வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா? பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி!

பரமார்த்த குரு கதை:முன்னோடி முயற்சியாகுமா? என்ற தலைப்பில் எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய கட்டுரையை அவருடைய வலைத்தளத்தில் படித்தேன். பெருமாள்முருகன் எழுதிய கட்டுரையை ஒட்டி சில விளக்கங்களையும் சில வினாக்களையும் முன்வைக்கிறேன். இந்தக் கட்டுரையின் ஊடாக வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் தமிழின் முன்னோடி முயற்சியில்லை என்று பெருமாள்முருகன் நிறுவ முயல்வது தெரிகிறது.

”வரலாற்றில் இவ்விதம் வைக்கப்படும் அளவுக்கான நூல்தானா அது?அப்படியானால் அது எங்கே கிடைக்கிறது? நூலகங்களில் பார்க்க முடியுமா?நூலில் மொத்தம் எத்தனை கதைகள் உள்ளன? பரமார்த்த குரு கதை என்னும் பெயரில் பாட நூல்களில் காணப்படும் கதைகள் வீரமா முனிவர் எழுதியவையா? நூல்களாக வெளியிடப்பட்டு இன்று புத்தகச் சந்தையில் கிடைப்பவை நம்பகமானவையா? இத்தகைய ஐயங்களுக்குப் பதில் சொல்வது என்பது வருத்தப்படுவதாகவே அமையும்.

  மூன்று நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட அந்நூலைப் பற்றி விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. இது தொடர்ந்து அச்சில் இல்லாமைக்கான காரணம் பற்றியும் ஆராய வேண்டும். சிறுவர் கதை நூலாக அதன் தளம் சுருங்கிவிட்ட வரலாறும் பேசப்பட வேண்டும். பரமார்த்த குரு கதை பற்றிய அடிப்படைத் தகவல்கள்கூடப் போதுமான அளவு இல்லை. இக்கதை தழுவல் என்றும் இலத்தீன் – தமிழ் அகராதியின் பின்னிணைப்பாக அவரால் வெளியிடப்பட்டது என்றும் 1728ஆம் ஆண்டு புதுச்சேரியில் அச்சிடப்பட்டது என்றும் கிடைக்கும் தகவல்கள் போதுமானவையாக இல்லை.” என்கிறார் பெருமாள்முருகன் அந்தக்கட்டுரையில்.
தமிழ் இலக்கியம் பயின்றவரான பெருமாள்முருகன், பரமார்த்த குரு கதைகளை முழுமையாக படிக்காமலேயே, இதுதான் பரமார்த்த குரு கதைகள் என்பதில்கூட அவருக்கு நிறைய சந்தேகம் இருக்கும் நிலையில் ஒரு கருத்தை நிறுவ முயல்வது எவ்வகையான ஆய்வுத்தன்மை என்கிற கேள்வி எழுகிறது.
paramartha guru kathaigal
1800களில் வெளியான பரமார்த்த குரு கதைகள் என்ற நூல் தமிழ் மரபு அறக்கட்டளையால் பாதுகாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய பெஞ்சமின் பபிங்டன் என்பவர் முன்னுரையுடன் இதை பதிப்பித்திருக்கிறார். பெஞ்சமின் குறுகிய காலமே அன்றைய மெட்ராஸ் ராஜதானியில் பணியாற்றியிருக்கிறார். பிறகு, இங்கிலாந்து சென்று மருத்துவம் பயின்றிருக்கிறார். இவர் இங்கிருந்த 1812லிருந்து 1830வரையான காலகட்டத்திலேயே இந்த நூல் வெளியாகியிருக்க வேண்டும் என்று அனுமானிக்கிறேன். இவர் இந்நூலுக்கு எழுதிய முன்னுரையை முக்கியமான ஆவணம் என்பேன். இதில் வீரமாமுனிவர் குறித்தும் பரமார்த்த குரு கதைகள் குறித்தும் இந்த கதைகள் எழுதப்பட்ட தமிழ்மொழி குறித்தும் எழுதியிருக்கிறார். இந்த நூலின் முகப்பில் இருக்கும் தமிழ் மொழியில் ஒரு கதை என்கிற வரிகள், இந்தக் கதைகள் பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதல்ல என்கிற கருத்துக்கு வலுசேர்க்கின்றன. இந்த நூலில் மொத்தம் எட்டுக் கதைகள் மட்டுமே உள்ளன. வீரமாமுனிவர் இவற்றை மட்டும் தான் எழுதினாரா, இன்னும் சிலவற்றையும் எழுதியிருக்கிறாரா என்பதில் மேற்கொண்டு ஆய்வுகள் தேவை. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது, பின்னாளில் வந்த கதைசொல்லிகள் வீரமாமுனிவரின் அடியொற்றி பரமார்த்த குரு கதைகளை விரிவாக்கியிருக்கிறார்கள். வீரமாமுனிவரின் மொத்த கதைகளும் கிடைக்கும்பட்சத்தில் இந்த மாதிரிகளை இனம்கண்டுவிடலாம்.
1720களில் எழுதப்பட்ட பரமார்த்த குரு கதைகள், கிட்டத்தட்ட 1820வரைக்கும்கூட பேசப்பட்ட படைப்பாக இருந்திருக்கிறது என்பதை பெஞ்சமினின் முன்னுரையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். கா.சிவத்தம்பியும் இரா.தண்டாயுதமும் சொன்னதுபோல இது தமிழ் படைப்பிலக்கியத்துக்கு அடிக்கல் இட்ட படைப்பாக இது இருப்பதற்கு சாத்தியப்பாடுகள் அதிகமாகவே உள்ளன. ஆகவே  பெருமாள்முருகனின் கருத்தை பரிசீலிக்க வேண்டியுள்ளது.

