தமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்?

metoo இயக்கத்தை பலரும் வெவ்வேறு விதமாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் எழுதும் பலரின் புரிதல் அதிகாரம் உள்ள ஆண், ஒரு பெண்ணை உடல்ரீதியாக துன்புறுத்துவது என்பதாக உள்ளது. இன்னும் சிலர் இதை ஆண்கள் பெண்களை வளைத்த கதையாக எழுதுகிறார்கள். பெயரை குறிப்பிடுதல் – அவமானப்படுத்துதல் என்பதைத் தாண்டியும் metoo இயக்கம், பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கான சம உரிமையை நிலை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். 2004-மே மாதம் முதல் ஊடகங்களில் பணியாற்றி வருகிறேன். உண்மையில் உடல்ரீதியிலான பாலியல் அத்துமீறல்களை எதையும் நானோ, என் உடன் பணியாற்றிய பெண்களோ எதிர்கொள்ளவில்லை. ஆனால், அதைவிட கொடுமையான மனரீதியான ஒடுக்குமுறைகளை நானும் உடன் பணியாற்றிய பெண்களும் எதிர்கொண்டிருக்கிறோம். இந்த ஒடுக்குமுறை சூழல் மாற வேண்டும் என்கிற சிந்தனையில்தான் தொடர்ந்து இதுகுறித்து எழுதிவருகிறேன். metoo இயக்கம் உருவாகும் முன்பே ஒடுக்குமுறைகளை சந்திக்கும்போதெல்லாம் துணிச்சலாக எழுதி வருகிறேன். அதற்கான விளைவுகளையும் சந்தித்து வருகிறேன். என்வழியாக ஊடகங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசி, தீர்வு காண முற்படுகிறேன்.

என்னுடைய அம்மா சத்துணவு மேற்பார்வையாளராக இருந்தவர்; அப்பா பேருந்து நடத்துனராக இருந்து, உடல்நிலை காரணமாக அந்த பணியை விட்டவர். என் அம்மாதான் குடும்பத்தின் ஆதாரம். விவசாய குடும்பப் பின்னணியில் பெண்ணை படிக்க வைப்பதில் எங்கள் உறவினர்கள் எவருக்கும் பிடிக்கவில்லை. என் அம்மா, என்னை கல்லூரிக்கு அனுப்புவதில் உறுதியாக இருந்தார். அம்மாவுக்கு என்னை ஆசிரியர் அல்லது ஏதேனும் அரசு வேலைக்கு அனுப்புவதில் விருப்பம் இருந்தது. எனக்கு சினிமா இயக்குநராக வேண்டும் என்கிற விருப்பம். ஒரு பெண் சினிமா துறையில் பணியாற்றப்போகிறேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. எனவே, விஸ்காம் படித்துவிட்டு விளம்பரம் அல்லது கிராபிக்ஸ் துறையில் பணியாற்றலாம் என அம்மாவை சமாதானம் செய்துவிட்டு சென்னை வந்தேன்.

முதல் இரண்டு ஆண்டுகள் ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். மூன்றாம் ஆண்டு வீட்டில் பொருளாதார நெருக்கடி. நீண்ட தூரம் பயணிக்க முடியவில்லை என்கிற காரணத்தால் சென்னையின் மையப்பகுதியில் இருந்து சோழிங்கநல்லூர் கல்லூரி ஹாஸ்டலில் தங்கியிருந்தார் சீனியர் அக்கா ஒருவர். அவர் மீண்டும் வீட்டிலிருந்தே கல்லூரிக்கு வரப்போவதாக சொன்னார், என்னையும் அவருடன் தங்கிக்கொள்ள அழைத்தார். என்னுடைய பொருளாதார சூழலை அறிந்த அவர், மூன்றாம் ஆண்டு படித்து முடிக்கும்வரை அவருடைய அறையில் என்னை அனுமதித்தார். அவருடைய வீட்டாரும் என்னை பெருந்தன்மையோடு அனுமதித்தனர்.

