பெண்களும் சாதி உணர்வும்

FACES

டந்த பத்து ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன். இந்த ஆண்டுதான் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் விழாவை சென்னை எப்படி கொண்டாடுகிறது என்பதைக் காண முடிந்தது. சாதி வெறியின் அறுவறுப்பான கொண்டாட்டம்நீ முந்தி நான் முந்தி என ஓட்டுக் கட்சிகள் நடத்தும் ஆபாச கூத்துக்கள். முத்துராமலிங்க தேவரின் சிலை அமைக்கப்பட்டிருக்கும் நந்தனம் வழியே அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததால் இந்த கேவலங்களை நேரடியாக பார்க்க முடிந்தது.அப்பட்டமான சாதிவெறிக் கொண்டாட்டம்கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்த அந்த சிறுவர்களின் முகத்தில் அப்படியொரு வெறித்தனம்சாலையில் பிதுங்கி வழிந்த நெரிசலில் சிக்கிக்கொண்டிருந்த அரை மணி நேரத்தில் ஒரு பெண் சாதி குறித்து சொன்ன அந்த பெருமித வார்த்தைகள் நினைவில் வந்து வந்து போயின.

திருமணம் ஆகி, குழந்தைக்கு தாயாகியும் பத்தாண்டு காலம் காதலித்தவனை மறக்க முடியாமல் கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி எறிந்து காதலித்தவனுடன் வாழ முடிவெடுத்தவர் அந்தப் பெண். புரட்சிகரமான இந்த முடிவுக்கேற்றபடி சில மாதங்கள் காதலனுடன் வாழவும் செய்தவர். பெற்றோருக்கு விஷயம் தெரியவர காதலனை விட்டு கணவருடன் மீண்டும் இணைந்தவர். சமூகத்துக்காக கணவருடன் வசித்தாலும் இன்னமும் மனதளவில் அவர் காதலனுடன் வாழ்வதாகவே நினைக்கிறவர்.

எல்லாவற்றையும் உதறிவிட்டு ஏன் நீங்கள் விரும்பியவருடனேயே வாழக்கூடாது என கேட்டதற்கு அவர் சொன்ன பதில்..நாங்க தேவர் ஜாதிஅவர் வேற ஜாதிநாங்க எப்படி காலம் முழுசும் சேர்ந்து வாழ முடியும்?

தான் எப்படி வாழ வேண்டும் தீர்மானித்துக் கொண்ட அந்தப் பெண்ணின் முடிவு குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இங்கு விவாதத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டிய விருப்பப்பட்டவருடன் சேர்ந்து வாழ அந்தப் பெண் சொன்ன காரணத்தைத்தான். சமூகத்துக்கு தெரியாமல் தன் சாதி அல்லாத தான் விரும்பிய ஆணுடன் வாழ முற்பட்டவருக்கு, நாலு பேருக்கு தெரிய வரும் சூழல் வரும்போது தான் பிறந்த சாதி முக்கியமாகப் படுகிறது. பொதுவாக ஆண்கள்தான் சாதியை ஆணித்தரமாக கடைப்பிடிப்பவர்களாக கண்டிருக்கிறோம், ஆண்களுக்குத்தான் சாதீய உணர்வு அதிகம் எனவும் பேசுகிறோம். நிதர்சனத்தில் ஆண்களுக்கு இருக்கும் அதே அளவில் பெண்களுக்கும் சாதி உணர்வு,பெருமிதம் இருக்கிறது. குடும்பம் என்னும் அமைப்பின் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு சாதி கருத்தாக்கங்களை கொண்டு செல்வதில் பெண்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஆண் சட்டம் போடுபவனாக இருக்க, பெண் அதை செயலாற்றவும் கட்டிக்காப்பாற்றவும் செய்கிறார். பள்ளிக் காலங்களிலேயே சக தோழிகள் சாதி தொடர்புடைய விஷயங்களில் கவனமாக இருந்துவந்ததை அவதானித்திருக்கிறேன். என்ன சாதி என்பதைப் பொறுத்தே பேச்சும் பழக்கமும் இருக்கும். பொதுவெளியில் கிடைக்காத சுதந்திரம் பெண்களை சாதி உணர்வற்றவர்களாகக் காட்டிக்கொண்டிருக்கிறது. தன் சாதியைச் சேராதவர்கள் மீது நேரடியாக ஆண்களைப் போல வன்முறையை ஏவிவிடாதபோதும், சாதி தீயை அணைந்துவிடாமல் காப்பாற்றுவதை பெண்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். இது விரிவாகப் பதிவு செய்யப்பட வேண்டும். பெண்கள் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து பேசும்போது பெண்களுக்கும் சாதிக்குமான உறவு குறித்தும் பேச வேண்டும்

