யப்பட்டது, பதிவு செய்யப்படாதவை ஏராளமானவை) தங்கத்தை மையமாக வைத்து நடந்த குற்றமாக இருக்கும்.

நகைக்காக கழுத்து அறுத்துக் கொலை, ஓடும் பஸ்ஸில் நகை பறிப்பு, பூட்டியிருந்த வீட்டை உடைத்து கிலோ கணக்கில் தங்கம் கொள்ளை என குற்றங்களின் வகைகள் நீளும். இதில் கொள்ளையடிப்பவரோ, குற்றத்தை தடுக்க முடியாத அரசு காவல்துறையோ குற்றவாளிகள் அல்ல. அதீத மோகத்தில் தங்கத்தை வாங்கிக் குவிக்குப்பவர்கள்தான் குற்றவாளிகள்.

நீங்கள் எதற்காக தங்கத்தை வாங்குகிறீர்கள்? சில சுயபரிசோதனை கேள்விகள்…
1. லாபமான சேமிப்பு
நீங்கள் வாங்கியபோது ஒரு கிராம் தங்க ஆபரணத்தின் விலை ரூ. 2500 ஆக வைத்துக்கொள்ளுங்கள். வாங்கிய ஒரு மாதத்தில் விற்றால் உங்களுக்கு ரூ. 2400 கிடைப்பது கூட கஷ்டம்தான், ஆக.. உங்களுக்குத்தான் நட்டம்,. பதிளைந்து வருடத்துக்கு முன்பு கிராம் ரூ. 500க்கு வாங்கினேன். இப்போ ரூ. 2900 விற்கிறது என்று நீங்கள் பெருமை பேசினால் பணவீக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள். உண்மை உங்களுக்குப் புரியும்.
2. பெண்ணின் திருமணத்துக்காக சேமிக்கிறேன்
எதற்காக உங்கள் பெண் தங்கம் அணியவேண்டும்? ‘ஆத்திர அவசரத்துக்கு அவளுக்கு உதவுமே’ என்பது பெற்றோரின் வாதம். ஐயா, உங்கள் பெண் பிள்ளைகளை படிக்க வைத்து, சுயமாக சிந்திப்பதற்கும் கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பதற்கும் கற்றுக்கொடுங்கள். ஆத்திர அவசரத்துக்கு தங்க நகைகளை அடகு வைப்பதை அல்ல.
3. அந்தஸ்தின் அடையாளம்
தங்கத்தைப் போலவே, பளபளக்கும் தங்க முலாம் பூசி, தங்க கரைசலில் முக்கியெடுத்த ஆபரணங்கள் வகைவகையாக கடைகளில் கிடைக்கின்றன. அவற்றில் அசல் தங்க ஆபரணங்கள் போலவே நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை அணிந்தால் நீங்கள் ஏன் இதையெல்லாம் அணிந்திருக்கிறீர்கள் என்று யாரும் உளவு பார்த்து கண்டுபிடிக்கப்போவதில்லை. தங்க நகைகள் அணிந்தாலும் தங்க முலாம் பூசிய நகை அணிந்தாலும் ஒரேவிதமாகத்தான் மதிக்கப்படுவீர்கள். உங்கள் அந்த அந்தஸ்து உங்கள் செய்கைகளில் வெளிப்பட வேண்டும். நீங்கள் அணிந்து கொள்ளும் நகைகளில் அல்ல. நீங்கள் அணிந்துகொள்ளும் நகைகள் மூலமாக அந்தஸ்து வரும் என்றால், ஜாக்கிரதை நீங்கள் ஒரு கிராம் தங்கத்துக்காகக்கூட கொல்லப்படலாம்.
தங்கத்தை ஏன் வாங்குகிறீர்கள் என்பதற்கு மேலே சொல்லப்படும் காரணங்களை இந்தியர்கள் காலம்காலமாக சொல்லிவருகிறார்கள். இதற்கு பின்னே ஏராளமான விஷயங்கள் இருப்பதை நாம் ஆராய வேண்டியிருக்கிறது.
1. தங்கத்தைத் தவிர நமக்கு சேமிப்பு முறைகள் எதுவும் தெரியாது.
உண்மையிலும் உண்மை. பெரும்பாலான இந்தியர்களின் ஒரே முக்கிய சேமிப்பு தங்கம் வாங்குவது மட்டுமே. பொதுத்துறை வங்கிகளில் சேமிப்பதோ, அல்லது பொதுத்துறை வங்கிகளை பயன்படுத்திக்கொள்வதோ மூன்றில் இரண்டு பகுதி இந்திய மக்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. வங்கிகளின் கடுமையான நடைமுறைகள் ஒருபக்கம், இன்னொரு பக்கம் இன்றுவரை பணம் இருக்கும் நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்தின் பயன்பாட்டுக்கு மட்டுமே வங்கிகள் என்ற நிலை. ஏதோ ஒரு வங்கிக்குப் போய் சிடுமூஞ்சி வங்கி அதிகாரியின் கடுமையான பேச்சுக்களுக்கிடையே அவர்தரும் புரிந்துகொள்வதற்கு சிக்கலான படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து, அவர் வரச்சொன்ன ஒரு நாளில் மீண்டும் வந்து அவரைப் பார்த்து வங்கியின் கணக்குப் புத்தகத்தை வாங்கி, தொடர் வைப்பு கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்குள் நமக்கு ‘ச்சீ’ என்றாகிவிடும். இதைவிட, ‘வாங்க.. வாங்க’ என வாய்நிறைய சிரிப்போடு வரவேற்கும் நகைக்கடைக்காரர் எவ்வளவு உயர்வானவர்.

