தொடரும் ஊடகப் பெண்களின் அவலங்கள்!

ஊடகங்களில் பெண்கள் பணிபுரிவதற்கு இன்னமும் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது. பதவியின் பெயரால் ஊடகங்களில் கடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை வசதியாக ஊடகங்களே மறைத்துவிடுகின்றன. ‘நாமெல்லாம் ஒண்ணுதானே’ என்று எல்லோரும் சுற்றறிக்கை போட்டு செயல்படுவதுபோல ஒரு ஊடகத்தில் நடக்கும் குற்றம் இன்னொரு ஊடகத்தில் வெளிவருவதே இல்லை. பதவி சுகம் பார்த்த பெருச்சாளிகளுக்கு நம்மை கேள்வி கேட்க யாருமே இல்லை என்று தங்களுடைய அராஜகங்களைத் தொடர இதுவே மிகப்பெரும் துணையாக இருக்கிறது. நடக்காத விஷயத்துக்கெல்லாம் வாய்ப்பிளக்கும் மீடியாக்கள், வெளிவர வேண்டிய விஷயங்களில் வாயை பசை போட்டு இறுக பொத்திக் கொள்கின்றன. வாழ்க நான்காவது தூண்!

ஊடகங்களில் பெண்கள் எப்படியெல்லாம் பாலியல் ரீதியாகவும் வேலை ரீதியாகவும் சுரண்டப்படுகிறார்கள் என்பதைப் பற்றி ஐந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய பதிவு இது. இதில் எழுதியிருக்கும் விஷயங்கள் இப்போதும் பொருந்திப் போகின்றன. காலம், பெயர்கள் மட்டும் மாறியிருக்கலாம் சம்பவங்கள் என்னவோ ஒன்றுபோலத்தான். அதனால் மீள் பிரசுரம் செய்கிறேன்.

ஊடகப்பெண்களை சமையலறைக்கு துரத்தும் அராஜக ஆணாதிக்க கும்பல்!

சமீபத்தில் ஐந்தாண்டுகள் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவமுள்ள ஒரு பெண் பத்திரிகையாளர், தன்னுடைய பணியினை ராஜினாமா செய்யும் பொருட்டு மும்முரமாக இருந்தார். இன்னொரு நிறுவனத்திலிருந்து தற்சமயம் பணியாற்றிக்கொண்டிருந்த நிறுவனத்தில் சேர்ந்து மூன்று மாதங்களே கழிந்திருந்த நிலையில்,அவருடைய ராஜினாமா சக ஊழியர்கள் மத்தியில் துப்பறிவதற்கும் விவாதிப்பதற்கும் உரிய விஷயமாக இருந்தது.
“என்னுடைய வருங்கால கணவருக்கு நான் வேலைக்குப் போவது பிடிக்கவில்லை” என்று தன்னுடைய நிலையை அவர் கூறியபோது ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது என்னவோ உண்மைதான். அதற்கு பின்னணியில் இருக்கும் நிதர்சனத்தை உணர்ந்தபோது அவர் எடுத்த முடிவும் சரி என்று தோன்றியது. தீர்க்கமான சிந்தனையோடு செயல்பட்டவராக இல்லாதபோதும், நேர்மையானவராகவும் பணியில் அக்கறை காட்டுபவராகவும் இருந்த அவருடைய இருப்பு முக்கியமானதாகவே கருதமுடியும். அவர் பத்திரிகையாளராக தொடர்ந்து இயங்கியிருக்கும் வேளையில், காலம் அவரது சிந்தனையையும் செயலையும் கூர்த்தீட்டியிருக்கலாம்.
ஆனால் அவர் ஒரு பெண் என்பதாலேயே பணியிடங்களில் அவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களும் நிலை குலையச் செய்த கிசுகிசுக்களும் அவரை திருமணத்தின் பெயரில் பத்திரிகை துறையிலிருந்தே வெளியேறும் முடிவை நோக்கி தள்ளியிருக்கின்றன. இன்று அவர் பத்திரிகை துறையிலிருந்தே ஒதுங்கிப்போய் விட்டார். இது ஏதோ தனிப்பட்ட ஒருவரைச் சார்ந்த நிகழ்வாக நினைத்து ஒதுக்கிவிட முடியாது. கனவுகளோடும் நம்பிக்கையோடும் ஊடகத்துறைக்குள் காலடி எடுத்து வைக்கும் பல பெண்கள் அவநம்பிக்கையோடு வெளியேறியதன் பின்னணியை விவாதத்திற்கு உட்படுத்துவதும் பதிவு செய்வதும் உடனடியாக செய்தாக வேண்டிய பணியாகும். பத்திரிகையாளராக ஐந்தாண்டு கால அனுபவத்திலும் தமிழ் ஊடகங்களில் சகபணியாளர்கள் எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான அவதூறுகளை அத்துமீறல்களை எழுதுவது மற்ற எல்லாவற்றையும்விட அவசியமானதாகவே கருதுகிறேன்.