10 thoughts on “பெண்களும் சாதி உணர்வும்

  1. உண்மைதான். சிலர் சமயத்தை போல் ஜாதி மதம் இனம் என்று எதை எதையோ கட்டிப்பிடித்துக் கொண்டு மனிதத்தை கொன்று விடுகிறார்கள். பதிவுக்கு நன்றி நந்தினி. வாழ்க வளமுடன்.

  2. //புரட்சிகரமான இந்த முடிவுக்கேற்றபடி சில மாதங்கள் காதலனுடன் வாழவும் செய்தவர்.//

    இதுதானே தமிழ் கலாச்சாரம் பண்பாடு போன்ற போர்வைகளுக்குள் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன.

    பரதி “புதுமைப் பெண்” என்று கூறியதை இப்படி விளக்கம் கொள்கிறார்களோ?

    இவை, மாற்றம் காணாத மந்திரங்கள். அது இருக்கட்டும், உங்கள் எழுத்துக்கள் அருமை, பாராட்டுக்கள்.

  3. பெண்களுக்கு சாதி உணர்வு. இருக்கிறது. அவர்கள் ஆண்கள் கட்டமைத்த சாதி வலைக்குள் வாழ்வதால். ஆண்களை மீறி எதுவும் செய்ய முடியாது.

    தற்போது அச்சாதி உணர்வு பெருகக்காரணம் வாழ்க்கை வாய்ப்புகள். தம் குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் இருக்கும்.

    எனவே, பெண்களின் சாதியுணர்வுக்கு அவர்கள் காரணிகள் அல்ல.

    கட்டுரை இன்னும் ஆழமாக எழுதப்பட்டிருக்கலாம்.

    குறிப்பட்ட பெண் வேறுசாதி காதலனேடு வாழமுடியவில்லை. காரணம், பெண்ணின் காதலும் தாய்மை அவளுக்குச் சொந்தமல்ல. அவள் பிறந்த குலத்துக்குச் சொந்தம் என மதங்கள் மட்டுமல்ல. வாழ்க்கை பண்பாடும் சொல்லிவிட்டது. எனவே, குலத்தை வாழையடி வாழையாக தப்பாமல் கொண்டுசெல்ல வேண்டியதற்கு அவள் கருப்பை அவசியமாகிறது. அவள் ஒரு கருவி மட்டுமே.

    இங்கு பரவாயில்லை. வடநாட்டில், குறிப்பாக, ஹரியானாவில், பெண் காதலனோடு தன் பெற்றோராலோ அல்லது தனயன்மாராலோ சுட்டுக்கொல்லப்படுவாள். தற்போது, பல என்.ஜி.ஓக்கள் இந்நிகழ்வுகளை வெளிக்கு கொண்டுவந்தன. கொலைகாரர்களை அரசால் ஒன்னும் செய்யமுடியவில்லை. காவலர்கள் ‘இது அவர்கள் கலாச்சாரம்’ என அப்படியே பார்த்துக்கொண்டிருக்கிறது. சிதம்பரம் சட்டம் போட்டாலும் எங்களைத்தடுக்க முடியாது என கொக்கரிக்கிறார்கள்.

    என்ன செய்ய முடியும் தேவர் பெண்களால் தங்கள் தேவர் தகப்பன்மாரகளை எதிர்த்து!

    You are traveling in a blind alley. You will never reach the door.

    There is, however, a solution; but that is for you to explore. You may try.

  4. வேறொருவர் படத்தைப் போட்டால், ஓவியர் யார் எனபோடவேண்டும்.

    ஓவியம் நான் சொன்ன பெண்ணின் நிலையை அப்படியே காட்டுகிறது. ஓவியர் பொய் சொல்லவில்லை.

    ஒருவேளை நீங்கள் வரைந்ததோ?