மூன்றாம் ஆண்டு இறுதி தேர்வு எழுதியதும் வேலைத் தேட ஆரம்பித்தேன். சினிமா உதவி இயக்குநராகும் முயற்சியும் செய்தேன். சினிமா துறையில் பெண்களுக்கு இருந்த பிரச்சினைகள் என்னை பயமுறுத்தின. எப்படி, யாரை அணுகுவது என்கிற தெளிவில்லாத பாதையாக அது எனக்குப் பட்டது. எனக்கு எழுத வரும், பத்திரிகை பணி செய்யலாம் என முடிவெடுத்தேன். நான்கைந்து பத்திரிகை அலுவலகங்களில் பயிற்சியாளர் வாய்ப்பு கேட்டு அலைந்தேன். பணிமுடித்தபின், அம்மாவிடமிருந்து நிச்சயம் எந்தவித பொருளாதார உதவியும் கேட்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அடுத்த மாத செலவுக்கு என்ன செய்ய என்கிற சூழலில், அண்ணாநகரில் ஒரு ஸ்டுடியோவில் வேலை கிடைத்தது. போட்டோஷாப் வேலை என்றுதான் விளம்பரத்தில் அழைத்திருந்தார்கள். ஆனால், நாள் முழுக்க ரிசப்ஷனில் நின்று வருகிறவர்களிடம் கேமராக்களை விற்பது, விளக்கம் சொல்வது என்றபடியாக அந்த வேலை போனது. அயற்சியான பணி. காலையில் சாப்பிட மாட்டேன். மதியம், இரவு மட்டும்தான் உணவு. எப்படி நாள் முழுக்க நின்றுகொண்டு வேலை பார்க்க முடியும்? எப்போது தப்புவோம் என இருந்தது. நல்லவேளையாக தினமணி நாளிதழில் இண்டன்ஷிப் கிடைத்தது. அப்போது அங்கு என்னைப் போல இண்டன்ஷிப் வந்திருந்த எழுத்தாளர் ஜா. தீபா, நான் தீவிரமாக வேலை தேடிக்கொண்டிருந்ததை அறிந்து குமுதம் சிநேகிதியில் பணி வாய்ப்பு இருப்பதை சொன்னார்.

குமுதல் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி, என்னுடைய எழுத்தைப் பார்த்து எனக்கு வாய்ப்புக்கொடுத்தார். அடுத்த மாதமே நான் பணிக்குச் சேர்ந்தேன். என்னைப் போல எளிய பின்னணியில் வந்தவர் அவர், என் ஆர்வத்தை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. என்னை ஊக்கப்படுத்தினார், வளர்த்தெடுத்தார். இரண்டு ஆண்டுகளில் உதவி ஆசிரியர் ஆனேன். பெண்கள் பத்திரிகை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காக ஒரு குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் பேசுகிறது. எனக்கு அதையும் கடந்து எழுதும் விருப்பமும் தேடலும் இருந்தது. அரசியல்-சமூகம் குறித்து எழுதுவதில் எப்போதும் தீவிரமான ஆர்வம் இருந்தது. ஆனால், வேறு வேலை தேடாமல் இந்தப் பணியை விட்டுவிட்டேன். பணி கிடைக்க ஐந்து மாதங்கள் ஆனாது.

‘குங்குமம்’ இதழில் நிருபராக பணியாற்ற கிடைத்த வாய்ப்பு என்னை பலவிதங்களிலும் மேம்படுத்தியது. சூழலியல், இலக்கியம், சமூகம் சார்ந்து எழுதினேன். வடதமிழகத்தின் பல பகுதிகளுக்கு பயணித்து கட்டுரைகள் எழுதினேன். அப்போது தினகரன் இணைப்பிதழின் ஆசிரியராக இருந்த கே. என். சிவராமன், என்னை ஊக்கப்படுத்தினார். என்னுடைய கட்டுரைகள் பார்த்துதான் ஆனந்த விகடன் இதழிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. முதலில் ஆனந்த விகடன் உதவி ஆசிரியர் பேசிவிட்டு, பிறகு ஆசிரியரிடம் பேசச் சொன்னார். ஆசிரியர், ‘நம்மைப் போல பிந்தங்கிய சூழலில் இருந்து வருகிறவர்கள் வெற்றி பெறுவது முக்கியம்’ என்கிற அர்த்தத்தில் பேசினார். அந்தப் பேச்சு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. அதோடு, ஆனந்த விகடன் இதழில் (உள்குத்துகளை தெரியாதவரை) பணியாற்ற யாருக்குத்தான் விருப்பம் இருக்காது?