இப்போதெல்லாம் நம்ம ஃபேவரைட் ஸ்டார் சூர்யா, நேற்றைய ஃபேவரைட் மாதவன், கடந்த பத்தாண்டின் ஃபேவரைட் ஸ்டார் பிரபு என வீட்டுக்கே வந்து கைப்பிடித்து நகைக்கடைகளுக்கு அழைத்துச் செல்கிறார்களே… அப்போ தங்க நகை வாங்கித்தானே ஆகணும்.

இந்த அக்கப்போர்களையெல்லாம் பார்த்து ‘நாம் மட்டும் சளைத்தவர்களா என்ன?’ என்று பொதுமக்களுக்கு வங்கி பயன்பாட்டினை எளிமையாக்க வேண்டிய பணிகளை விட்டுவிட்டு தங்கக் கட்டிகளை கூவிக்கூவி விற்கின்றன வங்கிகள். அட்சய திருதியைக்கு தங்கத்தை விற்பதற்கு இவர்கள் செய்யும் விளம்பரச் செலவு, பொதுத்துறை வங்கிகளிடம் விஜய் மல்லையா வாங்கிய கடனைவிட அதிகமாக இருக்கக்கூடும்.
2. ஏறிக்கொண்டிருக்கும் தங்கத்தின் விலை
2000ம் ஆண்டுவரை மிதமான விலையில் (கிராம் ரூ 500க்கு) விற்றுக் கொண்டிருந்த தங்கம், பாய்ச்சலாக கிராம் 2900க்கு விற்க என்ன காரணம்? இந்த அதீத விலையேற்றம் இந்தியாவில் மட்டும்தான் என்கிறது ஒரு பொருளாதார ஆய்வு. ஆக இது இந்திய முதலாளிகளின் கொள்ளை வணிகம் என்பது தெளிவாகிறது. இதற்கு ஊழல் அரசுகள் உடந்தை.

மிஸ்டர் பொதுஜனத்துக்கு ஒரு கேள்வி…
நீங்கள் அணுஉலைக்கு எதிராக போராடியிருக்கிறீர்களா? அல்லது கருத்து சொல்லியிருக்கிறீர்களா? அல்லது அதுபற்றி ஏதாவது தெரியுமா?
மத்திய அரசு தங்கத்தின் இறக்குமதி வரியை அதிகரித்தபோது என்னமாக குரல் கொடுத்தீர்கள்., தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் ஏறினாலும் உங்கள் வீட்டில் அடுப்பு எரிவதில்லை. அது எப்படி வீதியில் இறங்கி போராடத்தொடங்கிவிடுகிறீர்கள்? பெட்ரோல் விலை ஏறினாலும்கூட நீங்கள் கவலைப்படுவதில்லை. இந்த போராட்ட குணத்தை உசிப்பிவிடுவது நகைக்கடைக்காரா? இல்லை நகைகளை உங்கள் வீட்டுக்கே வந்து விற்கும் ஃபேவரைட் ஸ்டார்களா?

மிஸ்டர் பொதுஜனம்,
அணுஉலை நாளை உங்கள் சந்ததியையே இல்லாமல் ஆக்கிவிடும். சொல்லுங்கள் நீங்கள் எதற்காக போராட போகிறீர்கள்? உங்கள் சந்ததிகளின் வாழ்வுக்காகவா, அல்லது நீங்கள் கழுத்தறுபட்டு சாவதற்காகவா? உங்கள் முடிவு உங்கள் கையில்.

தங்கம் பற்றிய என் பதிவுகள் தொடரும்.