ஒரு பெண் பத்திரிகையாளர் மாற்றுச் சிந்தனையும் அரசியல் ரீதியிலான புரிதலும் உள்ளவராக இருந்தாலும் தமிழ் ஊடகங்களில் சமையல் குறிப்பு எழுதுவதற்கும் நடிகைகளின் ஆடை,அணிகலங்களை சிலாகிப்பதற்கும்தான் பணிக்கப்படுவார். அதிகபட்சமாக அரசியல்வாதிகளின் மனைவிகளை பேட்டி காணும் வாய்ப்பு கிட்டலாம்! பெண்ணின் பணிகளாக ஆணாதிக்கத்தால் உருவான இச்சமூகம் ஆண்டாண்டு காலமாக சொல்லிவரும் சமையல், வீட்டுப்பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றின் மெருகேற்றப்பட்ட வடிவங்கள் இவை. சமூகம் எப்படி இதையெல்லாம் மீறி வரக்கூடாது என்கிறதோ, அதையேதான் ஆணாதிக்க சிந்தனை பீடித்த ஊடகவாதிகளும் (அரசியல்-புலனாய்வு இதழ்களில் “பாதுகாப்பு” என்ற காரணம் காட்டி பெண்கள் அத்தகைய இதழ்களில் பணியாற்ற மறுக்கப்படுவதை இந்த பின்னணியில் வைத்துப்பார்க்க வேண்டும்) ஊடக பெண்களிடம் எதிர்ப்பார்க்கிறார்கள். இதை எதிர்க்கும் பெண் ஆசிரியர் குழுவால் திட்டமிட்டு ஒதுக்கப்படுவார். ஒருகட்டத்தில் மனஉளைச்சலுக்கு ஆளாகி பத்திரிகை துறையிலிருந்து ஒதுங்கிவிடுவார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் ஊட்டும்படியான மாற்றுச்சிந்தனையோடு ஒன்றிரண்டு கட்டுரைகளோடு காணாமல்போன பத்திரிகையாளர்கள் குடும்பம் என்னும் நான்கு சுவர்களுக்குள் முடங்கிப்போயிருப்பதை கண்கூடாகப்பார்க்க முடிகிறது.
இது ஒருபுறம் இருக்க சுயசிந்தனையும் ஊடகம் குறித்த புரிதலும் இல்லாத பெண்களுக்கு தமிழ் ஊடகங்களில் சிறப்பான வரவேற்பு கிடைப்பதையும் பார்க்க முடிகிறது. ஆண்களைப்போல சிந்திப்பதற்கும் ஆண்களின் ரசனைக்கேற்ப தங்களுடைய எழுத்தை வடிவமைத்துக்கொள்ளவும் இந்தப் பெண்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். சராசரி வாசகனும்கூட எழுதியவர் ஒருபால் விருப்பம் கொண்டவரோ என்று நினைக்கும் அளவுக்கு பெண் உடல் குறித்த கிளர்ச்சியூட்டும் வர்ணனைகள் வரும்படி அவர்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள். தமிழ் மாத,வார,நாளிதழ்களைப் படிக்கும் எவருக்கும் இந்த முரண்பாடு தெளிவாகவே புரியும்.
குடும்பம், அரசியல் உள்ளிட்ட சமூகத்தின் மற்ற தளங்களில் பெண் எப்படி, ஆணின் சிந்தனைகளை உள்வாங்கி அதை செயல்படுத்தும் கருவியாக இருக்கிறாளோ அதைப்போலவே ஊடகப்பெண்ணும் செயல்படுகிறாள். அவளை அப்படியே வைத்திருப்பதில்தான் ஆணாதிக்கத்தின் இடம் தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. இப்படி சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட பெண்களே பாலியல் ரீதியிலான சுரண்டலுக்கும் ஆளாகிறார்கள். அறிவையும் உணர்வையும் அடிப்படையாகக் கொண்ட பணியில் உடல் முன்னிறுத்தப்படுகிறது. வழமையாக பெண்ணின் உடல் முன்னிறுத்தப்படும்போது கட்டமைக்கப்படும் அதிகாரம் இங்கேயும் நிகழ்கிறது. உடல் அதிகாரத்தை கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் ஆணின் செயல்பாடு ஒரு பெண்ணோடு நின்று விடுவதில்லை. அது ஒரு தொடர்கதை.