தொடக்கத்தில் எல்லாமே மிகச் சிறப்பாகத்தான் இருந்தது. அரசியல் பேட்டிகள் எடுக்க எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள். இதற்காகத்தானே இத்தனை நாளும் காத்திருந்தோம் என விரும்பிச் செய்தேன். ஆனால் ஆனந்த விகடன் குழு ஒரு Boys’ club போலத்தான் செயல்பட்டது. எங்கள் குழுவில் மற்றொரு பெண் நிருபர் இருந்தார். அவர் பெரும்பாலும் வெளி அசைன்மெண்டுக்குச் சென்றுவிடுவார். மற்றவர்கள் இயல்பாக பேசமாட்டார்கள், அதிகார தொனியிலேயே நடந்துகொள்வார்கள். அவர்கள் அப்படி இருக்கவே ஆசிரியரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். ஆசிரியரின் அதிகாரத் தொனியை அலுவலகம் அறிந்தது. அரசனைப் போல அல்லது அதிகாரம் மிக்க குடும்பத்தலைவனைப் போல. தலைமையில் இருப்பவர் அதிகார தொனியில் இயங்கினால் எப்படி அங்கே இயல்பாக பணிபுரிய முடியும்? அருகில் இருந்தாலும்கூட நேரடியாக ஆசிரியர் பேசமாட்டார், உதவி ஆசிரியரை விட்டுத்தான் கேட்க வைப்பார். இதைத்தான் ஆண்-அதிகார திமிர் என்கிறார்கள்.

இந்த Boys’ club சொற்றொடருக்கு ஓர் உதாரண சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். நான் தமிழ் வழியில் படித்தவள். அப்போது ஆங்கிலத்தை ஓரளவில் புரிந்துகொள்ள முடியும். பேச வராது. ஆனாலும் பிரபல எழுத்தாளர்கள் அமிதவ் கோஷ், ஷோபா டே நேர்காணல்களை எடுத்தேன். இதுகுறித்து ஆசிரியர் குழுவில் இருந்தவர்களுக்கு பலத்த சந்தேகம். குறிப்பாக, மூத்த சினிமா நிருபருக்கு ஆங்கிலம் தெரியாத நான் எப்படி பேட்டியெடுத்திருக்க முடியும் என சந்தேகம். பல முறை கூடிப்பேசி சிரித்த பின், நேரடியாக என்னிடமே கேட்டார். அலுவலகத்தில் இருந்த நண்பரின் உதவியுடன் ஆங்கில கேள்விகளை தயாரித்து கேட்டேன், என்னுடைய பேட்டியை பதிவு செய்திருக்கிறேன், கேட்கிறீர்களா என்றவுடன் அமைதியானார். அந்த அலுவலகத்தில் தமிழ் வழியில் படித்து வந்தவர்கள் ஏராளமாக இருந்தார்கள். ஆனால், ஒரு பெண் தமிழ் வழியில் படித்து கொஞ்சம் அறிவுப்பூர்வமாக செயல்பட்டால் ஆண்கள் மனம் தாங்குவதில்லை.

