பெண்ணியவாதிகள், பகத்சிங், கபீர் கலா மஞ்சில்…

இதுநாள்வரையில் எனக்குள் இருந்த பெண்கள் பற்றிய மிகை மதிப்பீடுகளை சமீப காலமாக உடைத்தெறிந்து வருகிறேன்.  இரும்பு பெண்களாகவும் பெண்ணியவாதிகளாகவும் அடைமொழிகளுக்குள் அடங்கிக் கொண்டிருந்தவர்களின் உண்மையான முகம் முதலாளித்துவத்தையும் சர்வாதிகாரத்தையும் ஒன்றாக கலந்தத் தன்மை  உடையது. இவர்கள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை… சீமாட்டிகளாகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பின்னணி கொண்டவர்களாகவும் இருப்பது.  சிந்தனையும் செயல்பாடும் அவரவர் வளர்ந்த வர்க்க பின்னணியுடன் பிணைக்கப்பட்டுள்ளது.  நிலப்புரத்துவ பின்னணியில் வளர்ந்த பெண்ணியவாதி, ஆணுக்கு நிகரான ஊதியத்தை பெண்ணுக்கும் நிர்ணயிப்பார் என எதிர்பார்க்க முடியாது(சொந்த அனுபவம்!). இப்போதெல்லாம் பெண்ணியவாதிகள் என்றாலே கையில் மதுக்கோப்பையும் சிகரெட்டும் ஏந்திய பெண்களே நினைவுக்கு வருகிறார்கள். இது பொதுபுத்தி அல்ல, மேட்டிக்குடி சிந்தனையாளர்களின்  பெண்ணியவாதிகள் பற்றிய கட்டமைப்பு இத்தகையதுதான். தீர்மானிப்பதற்குரிய அதிகாரம் தனக்கிருந்தும் சமத்துவத்தை விரும்பாத இத்தகையவர்கள் போற்றப்படுவதை ஆண்மைய சமூகம் விரும்புகிறது, அவர்கள் வரலாற்றில் போற்றப்படுகிறார்கள். இந்திரா காந்தி, மார்க்கெரட் தாச்சர், தெரஸா வகையறா முதல் ஜெயலலிதா போன்ற பெண்களை சில உதாரணங்களாகக் கொள்ளலாம். இவர்கள் மட்டுமல்ல அதிகாரத்தில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் இப்படித்தான்.

……………………………………………………………………………………….

பகத்சிங் ஆய்வாளர் Chaman Lal  பகத் சிங் உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவின் லெனினாக வந்திருப்பார் என்கிறார். லெனின், மாவோ, பிடல், சே குவேரா போல பகத் சிங்கும் மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் என்கிறார் லால். புதிய ஜனநாயகம் மே இதழில் இவருடைய நேர்காணல் இடம்பெற்றிருக்கிறது. படிக்க வேண்டிய ஒன்று. வினவு தளத்தில் புதிய ஜனநாயகம் இதழை டவுன்லோடு செய்து படிக்கலாம்.. http://www.vinavu.com/…/05/puthiya-jananayagam-may-20151.pdf

பேராசிரியர் சமன் லாலில் வலைத்தளத்தில் பகத் சிங்கிற்கு ஆதரவாக ஜின்னாவின் பேச்சு குறித்த கட்டுரை இன்று வாசித்ததில் முக்கியமான ஒன்று. சமன் லால் குறித்த தேடலில் இணையத்தில் கிடைத்த வலைத்தளம் கபீர் கலா மஞ்சில் . sheetal மகாராஷ்டிராத்தில் செயல்படும் மக்கள் கலைக் குழு இது. இந்த கலைக் குழுவைச் சேர்ந்த பல கவிஞர்கள், இசைக் கலைஞர்கள்  அரசின் தீவிரவாத ஒழிப்பு படையினரால் அரசியல் குற்றவாளிகளாக சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் மராத்தியில் பாடி சில பாடல் https://soundcloud.com/kractivist/devhar-bajula-sarle-poetகளின் மொழிபெயர்ப்பைப் படித்தேன். அந்த வரிகளில் சாதீய, சமூக விமர்சனங்கள் தவிர வேறொன்றும் இல்லை. கர சேவகர்களின் கை ஓங்கியிருக்கும் மகாராஷ்டிரா போன்ற மாநிலத்தில் சமூக விமர்சனங்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். அதனால்தான் மக்கள் கலைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்கூட நக்ஸலைட்டுகளாகத் தெரிகிறார்கள்.

இந்தக் குழுவைச் சேர்ந்த ஷீத்தல் தலித் படுகொலைகள், பெண்சிசுக் கொலை, சாதியம், விவசாயிகள் தற்கொலை குறித்தும் புலே, ஷானு, அம்பேத்கர் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்கிறார். இதற்காக இவர் கைதும் செய்யப்பட்டார். இவருக்கு தற்போது கிடைத்திருப்பது தலைமறைவு வாழ்க்கை!

மேற்சொன்ன அதே கருப் பொருட்களில் போலியாக சில பெண்கள் பேசியும் எழுதியும் வருகிறார்கள். அவர்களுக்கு ஆகச் சிறந்த அங்கீகாரம் கிடைக்கிறது எனில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சமூகம் கண்டுகொள்ளட்டும்!