குறுஞ்செய்தியோடு ஆரம்பிக்கும்,பிறகு உடல் சமிக்ஞைகள், இரட்டை பொருள்தரும் பேச்சு, தான் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்று அதிகாரத்தை காட்டுவது எதற்கும் வளையவில்லை எனில் பிரச்சினை ஆரம்பிக்கும். அடிமையைவிட கேவலமாக நடத்துவார்கள், அல்லது அலுவலக மேசையைப்போல அசையாத பொருளாக வைத்திருப்பார்கள். வளைந்து கொடுத்தால் பதவி உயர்வுகளும் இன்னபிற அங்கீகாரங்களும் தேடிவரும். அதிகாரத்தை கை கொண்டவனின் வழி இதுவெனில் இயலாமையில் துடித்துக்கொண்டிருக்கும் அவனுக்கு கீழ உள்ளவர்களின் பணி சுற்றி உள்ள பெண்கள் குறித்து அவதூறுகள் சொல்வதும் கிசுகிசுக்களை புனைவதும்தான். ஊடகங்களில் தங்களை ப்ரோ பெமினிஸ்டு(Pro-Femenist)களாக காட்டிக்கொள்ளும் பலரது முழு நேர பணியே இதுதான்.
இத்தகைய சுரண்டலையும் அவதூறுகளையும் சகிக்க முடியாத எந்த பெண்ணும், அவள் அறிவு ரீதியாக பலமானவளாக இருந்தபோதும் அவளது முடிவு ஊடகத்தை விட்டு ஒதுங்குவதாகத்தான் இருக்கும். ஒதுங்குதலும் ஒதுக்குதலும் இயல்பாக நடந்தேறியபின் ஆணாதிக்கம் எக்காளமிட்டுச் சிரிக்கும்!

தமிழகத்தில் 1500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள்

‘‘ஓவியங்கள்னு சொன்னாலே அது மேற்கத்திய பாணி ஓவியங்கள்தான் ஆயிடுச்சு. பல ஆயிரம் காலத்து பாரம்பர்யத்தை மறந்துட்டு அதைத்தான் நாமும் எந்த கேள்வியும் கேக்காம ஏத்துக்கிட்டிருக்கோம். இனி வரப்போற தலைமுறையாவது நம்மோட கலை பண்பாட்டை தெரிஞ்சிக்கணும்தான் நாங்க காடுகளையும் மலைகளையும் தேடி பயணப்பட்டுக்கொண்டிருக்கோம்’’ என்கிறார் பழங்கால பாறை ஓவிய கண்டுபிடிப்பாளரான காந்திராஜன்.

test 2
சென்னை எழும்பூர் அரசு கவின் கலை கல்லூரியில் பகுதி நேரமாக ஓவியக்கலையைச் சொல்லித்தரும் காந்திராஜனுக்கு பழங்கால ஓவிய மரபுகளைத் தேடி போவதுதான் முழுநேர வேலை. தன்னைப்போலவே ஆர்வமுள்ள முன்னாள், இன்னாள் கவின் கலை மாணவர்களுடன் சேர்ந்து மரமான கலைகளைத் தேடி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர் அப்படியொரு பயணத்தில் பொள்ளாச்சி ஆழியாறு அருகில் 1500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். வீடியோ இணைப்பு இங்கே

ஓவியங்களை பிரதியெடுக்கிறார் காந்திராஜன்

ஓவியங்களை பிரதியெடுக்கிறார் காந்திராஜன்

‘‘பழங்குடி இன குழந்தைகளுக்கு அடிப்படையான சில ஓவிய பயிற்சிகள் கொடுக்கிறதுக்காக நாங்க ஆழியாறு பக்கத்துல இருக்கிற சின்ன வாய்க்காமேடுங்கிற இடத்துக்குப் போயிருந்தோம். பயிற்சி வகுப்புகளுக்கு நடுவே பழங்கால ஓவிய மாதிரிகள் சிலதை காட்டி, இதுமாதிரியான ஓவியங்களை பார்த்திருக்கீங்களா?ன்னு கேட்டோம். அதுல ஒரு பொண்ணு அவங்க ஊர் காட்டுல ஏதோ ஒரு இடத்துல யானை மாதிரியான ஒரு மிருகத்தை வரைஞ்சிருக்கிறதை பார்த்ததா சொன்னாங்க. அப்புறம் அந்தப் பொண்ணோட ஊரான மாவடைப்புக்கு போய் விசாரிச்சி இந்த இடத்தை கண்டுபிடிச்சோம்.