ஆனந்த விகடன் இதழில் நான் மற்றொரு எதிர்கொண்ட பிரச்சினை. வேலை நேரம். ஆசிரியர் குழு நண்பகல் 12 மணிக்கு மேல்தான் பணியாற்றத் தொடங்கும். இரவு எட்டு மணிக்கு மேல் தான் இறுதிகட்டப் பணிகள் தொடங்கும். குமுதம் சிநேகிதி இதழில் இரவு 11 மணி மரைக்கும்கூட பணியாற்றிவிட்டு திரும்பியிருக்கிறேன். அது உதவி ஆசிரியரின் பணி தன்மை அப்படி. ஆனால், இங்கே நான் நிருபர். இதழ் முடிக்கும் நேரங்களில் காலையில் 9.30 மணிக்கு வந்து, இரவு 9, 10 மணி வரைக்கும் கட்டாயம் இருந்ததாக வேண்டிய நிர்பந்தம் இல்லை. ஆனால், நிர்பந்தித்தார்கள். ஆனந்த விகடன் இதழின் வடிவமைப்பு மாற்றப்பட்டபோது, இரவு முழுக்க அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழல். விடியகாலை 3 மணிக்கு எங்களுடைய கட்டுரை திருத்தம் செய்யப்பட்டு அச்சுக்கு போகும் அதுவரை அங்கேயே இருக்க வேண்டும். இடையில் நமக்கு வேறு எந்த வேலையும் இருக்காது. சும்மா உட்கார்ந்திருக்க வேண்டும். Boys’ club-க்கு மிகச் சிறந்த உதாரணம்.

இத்தகைய பணிச்சூழலுக்கிடையே தொடர்ந்தபோதும், என்னுடைய கட்டுரைகள் கவர் ஸ்டோரியாக வந்தபோதும் என்னுடைய ப்ரோபேஷன் காலம் நீட்டிக்கப்பட்டது. எனக்கு பணி நிரந்தரம் தரப்படவில்லை. சில வாரங்களில் என்னுடைய கட்டுரைகள் அச்சேறுவது குறைக்கப்பட்டது. இரவு 10 மணி வரை அலுவலகத்தில் இருந்து பணியாற்றியபோது, அடுத்த நாள் காலை அலுவலக நேரத்துக்கு சரியாக வந்துவிட வேண்டும் என்கிற கண்டிப்பு எனக்கு மட்டும் இருந்தது. ஒருவிதமான ஒதுக்கல் சூழல் ஆசிரியர் குழு மூலம் செய்யப்பட்டது. என்னுடைய ஒதுக்கலை தாங்க முடியாமல் வெடித்து அழும்போது, ஆறுதல் பார்வையைக்கூட அந்த ஆசிரியர் குழு பார்க்கவில்லை. அவர்கள் எப்போது தங்களை ஆண்களாகவே நினைத்தார்கள். அடுத்த சில நாட்களில் ஆசிரியர் என்னை பணியிலிருந்து நீக்கத் திட்டமிட்டிருப்பதும், அதற்கு நான் தனி தீவாக இருக்கிறேன் என்கிற காரணத்தை நிர்வாகத்திடம் சொன்னதும் தெரியவந்தது. அங்கேயே இருந்து போராடுவதெல்லாம் முடியாத காரியம். ஆண்-அதிகாரத்தை இயல்பாக கருதுகிற ஒரு பணிச்சூழலில் நிச்சயம் என்னால் பணியாற்ற முடியாது என்கிற தீர்மானத்துடன் நானே ராஜினாமா கடித்தத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பினேன்.

“நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள், நம்மைப் போன்ற முதல் தலைமுறையாக படித்து பணிபுரிய வருகிறவர்கள் வெற்றி பெற வேண்டும்” என சொன்ன அதே ஆசிரியர், என்னை ஒரே நாளில் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்தார். தனி தீவாக இயங்குவது என்பது என்ன பொருளில் சொல்லப்பட்டது எனத் தெரியவில்லை. பத்திரிகை துறைக்கு வந்திருக்கும் நான் எப்படி தனி தீவாக இயங்க முடியும்? வெளியூர்களுக்கு பயணித்து கட்டுரைகள் எழுதும் பெண், ரிசர்வ் டைப்-ஆக இருக்க முடியுமா? ஏற்கனவே இரண்டு இடங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ள பெண், தனி தீவாக எப்படி இயங்க முடியும்? யாருக்கு அட்டியூட் பிரச்சினை? எனக்கா ஆசிரியருக்கா? அல்லது ஆசிரியர் என்னிடம் எதிர்ப்பார்த்தது என்ன? சமீபத்தில் அந்த ஆசிரியர் பணியிலிருந்து விடுபட்டார். அவருக்கு பல பத்திரிகையாளர் சமூக ஊடகங்களில் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு நன்றி சொன்னார்கள். பல சினிமா பிரபலங்களை, எழுத்தாளர்களை, ஊடகவியலாளர்களை ‘தூக்கி’விட்ட அந்த ஆசிரியருக்கு ஏன் ஒரே ஒரு பெண்ணிடமிருந்துகூட இப்படியொரு நெகிழ்ச்சியான பதிவு வரவில்லை? இப்போது ஓய்வில் இருக்கும் ஆசிரியர் இதற்கான பதிலை அசை போடட்டும்.