  5. வணக்கம் நந்தினி

    நீங்கள் குறிப்பிட்ட \\சாதி தீயை அணைந்துவிடாமல் காப்பாற்றுவதை பெண்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள்.\\ மிகவும் சரி.

    இதற்கு சான்று உங்கள் பதிவிலேயே இருக்கின்றது
    அது \\குடும்பம் என்னும் அமைப்பின் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு சாதி கருத்தாக்கங்களை கொண்டு செல்வதில் பெண்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. \\

    இராஜராஜன்

  6. நண்பர்களின் பின்னூட்டங்களுக்கும் கருத்துகளுக்கும் நன்றி…

    //வேறொருவர் படத்தைப் போட்டால், ஓவியர் யார் எனபோடவேண்டும்//

    கள்ளபிரான் உங்கள் கேள்வியில் நியாயம் இருக்கிறது…
    ஓவியர் பெயர் போட வேண்டும் என்ற முனைப்பில் இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது இப்போதைக்கு சிறு குறிப்பாக பதிவு செய்யப்படவே எழுதப்பட்டது. பெண்களுக்கும் சாதிக்கும் உள்ள பிணைப்பு குறித்து விரிவாக எழுதும் எண்ணம் இருக்கிறது. அதற்கான விஷயங்களை தொகுத்துக் கொண்டிருக்கிறேன்.

    • ‘நந்தி’நீ… வணக்கம்.

      சமுதாய அக்கறையோடு எழுதியதாகத் தெரியவில்லை இந்தக்கட்டுரை. உங்கள் சுயநலம் தான் இதில் அப்பட்டமாகத் தெரிகிறது. சாலையில் செல்லும்போது உங்களுக்கு இடையூறு ஏற்பட்டதற்காகவே, தனிப்பட்ட சுயநலம் கருதி இப்படி பழித்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது.

      ஒரு நாள் இடையூறுக்காக இப்படி எழுதுயிருக்கிறீர்களே… குனிந்தால் மாநாடு, நிமிர்ந்தால் பாராட்டு விழா, நடந்தால் சாதனை விழா என இன்றைய ஆளும் வர்க்கம் தெருவிற்குத் தெரு விழா எடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தினம் தினம் மக்கள் போக்குவரத்து நெரிசலை சந்தித்தித்த படி தான் இருக்கிறார்கள்… (ஒருவேளை சமுதாயம் விடுத்து உங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பதால் அது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என நினைக்கிறேன். முடிந்தால் சமுதாய நோக்குள்ள எழுத்தாளர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்) அதைப்ப‌ற்றி உங்க‌ளால் ப‌கிர‌ங்க‌மாக‌ ப‌திவு செய்ய‌ முடியுமா?

      குறிப்பிட்டு தேவ‌ர் ச‌முதாய‌த்தை ம‌ட்டும் ப‌ழிப்ப‌து ஏன்? ம‌ற்ற‌ சாதிக்கார‌ர்க‌ள் மட்டும் விழா எடுப்பது உங்களுக்கு அறுவறுப்பாகத் தெரியவில்லையா? பெண்க‌ள் ரீதியிலான‌ உண‌ர்வுக‌ளை ம‌ட்டும் எழுதுங்க‌ள். அதில் சாதிச்சாய‌ம் கலந்து உங்கள் குப்பைக்கிறுக்க‌ல்க‌ளுக்கு த‌ங்க‌ முலாம் பூசி போதை ஏற்றிக்கொள்ள‌ முய‌லாதீர்க‌ள்… வீதிக‌ளில் ந‌ட‌க்கும் சாதிச் ச‌ண்டைக‌ளை வ‌லைப்ப‌திவ‌ர்க‌ளுக்கும் அறிமுக‌ம் செய்து வைக்கும் காரிய‌த்திற்கு வ‌ழிகோள்கிறீர்க‌ள் ந‌ந்தினி… எச்ச‌ரிக்கை….

  7. உங்களுடைய பின்னூட்டமே உங்களை யார் என்று அடையாளம் காட்டிவிட்டது நண்பரே. அதற்கு மேல் என்ன சொல்ல?

    //ந‌ந்தினி… எச்ச‌ரிக்கை….//

    உங்களைப் போன்ற சாதிவெறியுள்ளவர்களிடமிருந்து எச்சரிக்கை வரும் அளவுக்கு எழுதியிருக்கிறேன் என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன். 🙂

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.