ரொம்பவும் அடர்ந்த காட்டுப் பகுதியில இருக்கிற குன்று அது. அந்த குன்றை கொப்பத்து மலைன்னு சொல்றாங்க. சாதாரணமா கைக்கு எட்டின தூரம் மட்டும் வரையாம அந்த காலத்திலேயே சிரமப்பட்டு ஏணிமாதிரியான பொருளை பயன்படுத்தி வரைஞ்சிருக்காங்க. பொதுவா பழங்காலத்து ஓவியங்கள்ல வரையப்பட்ட வேட்டையாடற காட்சிகளைத்தான் இவங்களும் வரைஞ்சிருக்காங்க.

DSCN5337

ஒரு ஓவியத்துல மேய்ஞ்சுகிட்டிருக்கிற மாடுகளை புலி ஒண்ணு வேட்டையாட பார்த்துக்கிட்டிருக்கு, அதுக்கு கீழே ஒரு வட்டம், அதுக்குள்ள சில மனிதர்களையும் வட்டத்துக்கு வெளியே சில மனிதர்களையும் வரைஞ்சிருக்காங்க. தங்களோட சேர்ந்தவங்கன்னு காட்டறதுக்காக மனிதர்களை வட்டம் போட்டு காட்டியிருக்காங்க. இப்படி ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களை கவனிச்சு வரைந்தவர்கள் நிச்சயம் திறமைசாலிகளாகத்தான் இருப்பார்கள்.
ஆஸ்திரேலியாவுல இருக்கிற பழங்குடிகள் பாறைகள்ல வரைஞ்சிக்கிட்டிருந்த ஓவியங்களை துணிகள்ல வரைய ஆரம்பிச்சு தங்களோட பாரம்பரியத்தை காப்பாத்திட்டாங்க. ஆனா, நம்ம நாட்டுல அப்படிப்பட்ட மாற்றங்கள் ஏன் வரலைன்னு அக்கறை உள்ளவங்க யோசிக்கணும்!’’ என்கிறார் காந்திராஜன். இவர்கள் கண்டுபிடித்த சில இடங்களை தமிழக தொல்லியல் துறை பாதுகாக்க முனைந்துள்ளது.

 

 

சென்னை கிண்டி தேசிய பூங்காவில் மான்கள் கணக்கெடுப்பு – நீங்களும் பங்கேற்கலாம்!

சென்னையின் இதயப் பகுதியான கிண்டியில் அமைந்திருக்கிறது கிண்டி தேசிய பூங்கா. இங்கே புள்ளி மான்கள், வெளி மான்கள் அதிக அளவில் வசிக்கின்றன. மாநகரம், மெட்ரோ நகரமாகி காஞ்சிபுரம் வரை நீண்டுகொண்டே போகிற நிலையிலும் இந்த வன உயிரினங்களின் வாழ்விடத்தை அரசாங்கம் விட்டு வைத்திருப்பதே அரிதான விஷயம்தான்.

நகரத்துக்கு நடுவே அமைந்திருக்கும் தேசிய பூங்காக்களில் கிண்டி தேசிய பூங்கா முக்கியமான ஒன்று. இரண்டு வகையான மான்கள் தவிர, பல வகையான பறவைகளும் பூச்சியினங்கள், செடி, மர வகைகளும் இங்கே உள்ளன. இவற்றை கணக்கெடுக்கும் பணி வருகிற 2013 மார்ச் 10ம் தேதி(ஞாயிற்றுக் கிழமை) நடைபெற இருக்கிறது. காலை 6.30 மணி தொடங்கி, 9.30 மணிக்கு முடிந்துவிடும். இரண்டே மணி நேரம்தான். சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் தேசிய பூங்காவை பாதுகாக்க விரும்பும் சூழலியல் விரும்பிகள் அனைவரும் இதில் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புகிறவர்கள் சூழலியல் தன்னார்வ அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.