2 thoughts on “வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா? பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி!

  1. பரமார்த்த கதை, மற்றும் காகமும் நரியும் போன்ற கதைகள் Jean de La Fontaine எனும் பிரஞ்சுக் கவிஞர் எழுதியவை, இவை ஐரோப்பா எங்கும் புகழ் பெற்று மொழி பெயர்க்கப்பட்டது.இவை மாத்திரமல்ல மொத்தம் 240 கதைகள் எழுதியுள்ளார். இவற்றை FABLES DE JEAN DE LA FONTAINE என இங்கு கூறுவர். இவை வீரமாமுனிவரும் படித்துள்ளார்.அன்றைய காலக்கட்டத்தில் ஐரோப்பா எங்கும் படித்து, மிக புகழ் பெற்றுள்ளது. வீரமாமுனிவர் தமிழ்ப் புலமை பெற்ற போது தமிழகத்துக்கு தக்க வகையில் சிறுமாற்றம் செய்து வெளியிட்டதாக வாசித்துள்ளேன். மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது. ஐரோப்பாவில் காகத்தின் வாயில் இருந்தது, பாற்கட்டி (chesse); தமிழகத்தில் வடை. ஐரோப்பாவில் பாட்டியில்லை. தமிழகத்தில் பாட்டி மரத்தடியில் வடைசுட்டுள்ளார்.
    இப்படிப் பல.
    சமீபத்தில் இவை பற்றி விகடனில் எஸ்.ராமகிருஸ்ணனும் எழுதியதாக ஞாபகம்.
    இவை வீரமாமுனிவர் எழுதியவை அல்ல. தமிழகத்துக்குத் தக்க வகையில் சிறுமாற்றம் செய்து மொழிபெயர்த்ததே வீரமாமுனிவர் எனப் படித்துள்ளேன்.

  2. வீரமாமுனிவர் ஒரு கிருஸ்துவ பாதிரியாராக இருந்ததினால் இப்படியான ஆர் எஸ் எஸ் எண்ணங்கள் பலருக்கு வருவது இயற்கையே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.