இரண்டு மாத இடைவெளியில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் சிறப்பு நிருபர் பணிக்குச் சேர்ந்தேன். சிறப்பு நிருபர் என்றால், சிறப்பு செய்தி தொகுப்புகளை செய்வார்கள். ஆனால், பணியாற்றிய ஒரு வருடத்தில் ஒரு முறைகூட அந்த வேலை செய்யவில்லை. என்னுடைய பத்திரிகை அனுபவத்தில் மிக மிக கசப்பான அனுபவம் இங்கேதான் ஏற்பட்டது. சிறப்பு நிருபராக பணியில் சேர்க்கப்பட்ட நான், கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பணியே தரப்படாமல் உட்கார வைக்கப்பட்டேன். சும்மா உட்கார்ந்திருக்கிறோமே என்கிற ஆதங்கத்தில் நானாக ஏதேனும் செய்தி எழுதி கொண்டுபோனால் அந்த ஆசிரியர் அந்த தாளை வாங்கி ஓரமாக வைத்துவிடுவார். பிற சிறப்பு நிருபர்களுக்கு சிறப்பு செய்திகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுப்பேன். அதை ஆசிரியரும் பார்ப்பார். அது தொலைக்காட்சியிலும் வரும். ஆனால், எனக்கு அப்படியொரு வாய்ப்பு தரப்படாது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஸ்க்ராலிங் எழுத பணிக்கப்பட்டேன். அதுவும்கூட ஃபிளாஷ் நியூஸ் எழுத விடமாட்டார். அவர் எதையோ எதிர்பார்த்தார் என்று மட்டும் புரிந்தது. அவருடைய சமிக்ஞைகளை என்னால் புரிந்தகொள்ள முடியாதபடியால் என்னை எழுதவே வராத, தண்டச் சம்பளம் வாங்கும் பெண் என்பதைப்போலவே ஆசிரியர் அறையில் அவமானப்படுத்துவார். நான் எழுதிய கவர் ஸ்டோரி ஒன்று பெயர் போடாமல், ஆனந்தவிகடனில் பணியிலிருந்து விலகியபின் வெளியாகியிருந்தது. சிறுபிள்ளைத்தனமாக ஆசிரியரிடம் ‘சார், இந்த கட்டுரையை எழுதியது நான்” என காட்டினேன். திரும்பவும் என்னை எதற்கும் லாயக்கில்லாதவள் போலவே பார்த்தார். என்னுடைய கனவுகள் தேய்ந்து, எதற்கும் லாயக்கில்லாதவள் என்கிற எண்ணம் எனக்குள்ளே ஓட ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகால பத்திரிகை சூழலில் எனக்குக் கிடைத்த வாய்ப்பில் சிறப்பாகவே எழுதியிருக்கிறேன். ஆனால், இங்கே இப்படி இருக்கிறோமே என்கிற எண்ணம் என்னை அலைகழித்தது.