‘‘பணத்தாலும் பதவியாலும் கிடைக்காத திருப்தி எழுத்தில் கிடைக்கிறது’’ பெருமாள் முருகன்

DSCN8638நான் எழுத வந்தது எனக்கே வியப்பான விஷயமா இருக்கு. ரொம்ப குறைச்சலான நிலத்தை வச்சி விவசாயம் பார்த்த சிறு விவசாய குடும்பம் எங்களோடது. அந்த நிலத்துல வருசம் முழுக்க உழைச்சிக்கிட்டே இருந்தாதான்  சாப்பிட முடியும். மேட்டுக்காடுன்னு எங்க வட்டாரத்துல சொல்லக்கூடிய மேடும் பள்ளமுமாக, கரடுமுரடா இருந்த நிலம். அதுல விவசாயம் பார்க்கணும்னா இடைவிடாத உழைப்பைக் கொட்டித்தான் ஆகணும். படிப்பு வாசனையே இல்லாத குடும்பம். என் தலைமுறையில அண்ணன், தங்கைகள்எல்லாம் ஆறு, ஏழு வகுப்பிலேயே படிப்பை நிறுத்திட்டாங்க. நான்தான் எங்க குடும்பத்துல முதல்ல பத்தாவது பாஸாகி வரலாறு படைச்சவன். முதல் முதல்ல அரசு வேலைக்கு போனவனும் நான்தான்!

