ரஜினிக்கு விருது கொடுத்து பாஜக ஏன் குளிர்விக்கப்பார்க்கிறது?

கோவாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது தர இருப்பதாக அறிவித்துள்ளது மத்திய கலாச்சார துறை அமைச்சகம். இந்த அறிவிப்பு இரண்டு விதங்களில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

ரஜினிக்கு முன்பே திரைப்படங்களில் நடிக்க வந்தவர், நடிப்பில் அவரைவிடவும் திறனையாளரான கமல்ஹாசனுக்குத் தராமல், ரஜினிக்கு தருவதா என சினிமா ஆர்வலர்கள் ஒருபக்கம் விமர்சிக்கிறார்கள். ஆந்திர அரசு சமீபத்தில் கமலுக்கும் ரஜினிக்கும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கவுரவித்தது. இதில் கமலுக்கு முதல் ஆண்டும், ரஜினிக்கு அடுத்த ஆண்டும் விருதுகள் அளிக்கப்பட்டன என்பதை இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது. ஒரு மாநில அரசாங்கத்துக்கு உள்ள பொறுப்புக்கூட, மத்திய அரசாங்கத்துக்கு இல்லையா எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இன்னொரு பக்கம், அரசியல் தொடர்புடையது! சினிமா – கலை – அனுபவம் போன்றவற்றைக் கடந்து சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தப்போகும் ‘அரசியல்’ தொடர்பான சர்ச்சை அது. ரஜினிகாந்தை அரசியலில் இழுக்க கடந்த ஆறாண்டுகளாக படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது பாஜக தரப்பு. அவரை எப்படியெல்லாம் ‘குளிரிவிக்கலாம்’ என பாஜக தலைவர்கள் சதா யோசித்துக்கொண்டே இருக்கிறார்கள் போல. இந்த முயற்சிகளில் ஒரு பகுதியாகத்தான் இந்த விருது வழங்கப்படவிருக்கிறது என்பதே அரசியல் தரப்பிலிருந்து எழுந்திருக்கும் சர்ச்சை.

விருது அறிவிப்பு காலத்தை நோக்கும்போது, அரசியல் நோக்கங்கள் அதிகமாக உள்ளது தெளிவாகவே புலனாகிறது. ஜனவரியில் ரஜினிகாந்த் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்று வதந்திகள் கிளம்பிக்கொண்டிருக்கும் நிலையில், தனது நீண்ட நாள் நண்பரான ரஜினியை குளிர்விக்க, ‘நீங்க நம்ம ஆளுதான்’ என்பதை மறுபடியும் நினைவூட்ட இந்த விருதை பாஜக அரசாங்கம் அறிவித்திருக்கலாம்.

2014-ஆம் ஆண்டு இந்திய அரசியலில் எப்போதும் இல்லாத வகையில் ‘பிரதமர் வேட்பாளராக’ நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டார். அப்போதைய தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி, தனிப்பட்ட முறையில் ரஜினியை சந்தித்து ‘தங்களுடைய நட்பை’ தேர்தல் ஆதாயத்துக்காக வெளிப்படுத்தினார். வெளிப்படையாக மோடியை ஆதரிக்க விட்டாலும், (அப்போது ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) தேர்தல் நேரத்தில் இருவர் சந்திக்கொள்வது எதற்காக என்பதை ரஜினி அறியாமல் சந்தித்திருக்கமாட்டார். ஆகவே, அப்போதே பாஜகவின் ‘நெருங்கிய’ உறவாகிவிட்டார் ரஜினி.

நடிகர் கமல்ஹாசனின் ‘மைய அரசியலை’ யூகித்ததாலோ என்னவோ, அவரை அப்போதிலிருந்து தள்ளிவைத்து பார்த்தது பாஜக. ரஜினியின் ‘இந்துத்துவ ஆன்மீக ஈடுபாடு’ம் அவற்றை அவர் நடிக்கும் படங்களில் திணிப்பதும், மட்டுமல்லாமல் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ‘பார்ப்பன இந்து மத’த்தின் மேன்மைகளை எடுத்துச் சொல்வதும் பாஜகவினருக்கு நெருக்கத்தை உண்டாக்கிறது.