என்னைப்போல, அவருடைய விருப்பத்துக்கு இணங்காத பெண்களை அவர் இப்படித்தால் அலைகழிக்க வைத்தார். பணியிடங்களில் நான் பார்த்த செக்ஸிஸ்ட் ஆண்கள் மிக மோசமானவர் அவர். அங்கிருந்து விலகிய சில ஆண்டுகளில் அவர் மீது ஒரு பெண் செய்தி வாசிப்பாளர் பாலியல் புகார் கொடுத்தார். கைதாகி சிறை சென்ற அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து பணிக்கு அழைத்துக்கொண்டது சன் நிர்வாகம். metoo குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்களை பணிநீக்கம் செய்வதும் அவர்களுடம் பணிபுரிய மாட்டோம் என அறிவிப்பதும் உலகம் முழுக்க முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்ச்சூழலில் அதெல்லாம் நிகழ வாய்ப்பில்லை.

பெண்கள் படிக்கிறார்கள்; பணிபுரியும் கனவும் லட்சியமும் அவர்களிடம் இருக்கிறது. சிறு நகரங்களிலிருந்து கிராமங்களிலிருந்து பெருநகரை நோக்கி வருகிறார்கள். பெரும்பாலும் முதல் தலைமுறையாக முன்னேறி வருகிறது, பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள்…இவர்களை ஆணாதிக்க பணிச்சூழல் பெரும்பாலும் விழுங்கிவிடுகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வருகை பணிச்சூழலில் ஆணாதிக்க சூழலை தகர்த்திருந்தாலும் தமிழ் ஊடகங்களின் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. பின்புலத்துடன் இருக்கிறவர்கள் மட்டுமே ஊடகங்களில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்கிற சூழல் இருக்கிறது. பெண்களைப் பொறுத்தவரை திறமை என்பது இரண்டாம் பட்சமானது. பணியைப் பொறுத்தவரை 25 வயது வரைக்குமுள்ள பெண்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். தமிழ் ஊடகங்களில் பெண்கள் என சர்வே எடுத்தால் ஊடகங்களில் செக்ஸிஸ்ட் தன்மை வெட்ட வெளிச்சமாகத் தெரியும். வேளாண் பத்திரிகையில் பெண்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்காது. புலனாய்வு இதழ்களில் பணி வாய்ப்பு கிடைக்காது. ‘ஆண்பால்-பெண்பால்’ என தலைப்பிட்டு பெண் உரிமை பேசிய விகடன் குழுமத்தில்தான் இந்த நிலை. இன்னும் சொல்லப்போனால் விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் ‘அவள் விகடன்’ இதழின் ஆசிரியர் ‘ஸ்ரீ’ என்ற முகமூடியுடன் இயங்கும் ஒரு ஆண். இது எத்தனை பெரிய அயோக்கியத்தனம். விகடன் விருதுக்காக வாயைப் பிளக்கு எத்தனை பெண்ணுரிமை போராளிகள் இதைப் பற்றி கேள்வி எழுப்புவார்கள்?

ஆனந்த விகடன், சன் நியூஸ் தொலைக்காட்சியில் எனக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையிலிருந்து மீண்டு வர எனக்கு காலம் பிடித்தது. குங்குமம் இதழில் எழுதிய கட்டுரைகள் குறித்து இப்போதும் நினைவு கூரும் நண்பர்கள் இருக்கிறார்கள். முகம் தெரியாதபோதும்கூட நீங்கள் எழுதுங்கள் என வாய்ப்பு தருகிறவர்கள் இருக்கிறார்கள். அவநம்பிக்கைகளின் ஊடாக நம்பிக்கையை வெளிப்படுத்தியபடி எப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இது எத்தனை பெண்களுக்கு சாத்தியமாகக்கூடும். பணியிட ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய கனவுகள் நசுக்கப்படுவதை எப்படி தடுத்து நிறுத்துவது? பெண் என்பதாலேயே எங்களுக்கு எந்தவித லட்சியங்களும் இருக்கக்கூடாதா? இத்தகைய சூழலில் metoo இயக்கம் பாலின சமத்துவம் கோரலில் ஒரு புதிய உரையாடலை தொடங்கியிருக்கிறது. அதனால்தான் அதை நான் நிபந்தனை இல்லாமல் ஆதரிக்கிறேன்.

கருப்பு இணையதளத்தில் வெளியான எனது கட்டுரை.