மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்காக ஒரு இதழ்!

பல மொழிகளில் இருக்கும் பேசப்பட்ட படைப்புகளை அந்த மொழிகளைத் தெரியாத மற்றவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அந்த வகையில் சமீப காலமாக மொழிபெயர்ப்பு இலக்கியம் என்ற புதிய கிளையே உருவாகி வளர்ந்து வருகிறது. இதில் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியாக மொழி பெயர்ப்பு இலக்கியத்துக்கென்றே பிரத்யேகமாக ‘திசையெட்டும்’ என்ற காலாண்டிதழை 2003 முதல் நடத்திவருகிறார் குறிஞ்சிவேலன். மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் இவர்.

குறிஞ்சிவேலன்

குறிஞ்சிவேலன்

‘‘மொழிபெயர்க்கறதோட நோக்கமே பல மொழிகள்ல இருக்கிற நல்ல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு அதன்மூலமா நம் படைப்புகள் செழுமையாகணும் என்பதற்காகத்தான். மலையாள, வங்க இலக்கியங்கள் இந்திய அளவில் பேசப்படுவதற்குக் காரணம், அவை மற்ற மொழிகள்ல அதிகமா மொழிபெயர்க்கப்படறதுதான். தமிழில் எவ்வளவோ உன்னதமான படைப்புகள் இருக்கு. ஆனா அவற்றை மொழிபெயர்க்கறதுக்கு யாரும் மெனக்கெடலை. இந்த நிலை மாறணுங்கிறதுக்காக ஒரு சின்ன அசைவா ‘திசையெட்டும்’ பத்திரிகையைத் தொடங்கினேன். திசையெட்டிலும் இருக்கிற பல மொழிகளைச் சேர்ந்த படைப்புகளை தமிழுக்கு கொண்டுவரணும். அது மூலமா தமிழில் இருக்க படைப்புகள் மற்ற மொழிகள்லேயும் மொழிபெயர்க்கப்படணும். அதுதான் பத்திரிகையோட நோக்கம். வட இந்திய மொழிகள், தென் இந்திய மொழிகள்னு கிட்டத்தட்ட 14 மொழிகள்ல இருக்கிற கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற படைப்புகளை மொழிபெயர்த்து இதழ்ல வெளியிடறோம். எல்லா மொழி இலக்கியங்களையும் அந்த மொழியில் இருந்தே நேரடியா தமிழுக்கு கொண்டு வர்றோம். படைப்போட தரம் குறையக்கூடாதுன்னு ஆங்கிலம் வழியா வர்ற மற்ற படைப்புகளை மொழிபெயர்ப்புகளை நாங்கள் வெளியிடறதில்லை. மைதிலி, அஸ்ஸாமி, மணிப்பூரி போன்ற அதிகம் மொழிபெயர்க்கப்படாத மொழிகளோட படைப்புகளை சிரத்தையோடு வெளியிடறோம். பொதுவா சிறுபத்திரிகைகளுக்கு நிறைய பொருளாதார சிக்கல் வரும். ஆனா, அந்த மாதிரி சிக்கல் எதுவும் இல்லாம தொடர்ந்து ‘திசையெட்டும்’ வந்துக்கிட்டிருக்கு.

எல்லாத்துக்கும் மேலே மொழிபெயர்ப்புக்குன்னு தனி இதழ் ஆரம்பிக்கணுங்கிறது என்னோட நாற்பது வருஷ கனவு. இந்திய அளவில் மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்காக வெளிவரும் ஒரே இதழ் திசையெட்டும்’’ என்கிற குறிஞ்சிவேலன், கால்நடை ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்தை வைத்துதான் இதழ் வெளியீட்டைத் தொடங்கியிருக்கிறார். இவருடைய இயற்பெயர் ஆ. செல்வராசு. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் குறிஞ்சிவேலன் என்கிற பெயரை புனைந்ததாக சொல்கிறார்.

‘‘எழுத்தாளர் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த ‘செம்மீன்’ நாவல்தான் நான் படித்த முதல் மொழிபெயர்ப்பு படைப்பு. அது எனக்குள்ள பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுக்குப்பிறகு நிறைய மொழிபெயர்ப்புகளை தேடி படிச்சேன். நேரடியா அந்த மொழிகள்லேயே படிச்சா இன்னும் நல்ல வாசிப்பு அனுபவம் கிடைக்கும்னு மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, வங்காளம் போன்ற மொழிகளை கத்துக்கிட்டேன். பெரும்பாலும் என்னுடைய மொழிபெயர்ப்புகளை மலையாளத்திலிருந்துதான் செய்திருக்கேன்.
நா. பார்த்தசாரதி வெளியிட்ட ‘தீபம்’ இதழ்ல என்னோட பல மொழிபெயர்ப்பு கட்டுரைகள், சிறுகதைகள் வெளிவந்திருக்கு. மலையாள எழுத்தாளர் ‘பொட்றேகாட்’ எழுதிய ‘விஷக்கன்னி’ நாவலை மொழிபெயர்த்ததற்குத்தான் எனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைச்சது. நனவோடை உத்தி, நாவடகம் (நாவலும் நாடகமும் சேர்ந்த வடிவம்), மேஜிக்கல் ரியலிசம்னு பல புதிய வடிவங்களை தமிழுக்கு ஆரம்ப காலத்திலேயே அறிமுகப்படுத்தியிருக்கேன்.’’ என்கிற குறிஞ்சிவேலன் 65 வயதிலேயும் தளராது மொழிபெயர்ப்புகளை செய்து கொண்டிருக்கிறார். ‘நல்லி திசையெட்டும்’ விருதுகள் மூலமாக வருடம்தோறும் சிறந்த மொழியாக்க படைப்பாளிகளுக்கு ரூ. ஒன்றரை லட்சம் அளவில் பல்வேறு பிரிவுகளில் விருது கொடுக்கிறார். இதுவரை 84 படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கி இருக்கிறோம் என்கிறார் குறிஞ்சிவேலன். ‘Tranfire‘ என்ற பெயரில் ஆங்கில மொழியாக்க காலாண்டிதழ் ஒன்றை 2011 ஆகஸ்டில் இருந்து வெளியிட்டு வருகிறார். ‘திசையெட்டும்’ தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் சிறந்த சிற்றிதழ் விருது பெற்றிருக்கிறது.