எங்க ஊரு பக்கமெல்லாம் விவசாயிகள் ஊருக்குள்ள வசிக்க மாட்டாங்க. அவங்கவங்க விவசாய நிலங்களுக்குள்ளேயே வீடு கட்டி குடியிருப்பாங்க. இதனால என் வயசு குழந்தைகளோட சேர்ந்து விளையாடவோ, பழகவோ வாய்ப்பு இல்லாம போயிடுச்சு. என்கூட பிறந்தவங்க ஒண்ணு என்னைவிட அஞ்சு வயசு அதிகமானவங்களாகவோ, இல்லைன்னா அஞ்சு, ஆறு வயசு குறைஞ்சவங்களாகவோ இருந்தாங்க. அதனால சின்ன வயசை தனிமையில கழிக்க வேண்டியதா போச்சு. மனுசனுக்கு பகிர்தல் என்பது அடிப்படையான விஷயம். அது எனக்கு இல்லாமலேயே போயிடுச்சு. சக மனுசங்களோட இந்த பகிர்தல் இல்லாததால யாரும் இல்லாதப்போ தன்னந்தனியா பேச ஆரம்பிச்சேன். நானே எனக்காக பாடிக்குவேன், பாராட்டிக்குவேன்.
நான் ஏழாவது படிச்சிட்டு இருந்தப்போ என்னோட தனிமைக்குள்ள வந்தது வானொலி. அதுவே எனக்கு மிகப்பெரிய உலகமா இருந்தது. அப்போ ஞாயிற்றுகிழமை காலை திருச்சி வானொலியில ‘மணிமலர்‘னு குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை ஒலிபரப்புவாங்க. அதுல பூனைக்குட்டி, நாய்க்குட்டின்னு அவங்களா ஒரு தலைப்பு கொடுத்து பாட்டு எழுத சொல்வாங்க. நானும் பாடல்கள் எழுதி அனுப்புவேன். அப்படி நான் அனுப்பினதுல நிறைய பாடல்கள் ஒலிபரப்பு ஆனது. என்னை வெளிப்படுத்திக்கறதுக்கு இதை ஒரு வாய்ப்பா நினைச்சேன்.
அப்புறம் சிறுபத்திரிகைகள், வார பத்திரிகைகள் அறிமுகமாச்சு. தனிமையில இருந்த எனக்கு பகிர்ந்துக்கணும்கிற ஆசை எப்போதும் இருந்துக்கிட்டிருந்தது. நான் நினைக்கிறதை பகிர்ந்துக்கணும். அந்த பகிர்தல் நண்பர்களோடவோ, உறவுகளோடவோ ஊர்க்காரர்களோடவோ ஒரு குறுகிய வட்டத்துல அடங்கிடாம, உலகத்துல இருக்கிற மற்றவர்களிடமும் அடுத்தடுத்து வர்ற தலைமுறைகளிடமும் போய் சேரணும்னு விரும்பினேன். அதற்காக நான் தேர்ந்தெடுத்த வடிவம்தான் எழுத்து.
ஸ்கூல் முடிச்சு, கல்லூரியில காலடி எடுத்து வைக்கிற வரைக்கும் நான் பாட புத்தகத்துல படிச்ச மரபுக் கவிதைகளை பின்பற்றி மரபுக் கவிதைகளைத்தான் எழுதினேன். புதுக்கவிதை, சிறுபத்திரிகை விசயங்கள் அறிமுகமான பிறகு அதுவரைக்கும் எழுதினதை மறுபரிசீலனை பண்ண முடிஞ்சது. என்னைச் சுத்தி நடக்கிறது, என் கிராமம், என் குடும்பம் சார்ந்த விசயங்கள், தமிழ் வாழ்க்கை சார்ந்த விசயங்களை எழுத ஆரம்பிச்சேன்.
முதல் நாவல் ‘ஏறுவெயில்’(மருதா வெளியீடு) வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டுவதற்காக விவசாய நிலத்தை விட்டுப்போன குடும்பங்கள் எப்படி வாழ்வியல் பாதிப்புக்குள்ளானதுங்கிறதுதான் கதை. என் சின்ன வயசுல இப்படியொரு நிகழ்வு எங்க ஊருல நடந்தது. அரசாங்கம் கொடுத்த சொற்ப பணத்தை வாங்கிக்கொண்டு பிழைப்புக்கான வழி தெரியாமல் சிதைவுக்குள்ளான குடும்பங்களில் எங்களுடைய குடும்பமும் ஒன்று. இந்த நாவல் எழுதி 15 வருடங்கள் ஆகிடுச்சு. ஆனா விவசாய நிலங்களைப் பிடிங்கிக்கொண்டு அந்த விவசாயிகளை விரட்டக்கூடிய நிலை இன்னைக்கும் இருந்துகிட்டு இருக்கு. அது தொடர்ந்து பேசக்கூடிய விசயமாகவும் இருக்கும்.
அதுக்குப்பிறகு, நாங்க நகரம் சார்ந்த வாழ்க்கைக்கு போயிட்போம். அப்பா ஒரு தியேட்டர்ல கடை வெச்சிருந்தார். அங்க பலவிதமான அனுபவங்கள். அந்த அனுபவங்களை ‘நிழல் முற்றம்’ (காலச்சுவடு) நாவல்ல பதிவு செய்தேன். தமிழ்ல திரைப்படத் துறை பற்றிய பதிவு இருக்கு. ஆனா திரைப்படங்களை சார்ந்து வாழக்கூடிய தியேட்டர்ல சோடா, மிக்சர் வித்து பிழைக்கிற விளிம்பு நிலை சிறுவர்களைப் பற்றிய பதிவுகள் இல்ல. அதைத்தான் ‘நிழல் முற்ற’த்துல சொன்னேன்.
அடுத்து வந்த ‘கூளமாதாரி’   ஆடு மேய்க்கிற சிறுவர்களிடையே ஜாதிங்கிற ஏற்றத்தாழ்வுகள் எப்படி வருதுங்கிற பற்றிய நாவல்.

எழுத்துங்கிற குறிப்பிட்ட ஒரு விசயத்தோட மட்டுமே நின்னுடறது கிடையாது. நான் இதுவரைக்கும் எழுதின நாலு  நாவல்லேயும் ஒவ்வொரு விதத்திலும் வித்தியாசமான பிரச்னைகள சொல்லியிருக்கேன்.
சமீபத்தில வந்த ‘கங்கணம்’ (அடையாளம்) திருமணத்தைப் பற்றி பல கேள்விகளை எழுப்புகிற நாவல். இந்த சமூகத்துல திருமணம்கிறது ஆணும் பெண்ணும் முடிவு பண்றதா இல்லை. பொருளாதாரம் போன்ற வேறு விஷயங்கள்தான் தீர்மானிக்குது. இதுல உள்ளோட்டமா பெண் சிசு கொலை பற்றிய பதிவை செஞ்சிருக்கேன். ஒரு குறிப்பிட்ட வருசத்துல ஒரு குறிப்பிட்ட சமூகத்துல பெண் சிசு கொலைகள் அதிகமா நடக்கும்போது. அதே சமயத்துல பிறக்கிற ஆண்கள் வளர்ந்து திருமணத்திற்கு நிற்கும்போது அந்த சமூகத்துல பெண்கள் இல்லாம போயிடறாங்க. இதையும் நான் சொல்லியிருக்கேன்.
நாம் வாழற சூழல்ல நம்மை பாதிக்கிறமாதிரி நடக்கிற செயல்களுக்கு நம்மால் உடனடியா எதிர்வினை செய்ய முடியறதில்லை. கையாளாகாத நிலைமைதான் இருக்கு. அந்த வகையில எழுத்தாளன் சமூக உணர்வோட செயல்பட முடியுது. அதுலேயும் சிலதை மட்டும் பேசலாம், செய்யலாம்,. எழுத்துல கொண்டுவரக்கூடாதுன்னு வரையறை வேற செய்யறாங்க. எழுத்துன்னா நீங்க நல்லது கெட்டதுன்னு எல்லாத்தையும் கொண்டுவரத்தான் வேணும்.