இப்போது அல்ல, நீண்ட காலமாகவே ரஜினி, இந்துத்துவ அரசியலுக்கு தோதான ஆளாகவே பாஜகவினரும் ஆர்.எஸ்.எஸ். சார்ந்த அமைப்பினரும் பார்த்து வந்துள்ளனர். ரஜினிக்கு பிரச்சினை வரும்போதெல்லாம் இந்து முன்னணி அவரை காத்து நின்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரும் சோ விட்ட அரசியல் பணியைத் தொடர்பவருமான குருமூர்த்தி ‘பாஜகவும் ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும்’ என ரஜினி உள்ள மேடையிலேயே இணைப்பு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

முழுக்க முழுக்க எதிர்ப்பு நிலையிலேயே தங்களை வைத்திருக்கும் தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடிக்க பாஜக பல வகையிலும் திட்டமிடுகிறது. சினிமா செல்வாக்குள்ள, தங்களுடைய ‘கொளுகை’களுக்கு ஒத்துப்போகும் ரஜினி போன்ற பிம்பத்தின் பின்னால் வளரலாம் என்பது அவர்களுடைய நீண்ட கால திட்டம்.

இதுபற்றி ரஜினியின் மனநிலை என்னவாக இருக்கிறது? நடிகர் ரஜினிகாந்த் தான் உண்டு, தன்னுடைய தொழில் உண்டு, தன்னுடைய ஆன்மீகம் உண்டு என வாழ நினைக்கும் மனிதர். அவருடைய ‘கொளுகை’கள் காவிமயமானவை; தமிழக மக்களின் எண்ணங்களுக்கு, வாழ்வியலுக்கு எதிரானவை. இதை அவர் உணர்ந்திருந்தாலும் தன்னுடைய சித்தாந்தத்திலிருந்து அவர் ஒருபோதும் கீழே இறங்கியதில்லை.

ஆனாலும், தமிழகத்தின் மத எதிர்ப்பு அரசியலை எதிர்கொள்ள அவருக்குப் போதிய மன தைரியம் இல்லை என்பதோடு அது வெற்றி பெறவும் செய்யாது என்பதை அறிந்திருக்கிறார். கால் நூற்றாண்டுகளுக்கும் மேல் ‘ஆன்மிக’ திணிப்புகளை தன் படங்களில் இலைமறை காயாக காட்டியபோதும், அவை எதுவும் தமிழகத்தின் இயல்புத்தன்மையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை.

திராவிட அரசியலின் பின்னணியில் அரசியலுக்கு வந்து வெற்றி கண்ட எம்.ஜி. ராமச்சந்திரன் போன்ற ஆளுமையாக ரஜினியால் ஒருபோதும் வரமுடியாது என்பதை அவரும் அறிந்தே இருக்கிறார். அவருடைய இத்தனை ஆண்டுகால தயக்கமே இதை உணர்த்தக்கூடியதுதான். ஆனால் பாஜகவுக்கு இது பொருட்டில்லை.

‘ராமர் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற ஒற்றை வரி பிரச்சாரத்தை முன்னிறுத்திய முப்பது ஆண்டுகளில் பாஜக அசுரத்தனமாக வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தையும் தங்களுடையதாக்க பாஜகவினர் திட்டமிட்டு செயல்பட்டிருக்கிறார்கள். இன்று சட்டம் – அரசியலமைப்பு – நீதிமன்றம் என அனைத்தையும் தலைகீழாக மாற்றும் அளவுக்கு அவர்களுடைய செல்வாக்கு வளர்ந்து நிற்கிறது.

ஒற்றை மதத்தை முன்னிறுத்திய பெரும்பான்மைவாத அரசாக அது விசுவரூபம் எடுத்துள்ளது. ரஜினி என்பது பாஜகவுக்கு ஒரு முகமதிப்பு மட்டுமே. பணபலத்தைப் பற்றியோ, ஆள் பலத்தைப் பற்றியோ ரஜினி கவலைகொள்ளத் தேவையில்லை; அதை பாஜக கவனித்துக்கொள்ளும். பாஜகவுக்குத் தேவை தங்களுடைய சித்தாந்தத்தைத் தாங்கிச் செல்லும் ஒரு முகம். அந்தப் பணிக்கு ரஜினி கச்சிதமாகப் பொருந்துவார் என அவர்கள் திடமாக நம்புகிறார்கள். அதற்காகத்தான் இத்தனை கவனிப்புகள்!

இந்தப் பின்னணி காரணங்களுக்கு தமிழக மக்கள் என்ன எதிர்வினையை செய்ய இருக்கிறார்கள்? ரஜினி – பாஜக கூட்டணியை மக்கள் ஏற்பார்களா? திராவிட பாரம்பரியத்தில் வந்த திமுக – அதிமுக கட்சிகள் முன்பு ரஜினி – பாஜக கூட்டணி வெல்லுமா? போன்ற கேள்விகளுக்கான விடையை எதிர்காலமே சொல்லும்.