‘பீக்கதைகள்’ (அடையாளம்) சிறுகதை தொகுப்புல அப்படி மற்றவங்க பேச தயங்கின, புறக்கணிச்சதை நான் பேசியிருக்கேன்.  கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைன்னு பல வடிவங்கள்ல அதை வெளிப்படுத்தறேன்.
இதுல கவிதையை எனக்கு நெருக்கமான வடிவமா என்னோட அக விசயங்களை பேச பயன்படுத்திக்கறேன். எந்த வடிவமானாலும் சரி, ஒவ்வொரு வரி எழுதும்போதும் என்னை முழுமையா வெளிப்படுத்த முடியுமான்னு பார்க்கிறேன். எப்பவும் அதிருப்தி இருந்துகிட்டுதான் இருக்கு. ஆனாலும் எழுத்துங்கிறது எனக்கு மிகப் பெரிய வடிகாலா இருக்கு. பணத்தாலும் பதவிகளாலும் கிடைக்காத சந்தோசம் எனக்கு எழுத்துல கிடைக்குது. மனிதனுக்கு எதுல திருப்தியோ அதுல ஈடுபடறது நல்லது. அந்த வகையில சமூகத்துல வேற எந்த மனிதருக்கும் கிடைக்காத திருப்தி ஒரு எழுத்தாளரா எனக்கு கிடைச்சிருக்குன்னு நினைக்கிறேன்.
குங்குமத்தில் இலக்கிய ஆளுமைகளின் தன் அறிமுக தொடரான ‘நான்’ இல் பதிவுசெய்யப்பட்டது.

மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்காக ஒரு இதழ்!

பல மொழிகளில் இருக்கும் பேசப்பட்ட படைப்புகளை அந்த மொழிகளைத் தெரியாத மற்றவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அந்த வகையில் சமீப காலமாக மொழிபெயர்ப்பு இலக்கியம் என்ற புதிய கிளையே உருவாகி வளர்ந்து வருகிறது. இதில் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியாக மொழி பெயர்ப்பு இலக்கியத்துக்கென்றே பிரத்யேகமாக ‘திசையெட்டும்’ என்ற காலாண்டிதழை 2003 முதல் நடத்திவருகிறார் குறிஞ்சிவேலன். மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் இவர்.

குறிஞ்சிவேலன்

குறிஞ்சிவேலன்

‘‘மொழிபெயர்க்கறதோட நோக்கமே பல மொழிகள்ல இருக்கிற நல்ல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு அதன்மூலமா நம் படைப்புகள் செழுமையாகணும் என்பதற்காகத்தான். மலையாள, வங்க இலக்கியங்கள் இந்திய அளவில் பேசப்படுவதற்குக் காரணம், அவை மற்ற மொழிகள்ல அதிகமா மொழிபெயர்க்கப்படறதுதான். தமிழில் எவ்வளவோ உன்னதமான படைப்புகள் இருக்கு. ஆனா அவற்றை மொழிபெயர்க்கறதுக்கு யாரும் மெனக்கெடலை. இந்த நிலை மாறணுங்கிறதுக்காக ஒரு சின்ன அசைவா ‘திசையெட்டும்’ பத்திரிகையைத் தொடங்கினேன். திசையெட்டிலும் இருக்கிற பல மொழிகளைச் சேர்ந்த படைப்புகளை தமிழுக்கு கொண்டுவரணும். அது மூலமா தமிழில் இருக்க படைப்புகள் மற்ற மொழிகள்லேயும் மொழிபெயர்க்கப்படணும். அதுதான் பத்திரிகையோட நோக்கம். வட இந்திய மொழிகள், தென் இந்திய மொழிகள்னு கிட்டத்தட்ட 14 மொழிகள்ல இருக்கிற கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற படைப்புகளை மொழிபெயர்த்து இதழ்ல வெளியிடறோம். எல்லா மொழி இலக்கியங்களையும் அந்த மொழியில் இருந்தே நேரடியா தமிழுக்கு கொண்டு வர்றோம். படைப்போட தரம் குறையக்கூடாதுன்னு ஆங்கிலம் வழியா வர்ற மற்ற படைப்புகளை மொழிபெயர்ப்புகளை நாங்கள் வெளியிடறதில்லை. மைதிலி, அஸ்ஸாமி, மணிப்பூரி போன்ற அதிகம் மொழிபெயர்க்கப்படாத மொழிகளோட படைப்புகளை சிரத்தையோடு வெளியிடறோம். பொதுவா சிறுபத்திரிகைகளுக்கு நிறைய பொருளாதார சிக்கல் வரும். ஆனா, அந்த மாதிரி சிக்கல் எதுவும் இல்லாம தொடர்ந்து ‘திசையெட்டும்’ வந்துக்கிட்டிருக்கு.

எல்லாத்துக்கும் மேலே மொழிபெயர்ப்புக்குன்னு தனி இதழ் ஆரம்பிக்கணுங்கிறது என்னோட நாற்பது வருஷ கனவு. இந்திய அளவில் மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்காக வெளிவரும் ஒரே இதழ் திசையெட்டும்’’ என்கிற குறிஞ்சிவேலன், கால்நடை ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்தை வைத்துதான் இதழ் வெளியீட்டைத் தொடங்கியிருக்கிறார். இவருடைய இயற்பெயர் ஆ. செல்வராசு. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் குறிஞ்சிவேலன் என்கிற பெயரை புனைந்ததாக சொல்கிறார்.

‘‘எழுத்தாளர் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த ‘செம்மீன்’ நாவல்தான் நான் படித்த முதல் மொழிபெயர்ப்பு படைப்பு. அது எனக்குள்ள பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுக்குப்பிறகு நிறைய மொழிபெயர்ப்புகளை தேடி படிச்சேன். நேரடியா அந்த மொழிகள்லேயே படிச்சா இன்னும் நல்ல வாசிப்பு அனுபவம் கிடைக்கும்னு மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, வங்காளம் போன்ற மொழிகளை கத்துக்கிட்டேன். பெரும்பாலும் என்னுடைய மொழிபெயர்ப்புகளை மலையாளத்திலிருந்துதான் செய்திருக்கேன்.
நா. பார்த்தசாரதி வெளியிட்ட ‘தீபம்’ இதழ்ல என்னோட பல மொழிபெயர்ப்பு கட்டுரைகள், சிறுகதைகள் வெளிவந்திருக்கு. மலையாள எழுத்தாளர் ‘பொட்றேகாட்’ எழுதிய ‘விஷக்கன்னி’ நாவலை மொழிபெயர்த்ததற்குத்தான் எனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைச்சது. நனவோடை உத்தி, நாவடகம் (நாவலும் நாடகமும் சேர்ந்த வடிவம்), மேஜிக்கல் ரியலிசம்னு பல புதிய வடிவங்களை தமிழுக்கு ஆரம்ப காலத்திலேயே அறிமுகப்படுத்தியிருக்கேன்.’’ என்கிற குறிஞ்சிவேலன் 65 வயதிலேயும் தளராது மொழிபெயர்ப்புகளை செய்து கொண்டிருக்கிறார். ‘நல்லி திசையெட்டும்’ விருதுகள் மூலமாக வருடம்தோறும் சிறந்த மொழியாக்க படைப்பாளிகளுக்கு ரூ. ஒன்றரை லட்சம் அளவில் பல்வேறு பிரிவுகளில் விருது கொடுக்கிறார். இதுவரை 84 படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கி இருக்கிறோம் என்கிறார் குறிஞ்சிவேலன். ‘Tranfire‘ என்ற பெயரில் ஆங்கில மொழியாக்க காலாண்டிதழ் ஒன்றை 2011 ஆகஸ்டில் இருந்து வெளியிட்டு வருகிறார். ‘திசையெட்டும்’ தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் சிறந்த சிற்றிதழ் விருது பெற்றிருக்கிறது.